ஒழைச்சவாளை நெனச்சுண்டாலே புண்யம்

அக்காலத்தில், ஶ்ரீமடத்து ஸிப்பந்திகளுக்கு ஸம்பளம்... மிக மிகக் குறைவு. பெரியவாளிடம் கொண்ட அதீத பக்தி, ப்ரேமை ஒன்றினாலேயே, ஸம்பளத்தைப் பற்றிக் கவலையே படாமல், தங்கள் பணிகளை பல பேர் தொடர்ந்து செய்து வந்தார்கள்.

எப்பேர்ப்பட்ட உயர்ந்த மனஸு?

அப்படி.... குருநாதரின் ஸேவைக்கென்றே, ஶ்ரீமடத்தில் ஸமையல் கைங்கர்யம் பண்ணிக் கொண்டிருந்தவர் ஶ்ரீ கணேஸய்யர்.

ஶ்ரீமடத்தின் கஷ்டநஷ்டம் , தெரிந்தோ அல்லது தெரியாமலோ... வருபவர்கள் அத்தனை பேருக்கும், அஸராமல், முகம் சுளிக்காமல் ஸமையல் பண்ணிப் பரிமாறியவர் இந்த கணேஸய்யர்.

அன்னதானத்துக்கே உயிரன்னம் அளித்த, ஶ்ரீ அன்னதான ஶிவனுடைய மஹாத்மியம் பின்னால் வரும்.

மாமாங்கத்தின் போது, அன்னதான ஶிவன் என்ற மஹாத்மா.... லக்ஷம் பேருக்கு மேல் போஜனம் செய்வித்தார் என்றால், கணேஸய்யர் ஶ்ரீமடத்துக்கு வரும் ஆயிரமாயிரம் பேருக்கு, தன்னுடைய சின்ன உதவியாளர் குழுவை வைத்துக் கொண்டு, 'குரு கைங்கர்யமாக', ஸமைத்துப் போட்டார்.

பெரியவாளின் அனுக்ரஹம் இவருக்கு பரிபூர்ணம்.

பின்னாளில் ஸ்ரீமடம், கும்பகோணத்திலிருந்து காஞ்சிபுரம் வந்ததும், ஒருநாள் பக்தர்களுக்கு தர்ஶனம் குடுத்துக் கொண்டிருந்தார் பெரியவா.

ஸுமார் 50-55 வயஸு மதிக்கத்தக்க ஒரு பக்தர் வந்து பெரியவாளை நமஸ்காரம் பண்ணினார்.

"பெரியவா..... என் பேரு நடேஶன்....! கும்பகோணத்ல..... மடத்துல ஸமையல் பண்ணிண்டிருந்தாரே... கணேஸய்யர்! அவரோட பிள்ளை..."

பெரியவா சற்று நிமிர்ந்து உட்கார்ந்தார்.

"நீ இப்போ..... என்ன பண்ற?.."

"ஸமையல்தான்....! வேற எந்தத் தொழிலையும் கத்துக்க அவகாஸமே கெடைக்கல...! கொழந்தேலேர்ந்தே கஷ்டஜீவனம்..."

"பின்ன.... ஏன் செலவு பண்ணிண்டு இவ்ளோவ் தூரம் வந்தே?.."

"பொண்ணுக்கு கல்யாணம் நிச்சியமாயிருக்கு... பெரியவாதான்... ஒத்தாஸை பண்ணணும்...."

பெரியவா கண்களை மூடிக் கொண்டார்.

பெரியவாளின் உள்ளத்தில், தான்.... குழந்தை ஸ்வாமியாக இருந்தபோது, கும்பகோணம் ஶ்ரீமடத்தில் இருந்த கணேஸய்யர், ஸாம்பார் வாளியோடு ஓடி ஓடி பரிமாறியது தெரிந்ததோ என்னவோ....!

பெரியவா எதுவும் பேசவில்லை.

பேசாமலேயே கருணையை வர்ஷிப்பதுதானே பகவானின் ஸ்வபாவம்?

அடுத்த சில நிமிஷங்களில், பெரியவாளுக்கு அன்றைக்கு பிக்ஷாவந்தனம் செய்வதற்காக மெட்ராஸில் இருந்து ஒரு பெரிய பணக்காரர், குடும்ப ஸஹிதம் வந்தார்.

"ஜகதீஶா!.... நா.... சொன்னாக் கேப்பியா?"

"உத்தரவிடுங்கோ....."

"ஒன்னோட பிக்ஷாவந்தனத்தை இன்னோர் நாளக்கி வெச்சுக்கலாம். இப்போ, இதோ நிக்கறார் பாரு, இவரோட பொண்ணு கல்யாணத்துக்கு, ஒன்னாலான ஒத்தாஸைய.... பண்ணேன்..."

"மஹா பாக்யம்...! மஹா பாக்யம் ...!"

ஶ்ரீ ஜகதீஶன் கன்னத்தில் போட்டுக் கொண்டார்.

நடேஶனை தனியாக அழைத்துச் சென்று, அவருடைய மேல் துண்டை பிரித்துக்கொள்ள சொல்லி, தன்னுடைய பர்ஸில் இருந்த நோட்டுக் கத்தைகளை அப்படியே கொட்டினார்!

"ஒரே ஒரு ரூவா மட்டும் வெச்சுக்கறேன்... ஸரியா?..."

அவருடைய மனைவி, தன் கையிலிருந்த ஒரு ஜோடி தங்க வளையல்களை கழட்டிக் கொடுத்தாள்.

நடேஶனுக்கு கண்கள் ஆறாகப் பெருக்கியது.

பெரியவாளுடைய ஆஶீர்வாதத்துடன், அவர் பெண்ணுக்கு, ஆவணியில் ஒரு குறையுமில்லாமல் கல்யாணம் நடந்தது.

தம்பதியாக பெரியவாளை வந்து நமஸ்காரம் பண்ணினார்கள்.

பிறகு ஐப்பஸி மாஸம், பெரியவாளை தர்ஶனம் பண்ண வந்தார் நடேஶன்.

இந்தத் தடவை எதுவுமே பேசாமல், கொஞ்சம் தள்ளி நின்றுகொண்டு, பெரியவாளின் திருமுகத்தை தர்ஶனம் பண்ணிக் கொண்டிருந்தார்.

வழக்கம் போல் நல்ல கூட்டம். பெரியவாளுக்கு ஸமர்ப்பித்திருந்த வேஷ்டி, புடவை, பூக்கள், பழங்கள் எல்லாம்.... பெரிய பெரிய மூங்கில் தட்டுகளில் இருந்தன.

பெரியவா பாரிஷதர் ஒருவரைக் கூப்பிட்டார்,.

"இந்த வேஷ்டி, பொடவை, பழம் எல்லாத்தையும் எடுத்து நடேஶன்ட்ட குடு..."

அதன் மேல் கை நிறைய குங்குமத்தை அள்ளிப் போட்டார்.

நடேஶன் கண்களில் கண்ணீர் வழிய ஓடி வந்து நமஸ்காரம் பண்ணி, வேஷ்டி, புடவையை வாங்கிக் கொண்டார்.

தாயினும் சாலப்பரிந்து என்பது இதானே!

"இரு! இரு! இன்னும் என்னோட அனுக்ரஹம் முடியல..." என்று சொல்லாமல் சொல்லுவதுபோல், பெரியவா இப்டீ.... தன் பார்வையை சுழல விட்டார்.

அவருடைய நயனங்கள்.... 'டக்'கென்று ஒருவர் மேல் 'ப்ரேக்' போட்டு நின்றது.

"நீ மோதரம் போட்டுண்டிருக்கியோ?..."

"ஆமா...."

"அதைக் கழட்டி இவனுக்கு குடேன்....!"

மோதிரம் நடேஶனுக்கு போனது.

அடுத்தது.... மோதிரக்காரர் பக்கத்தில் நின்று கொண்டிருந்தவர் மேல், பெரியவாளுடைய பார்வை பதிந்தது.

"ஒங்கைல கட்டிண்டிருக்கியே, அந்த ரிஸ்ட் வாட்ச்....! அத இவன்ட்ட குடுத்துட்டு, நீ வேற வாங்கிக்கோ!.."

ரிஸ்ட்வாட்ச் நடேஶன் கைக்குப் போனது.

இப்போது நடேஶனுக்கு ப்ரஸாதம் குடுத்து, ஆஶீர்வாதம் செய்து அனுப்பினார்.

கைகொள்ளாமல், மனஸு கொள்ளாமல், பெரியவாளுடைய அன்பையும் அனுக்ரஹத்தையும் வழிய வழிய சுமந்து கொண்டு நடேஶன் சென்றார்.

அவர் போனதும் கொஞ்சநேரம் அவரையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, அங்கிருந்தவர்களிடம் நடேஶனின் நிலையை எடுத்து சொன்னார்...

"இவனோட பொண்ணுக்கு தலைதீபாவளி ! பாவம்... கைல காஸு கெடையாது! இவனோட அப்பா... கணேஸய்யர்.... அந்தக் காலத்ல, நம்ம மடத்துக்கு ஏராளமா கைங்கர்யம் செஞ்சிருக்கார். ஹெட்குக்-ன்னா... மாஸ ஸம்பளமே மூணு ரூவாயோ, நாலு ரூவாயோதான்! ஒழைப்புன்னா ஒழைப்பு அப்டியொரு ஒழைப்பு!... காஸுக்காக இல்ல...! நம்ம ஆசார்யாளோட மடத்து மேல இருந்த பிடிப்புனால, இப்டி வாணாளையே [வாழ்நாள்] த்யாகம் பண்ணி, மடத்துக்கு ஒழைச்சவாளை நெனச்சுண்டாலே புண்யம் !..."

சுற்றி நின்றவர்கள் நெகிழ்ந்து போனார்கள்.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (30-Apr-17, 7:31 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 352

மேலே