பெண்களுக்கு தேவை தன்னம்பிக்கை

பூக்களை விஞ்சும் மென்மையானவள் பெண்மை...
பூக்களைப் போல இவளுக்கும் ஏழ்பருவங்கள்...
அரும்பில் குழந்தை அரவணைப்பில் மனைவி
பாசத்தில் அன்னையென்று பன்முகம் கொண்டவள்......
பள்ளியில் தொடங்கி பணியில் அமர்வதில்
பலவித கொடுமைகளைச் சந்திக்க நேரிடுகிறது...
தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் விழைகிறாள்...
சரித்திரம் படைக்கவும் அவள் முயல்கிறாள்......
தனது அறிவையும் உலக அறிவையும்
கற்றுணர்ந்த கல்வியால் அடைந்து விடுகிறாள்...
கற்றதன் விளைவால் பணியில் அமர்கிறாள்...
கற்றதைப் பயன்படுத்தி தன்நிலை உயர்கிறாள்......
பசுவைப் போன்ற குணம் உடையவள்...
பாசத்தில் அவளிடம் பஞ்சமே இல்லை...
வாசல்விட்டு வாசல்வந்து பாசம் வைத்தே
குடும்பத்தில் பதவி உயர்வு பெறுகிறாள்......
ஒவ்வொரு நிலையாய் உயர்ந்து வந்தவள்
ஒருசில இடத்தில் மறைமதியாய் வாழ்கிறாள்...
நெஞ்சில் துணிவு துளியும் இல்லாது
அஞ்சாது வாழ்வ தென்பது கடினம்......
தன்னுள் உள்ள வீரமும் செயலிழக்கும்
தன்மேல் நம்பிக்கை இல்லாத நேரத்தில்...
தன்னம்பிக்கை இல்லாது கொண்ட வீரம்
தலையில் வைத்து சுமக்கும் பாரமாகும்......
மலர்ந்திடும் மலர்களால் மரம் நிற்பதில்லை...
விளைந்திடும் காய்களால் விருட்சம் நிற்பதில்லை...
கனிந்திடும் பழங்களால் அவை நிற்பதில்லை...
புதைந்திருக்கும் வேர்களாலே பூமியில் நிற்கிறது......
கல்வி பாசம் வீரம் பணி
விருட்சம் தரும் கொடைகள் போன்றவை...
தன்னம்பிக்கையே பெண்மையை தலை நிமிர்த்தி
வீழ்ந்திடாது தாங்கி நிற்கும் வேர்களாகும்......
கல்வியறிவு இல்லாது உயர்ந்தவர்கள் உண்டு...
தன்னம்பிக்கை இல்லாது வாழ்ந்தவர்களே கிடையாது...
தன்னம்பிக்கை துடிக்கும் இதயம் போன்றது...
அதில்லாது வாழ்வது சிலையைப் போன்றது......
...கவியரங்க கவிதை...