என்னென்ன செய்வீரோ
நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவனின் புலம்பல் !
என்னென்ன செய்வீரோ ? - இன்னும்
என்னென்ன செய்வீரோ ?
முன்னம் படித்தது முற்றும் மறந்திட
. மூலைக்கு மூலையோர் சோதனையாய்
என்னைப் படுத்தியென் எண்ணம் குழப்பிட
. என்னென்ன இங்ஙணம் செய்யுவிரோ ?
மருத்துவ மென்னும் மாண்புடைச் சேவையை
. மண்ணில் பயின்றிட வந்ததுதான்
பெருந்தவ றோவெனை இப்படிச் சோதித்து
. பெற்றது மென்னெனச் சொல்லுவிரோ ?
சட்டை கிழித்தனர் சாற்றிடும் எம்மதச்
. சின்னங்களை இங்கு நீக்கிவிட்டார் !
பிட்டடிப் போமெனும் எண்ணத்தி னாலிந்தப்
. பிள்ளையைக் கைதிபோல் காணுகிறார் !
கோடி யடித்தவன் கொள்ளைகள் செய்தவன்
. கோட்டையில் நாட்டினில் சுற்றிடவே !
பாடம் படித்திடும் பாலரைக் குற்றங்கள்
. பன்னிடு வோரென எண்ணுகிறார் !
நாட்டின் வசந்தத்தை எங்களின் கைகளில்
. நல்விதங் கண்டவர் காதுகளில்
கேட்டி னிடைப்படும் எங்களின் கூக்குரல்
. கேட்பற் கிங்கு வழியிலையோ ?
மாணவர் தானைய ! நாங்களும் நாட்டினை
. மாய்த்திட வந்தவ ரில்லையென்றே
ஆணவத் தோடுரை செய்யத் துணிவுண்டு
. ஆயினும் நாங்களச் சாதியில்லை !
முற்பகல் செய்திடின் பிற்பகல் நின்றிடும் !
. மூத்தவர் வார்த்தைகள் பொய்த்திடுமோ ?
நிற்கவைத் தீரும்மை வாழவைப்போம் ! உயிர்
. நீட்சியைச் செய்யும் மருத்துவர்யாம் !
-விவேக்பாரதி