உயிர் வளராதோ
செடிக்குத் தண்ணீர் ஊற்றிடும் போழ்தில்
நமக்கே தாகம் தணிவதாய்க் காண்கிறோம் !
வெய்யில் படுத்த வெந்து துடித்துப்
படுதுய ரோடே பகலைக் கழித்து
வீட்டிற் குள்ளே வீசும் இயந்திரத்
தென்றல் வாங்கித் தேகம் சிலிர்த்துத்
தண்ணீர் தேடி தவித்திடும் பொழுதே
மொட்டுகள் கதரும் ஒலிகேட் கிறது !
மாடியில் காயும் மணமிகு மனமாம்
செடிக்குத் தண்ணீர் ஊற்றிடும் போழ்தில்
நமக்கே தாகம் தணிவதாய்க் காண்கிறோம் !
நீட்டப் படுமிந் நிலைமையு மாண்டு
நல்ல இயற்கை நமைக்கரந் தீண்டி
வாவென் றழத்து மடியி லமர்த்திக்
காயொடு கனியுங் கவிதையும் வழங்கி
இச்சைக் கினியவாய் இனிப்பல பேச
நம்கடன் யாதோ நன்கிதைத் தேர்வோம்
வாடும் பயிர்கண் டுயிர்வா டியவர்
வள்ளல் எழுவர் வளர்கொடை கன்னன்
வாழ்ந்து திகழ்ந்து வளப்புக ழெய்தி
வீழ்ந்து மடிந்த இத்திரு நாட்டில்
பூக்கும் ஜென்மம் புயல்வளி வானம்
யாவும் நாமெனும் நன்மறைச் சொல்லைக்
கொஞ்ச மோர்ந்து கொளுத்தும் வெயிலாம்
கலியின் ஆட்டம் களைந்திட, நாளும்
செடிகள் காப்போம் ! செடிகொடி யாலே
மிடிமை யெல்லாம் மிரள்வது திண்ணம் !
உறுதி கொண்டார்க் கழிவுற லெளிதோ ?
உமைதுணை யுண்டே உயிர்வள ராதோ ?
-விவேக்பாரதி