கவியரங்கம் --- ௨ --

தேமதுரத் தமிழோசை --- கவியரங்கம்


தமிழ் வணக்கம் :-

தமிழுக்கு வணக்கத்தைத் தாய்மொழியில் சொல்ல
அமிழ்தமாய்த் தித்திக்கும் அன்பு .


தலைமை வணக்கம் :-

தலைமை வணக்கம் தரணி ஆள
கலைகள் சிறந்தவராம் கண் .

சபை வணக்கம் :-

கவியரங்கம் கருத்தோங்க கவிஞர்கள் ஒன்றுகூடப்
புவிதனிலே புன்னகையும் பூத்திடவும் சபைதனிலே
கவிபடைக்க வந்துள்ளோம் காலத்தால் அழிவில்லாச்
செவிதனிலே இன்பமாகச் செந்தமிழும் பாய்ந்திடவே !


தேமதுரத் தமிழோசை --- தலைப்பு


முத்தமிழாம் எங்கட்கு முக்கனியைப் போலவே
எத்திசையில் கேட்டாலும் இன்பமாய்த்-- தித்திக்கும்
உள்ளுசுவை இன்பம் உணரச் சுவைதரும்
தெள்ளுதமிழ்ச் செந்தமிழ்த் தேன்.


தமிழ்மொழி சுகம்தரும் தனிநிகர் மொழியினால்
அமிழ்தமும் திகட்டும் அற்புதம் தரவே
செந்தமிழ் நிதமும் செம்மையாய்ப் பயிலச்
சிந்தையில் சிறப்பைக் காண
என்றன் நெஞ்சம் நாடுதல் தமிழே !!!!


தாய்மொழி நன்றாம் பேசுதல் கேட்டல்
----- தமிழ்மொழி சுகந்தரும் காண்க !
வாய்ப்பது வந்த போதினில் தோழா
----- வகையுற மொழியினைப் பேசு !
நோய்விழும் நேரம் நோக்கினும் மருந்தாம்
------ நோய்பிடி அகலுமே நம்பு !
காய்ந்ததோர் நெஞ்சம் கருவறை என்றே
----- காவியம் படைத்திடும் தமிழே !

நனிபல சீர்மிகு நற்றமிழ் கற்க
கனிபோல் இனித்திடும் காசினி உய்யும் .
உலகில் தனித்தமிழ் நிலைக்கும் .
பதமுடைச் சொற்கள் பாய்ந்திடும்
செவிகளில் தேமதுரத் தமிழோசை ஓங்கிடும் !!!


வீசுகின்ற காற்றினிலே
வீழ்கின்ற அருவியிலே
மாசற்ற அன்பினிலே
மங்காத சுவையுடனே
புள்ளினங்கள் இசை பாட
புவிமகளும் சேர்ந்தாட எங்கும்
மலர்வனங்கள் பேசிடவும்
மணமெங்கும் கமழ்கின்ற
காதல்மொழி கண்பேசக்
கன்னித்தமிழ் தேனாகித்
தேமதுரத் தமிழோசைப்
பாய்கின்றது காதினிலே !!!!


செந்தமிழ் வாழவே செப்பிடு மானிடா
பைந்தமிழ்ப் போற்றிப் பசுமையான கீதமே
தீந்தமிழ்ச் சொற்களால் தீண்டிட வேண்டுமாய்
தெள்ளுதமிழ்ப் பேசினால் தெம்பு .


வாழிய செந்தமிழ் வாழியவே எந்நாளும்
நாழிகை தோறுமாய் நம்முன்னே நிற்கவே
ஊழியம் செய்வோம் உவந்து மகிழவே
ஆழியாய் மாந்துக அன்பு .


நனிபல சீர்மிகு நற்றமிழ் கற்போம்
பனியென வந்திடும் பாவங்கள் நீங்க
தனித்தமிழ் வேண்டியே தாபிப்போம் நாளும்
இனியாவும் நன்மையே ஈங்கு .


சங்குகொண்டே ஓதுவோம் சந்ததி மேம்பட
பங்கிடவே உண்டோ பரவச செந்தமிழை
மங்காது வாழ்ந்திடுமாம் மாசற்றப் பைந்தமிழ்
தங்கிடுமே நாட்டில் தழைத்து .


நன்றி :-


நன்றிநான் சொல்லிடுவேன் நல்வாய்ப்புத் தந்தமைக்கே
கன்னலென சொன்னேன் கவி .

நன்றி ! வணக்கம் !!!

ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (8-May-17, 5:35 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 151

மேலே