கைபேசி

கைபேசி
கைபேசியே!....
நாளும் மாறும்
உன் வதன வனப்பின்
மோகத்தில்
பெருந்தொகையாய் இருந்த
கையிருப்பு
குறுந்தொகையாய் போனதே!...

அன்று. . .
அந்தஸ்தின் அடையாளமாய்
இருந்த நீ...
இன்று. . .
அன்றாடங் காய்ச்சியையும்
அங்கிகரித்து விட்டாய்
உன் நண்பனாய்!. . .

அந்நிய கண்டத்தானும்
அண்டை வீட்டனாகி
இராப்பகல் பாராது
இடபேதம் அறியாது
வயதின் விகல்பம் கொள்ளாது
நோவறியா சேவகிபோல்
எல்லோர்க்கும் எல்லாமுமாய்
ஆனாய் நீ...

உனை மறந்து
எடுத்து வைக்கும்
காலின் ஓரடி கூட
உடுக்கை இழந்தானாய்
உணர்வு பொங்க
வெடுக்கென
விரைகிறதே உனை நோக்கி...

நிலை தடுமாறி
விழுவானும் கூட
எழும்முன்னே
உன்நிலை கண்டபின்னே
தன்நிலை உணர்கின்றான். . .

நீ கைபிடிக்குள்
அடங்கி இருந்தாலும்
அறிவு நுட்பத்தால்
அகிலத்தின் முடியே
உன்பிடியில். . .

நீரில் உனக்கு
கண்டமென
ஆருடம் கூறியதோ
துளி நீர் பட்டாலும்
துவள்கிறாயே . .

இனியும் உன் பிரிவு
இவ்வுலகிற்கு
சாதாரணமல்ல..
சதா. . ரணமே. . .
சு.உமாதேவி

எழுதியவர் : சு உமாதேவி (29-Apr-17, 4:26 pm)
Tanglish : kaipesi
பார்வை : 898

மேலே