காதல் கடிபயணம்
காதல் கடிபயணம்.....!
கொடிய மனிதங்கள் மாமிசத் தேடல்
நெடியாய் துளைக்கும் மக்கிய பதர்கள்
அடிமர இடுக்கில் அரவமாய் துரோகம்
அடியதிர்வில் சிலிர்த்து சாரையாய் சீறும்
பாவையின் விலாசமோ அறியாப் பலகாதம்
பாதைகாட்டும் நிலவிற்கோ நித்திய ஓய்வுதினம்
முடியாத எண்ணமாய் வனாந்திரப் பயணம்
கடிதான ஓடைசுமந்து முடிவோடு ஊர்ந்தாள்
உதிர்ந்த மலராய் உணர்வுகள் நெருட
உலர்ந்த சருகாய் அவன்தினைவுகள் வருட
கீறிய பாளையாய் இதயம் கசிந்தது
கதறியே ஜீவன் அவன்திசைத்தேடி அலைந்தது
இருண்ட இதயத்தில் நேசத்தின் தாகம்
வறண்ட நாநுனி நனையும் முன்னே
திரண்ட விசும்பும் கனன்று கலையும்
மருண்ட உயிரோ தேகத்தை பகைக்கும்
அசரீரியாய் ஆழ்மனம் அவன்வழி சொல்லும்
அனிச்சையாய் அணிப்பாதம் அவ்வழி செல்லும்
சாதலாள் நிலைக்கண்டு நெகிழ்ந்திடும் கல்லும்
காதல் வலிமை மதவேளத்தை வெல்லும்
தொடர்ந்தாள் தொடர்ந்தாள் தொலைதூரம் தொடர்ந்தாள்
கடந்தாள் கடந்தாள் பலகாதம் கடந்தாள்
காலம் கரைந்தது கடிபயணம் விரைந்தது
காதல்மகள் உறநெஞ்சம் காலனையும் உறைத்தது!
கவிதாயினி அமுதா பொற்கொடி