இனியும் சொல்லக் காத்திருக்க வேண்டும்
இனியும் சொல்லக் காத்திருக்க வேண்டும் ...
=======================================
(பிரிவோம் சந்திப்போம்)
எங்க குடும்பம் ரொம்ப பெருசு, தாத்தாவுக்கு ரெண்டு சம்சாரம், அவர்களுக்குப் பிறந்தவங்க மொத்தம் பதினாலு பேரு, பெரியப்பா, அப்பா, சித்தப்பா இவங்க போக இவர்களுக்கு முன்னும் பின்னும் பிறந்தவங்க பதினோரு அத்தைகள், அவங்களுடைய மகன்கள் மகள்கள், இவர்களை கட்டிக்கொடுத்த இடம் பெண்ணெடுத்த இடம் ன்னு பார்த்தா நீலகிரியே எங்க சொந்தக்காரங்கதான்,
கோவையில் வீடும் சொத்தும் வாங்கியிருக்கேன், இப்போதான் ஒரு வீடு நானே பிளான் எஸ்டிமேட் போட்டு காட்டுறேன், வீட்டு வேலை முடிஞ்சது,
சொந்தங்களோடு சேந்து ஒரு விசேஷம் நடத்தி காலம் எத்தனையோ ஆச்சு,, மறுபடியும் நாங்கெல்லாம் மீண்டும் சந்திக்கப்போற விசேஷம் என்னோட வீடு கிரஹப்பிரவேசம் தான்,
ஒரு பதினஞ்சு வருஷத்துக்கு மேலே இருக்கும் நான் கல்லூரி படிச்சிக்கிட்டிருந்த சமயம் ஊருக்கு திருவிழான்னு போன சமயம், அப்போ எல்லாம் அத்தைகளில் சிலர் வரவில்லை அவங்க மக்களும்
சிலபேர் வரவில்லை, அவரவர்களுக்கு அவங்க அவங்க குடும்ப நிலமைகள் வீட்டு சமாச்சாரங்கள் என
கொஞ்சம் காலமா திருவிழாவையே மறந்திருப்பாங்க
அதுக்கும் ஒரு பத்துவருஷம் முன்னாடி திரும்பி பார்த்தோமானால், அத்தனை வகை ஆடைக்கலாச்சாரங்களுமாக, புத்தாடை சமையல் வாசனைகளாக, வீடே நிறைஞ்சிருக்கும்
ராத்திரி தூங்காமல் இருப்பது என்பது பண்டிகைக் காலங்களில் இரவு உறக்கம் காத்திருப்பது
ஒரு அலாதிதான் என்பேன்
அம்மாக்கள் அத்தைகள் என சமையல் கட்டிலும் வீடு முழுவதும் வேலையும் குப்பைகளுமாக இருப்பார்கள் , மாமாக்கள் அப்பாக்கள் என ஒரு பெரிய அறையில் சீட்டும் குடியும் களியு மாக
பேசிக்கொண்டிருப்பார்கள்,,, தாவணிப்போட்ட அத்தை மகள்கள் எல்லோரும் வாசலுக்கு முன்னாலிருக்கும் குழாயடியில் தண்ணி எடுக்க நிக்க,, ஊரில் வயசுப்பசங்க பட்டாளமே அங்கே படையெடுக்கும்,,
கவுனும், அரைக்கால் சட்டையும் முழுக்கால் சட்டையும் அணிந்த குழந்தைகள் எல்லோரும்
இரண்டு பிரிவாக பிரிந்துகொண்டு
"வருகிறோம் வருகிறோம் பூப்பறிக்க வருகிறோம்" என விளையாடியும், கண்ணாமூச்சி ஆடும்போது
யாரோ ஒருத்தருக்கு கண்களைக் கட்டிவிட்டு தட்டாமாலை சுற்றிவிட்டு ,, ஒளிய இடம் தேடுகையில்
பிடித்தமானவர்களோடு சேர்ந்தோடி இருட்டில் இணையாக ஒளியும் அந்த அற்ப நேர திளக்கம் என
அப்பப்பா என்ன ஒரு சந்தோஷ களேபரமாக எங்க பெரிய வீடு இருக்கும் ,,,
பண்டிகை முடிந்து ஒவ்வொருத்தராக விடைபெற்று :) போய் வருகிறோம் என சொல்லி ,,, அவர்களுக்கான பேருந்தில் ஏறி போகையில் ,, வீட்டிலுள்ள சந்தோஷங்களை கொஞ்சம் கொஞ்சமாக அள்ளி எடுத்துக்கொண்டு போகையில்,,, எஞ்சிய குப்பைகளும் அவர்கள் சூடிய பூக்கசங்கல்கள் போல
வாசமற்று போயிருக்கும் எங்க பெரிய வீடு,
இதில் சிலப்பேர் ,, இன்னும் ரெண்டு நாள் இருக்கலாம் பா மா ன்னு கெஞ்சிக்கேட்டும் அடம் பிடித்தும் கூட முடியாமல் நிர்பந்தமாய் இழுத்து போகும் காட்சிகளும் அழுகுரல்களும் இலைமறை போல ஓர்த்துப்பார்க்கிறேன்,, கடைசியாய் நான் மட்டும் அப்பா போர்டிங்கில் கொண்டு போய் விடும்வரை
அடுத்த பண்டிகை இனி எப்போப்பா ன்னு கேட்கும் போது,,அப்பாவுடைய சிரித்த மௌனம்,, இப்படி என
எல்லாம் கடந்து ,,,,
என் வீட்டு விசேஷத்தில் மீண்டும் இவர்களை காண இருக்கிறேன்,, எங்களுக்குள்ளான விளையாட்டுத்தனம், குரல்கள், நடைமுறைகள் என எல்லாம் மாறிப்போயிருக்கலாம், இன்று எங்கள் குழந்தைகளோடு அவர்களுடைய குழந்தைகள் சேர்ந்து விளையாடப்போகிறதை ,, இப்போதே நினைக்க ஆரம்பித்துவிட்டேன்
இதோ இப்போதே நவநீதாவிடம் புத்தாடைகளுக்கான அட்டவணையை கொடுத்தாகிவிட்டது, சமையலுக்கு மட்டும் ஆள் வருவாங்க (முன்பெப்போதும் இல்லாத வழக்கம் இது ,, இதற்கும் காலமே ஒரு காரணம் என்கிறேன்) சொல்லவேண்டிய ஊர் பெயரும் காலவரையும் இட்டாகிவிட்டது
நான் புறப்பட, என் பயணச்சீட்டு பதிவுறுதியாகிவிட்டது, இந்த இருபத்தைந்து நாட்கள் தான் வேகமாக கடக்கமாட்டேன் என்கின்றன
குட்டிக்குட்டி சண்டைகளுமாய் சந்தோஷங்களுமாய், விடை சொல்லாத காதல்களுமாய் பிரிந்து போனவர்களோடு ,, ஒருவரையொருவர் சந்திக்கச்செய்யும் இந்த நிகழ்வு ,, சுந்தர நெருடல்களைக் கொடுக்கும் என்று நம்புகிறேன், விரைகிறேன்,,, அதே கண்களும் அதே இழந்ததாய் நினைத்த பார்வைகளுமாய்,, சில கண்களையும் சில பார்வைகளையும் நேரிட விரைகிறேன்
அவர்களிடமும் அன்றெல்லாம் கூடி இன்னும் கூடாத நண்பர்களிடமும்
இனியும் சொல்லக் காத்திருக்க வேண்டும் ...
காணும்போது நீ முன்னேயா நான் முன்னேயா என சில பழங்கதைகளை ,,
nerudal
நிறைய படித்துவிட்டவன், உலகம் சுற்றியவன், என்னும் போர்வையை அகற்றிவைக்கும் அவ்விடத்தில்
அதே ஆறு வயசு சிறுவனாகி,,,
அன்று கசங்கிய எல்லாப்பூக்களின் வாசனைகளும் மீண்டும் உயிர்ப்பெரும் தருணங்களோடு
இறந்தும் இல்லாதேயும் போனவர்களைத்தவிர,
நானும் அக்காவும் ,, இனியொரு சந்திப்பும் இனியொரு பிரிவும் என ... இம்முறையாவது
எங்கள் கண்ணீர்த்துளிகள் பூக்களாகி நிலம் வீழுமா, மீண்டும் அந்த பட்டாம்பூச்சிகள் தோள் சேருமா,மீண்டும் அந்த அத்திமர ஊஞ்ச கயிறோடு எங்கள் கரங்கள் இணை சேருமா, :) ம்ம்ம் தெரியவில்லை
"பூக்காரன் கவிதைகள்"