வாடகைத்தாய்

நல்மழைத்துளி தாங்கும் சிப்பியைப் போல்,
நெல்விதையைத் தாங்கும் நல்வயல் போல்,
நானும் தாங்கி வளர்த்தேன் கருவொன்று!
நாளும் வளர்ந்து ஆனது என்உயிரென்று!

உயிரொடு உயிர் கலந்த கருவாசம்!
பயிரானது அதனுடன் இயைந்து தாய்ப்பாசம்!
நீரின் அசைவில் மண்ணெகிழும்-பனி
நீரில் சிசுவின் அசைவில் உயிர் நெகிழ்ந்தேன்!

முத்துதிர்ந்த சிப்பியோ,அறுத்தொழிந்த வயலோ!
பத்து மாதம் கழிந்தபின் என்னாவேன் நான்!
தொப்புள் கொடியுடன் பந்தமும் அறுமென
ஒப்பந்தம் செய்த வாடகைத்தாயாகிய நான்!

நீறுபூத்த நெருப்பென உள்ளுள் உறையும் பாசம்!
கீறுகின்ற நினைவுகளால் மனதுள் அனல்வீசும்!
கொள்ளியிட எனக்கு வேண்டாம் வேறு உறவு நேசம்!
உள்ளிருக்கும் பாசத்தீயில் இக்கட்டை வெந்து போகும்!

எழுதியவர் : (5-May-17, 9:50 pm)
பார்வை : 207

மேலே