தமிழும் நானும்

ஒருகவிஞர் ஒரு பாடல் துவங்க அது என்னையும் இன்னொரு கவிஞரையும் தூண்டவே எனக்கும் தமிழுக்கும் நடந்த உரையாடல்...

முதற்கவிதை இட்டவர்
கவிஞர். சங்கர நாரயணன் அவர்கள் !

அவ்வைத் தமிழை அழகாய்க் கேட்டாய்
அருணகிரிப் புகழ் அளித்துக் கேட்டாய்
கொவ்வைத் தமிழில் குருபர கீரரும்
குறுமுனி வாரியும் கொஞ்சக் கேட்டாய்
பவ்வியமாய் உனைப் பாடிப் பாடி
பரகதி பெற்றார் கோடிக்கோடி
எவ்விதத் தகுதியை என்னிடம் கண்டாய்?
எந்நா வினிலுன் எழிற்பா நட்டாய்

இது என்னைத் தூண்ட நான் எழுதிய மறுமொழி !

எதுதான் கண்டாய் என்னுள் நின்றாய் !
எழிலே தமிழே எனையேன் கொண்டாய் ?
மதுவென் றுனைநான் மாந்திடச் செய்தாய்
மழலை வாய்க்குள் மலைகள் தந்தாய் !
பொதுவில் கொண்ட பண்புகள் எல்லாம்
பொலியும் வண்ணம் வடிக்கச் செய்தாய் !
இதுதான் தமிழே உன்னிடங் கேட்பேன் !
இயக்கும் கலைதான் எங்ஙணம் கற்றாய் ?

அதனைக் கண்டு தமிழ் விடை சொல்வது போல் கவிஞர் சுந்தரராஜன் அண்ணா எழுதியது...அப்படியே நான், தமிழ் (அவர்) என்று தொடர்கிறது

அப்பன் அவனோ ஆட்ட மியக்கி!
அம்மை அவளோ யாவு மியக்கி!
சுப்பன் அண்ணன் வேலை இயக்கி!
சுழிகை யண்ணன் மூல மியக்கி!
இப்படிக் குடியில் பிறந்த வெனக்கே
இயக்கத் தெரியா திருப்பின் இழுக்கே
செப்பிடு பாவலர் வாய்மொழி எல்லாம்
சிறுபெண் ணிவள்செய் சீர்விளை யாட்டே!

நான்:
விளையாட் டென்றே அறிவேன் தமிழே
விஷயம் அறிந்த பலபே ரிருக்க
களைபோல் சிறிய உருவங் கொண்டே
கருத்துஞ் சொல்லும் அறியாக் கவிஞன்
உளத்தில் நிறைந்தே உலுக்குவ தேனோ ?
ஊமை அடையேன் உனையறி வேனோ ?
இளமை மாறா இளந்தமி ழன்னாய்
இதையுங் கேட்பேன் ! இயம்பிடு வாயே

தமிழ்:
உருவிற் பெரியோர் உளத்திற் பெரியோர்
உடலின் அகவை பெரியோர் எல்லாம்
மருளும் மாந்தர் மனஞ்செய் மாயை
மாயையின் மகளுக் குண்டோ சாயை?
கருவில் திருவாய் நுழைந்து களிப்பேன்
காடே குகையில் கடலாய் பொழிவேன்!
துருவனை யம்மான் உயர்த்தி யதைப்போல்
தொண்டரை எல்லாம் உயர்த்தி மகிழ்வேன்

நான்:
தொண்டரை யெல்லா முயர்த்தி மகிழும்
தொன்மைத் தமிழே எனக்கிது சொல்வாய் !
உண்டோ நிஜமாய் உனக்குள் பிரிவும் ?
உலகார் கூறும் மொழிச்சண் டைகள் ?
பண்ணில் பாட்டில் என்னுள் கலந்து
பரவசப் படவே இயக்கும் தேவி
கொண்டல் கவியில் தனியா வடமா ?
கொள்வது எதனைக் கூறிடு வாயே !

தமிழ்:
கடலும் உலகும் கதிரும் நிலவும்
காற்றும் வெளியும் பொதுவாய் வைத்தக்
கடவுளின் டமருக ஒலியி லிருந்தே
கண்டனன் எனையும் குடமுனி கண்டாய்!
அடமொழி நாங்கள் அக்காள் தங்கை
அதுவு மிரட்டை ஏதெமில் பேதம்!
விடடா பிள்ளாய் வீணரின் வார்த்தை
விளைபவை எல்லாம் இறையொலி அன்றோ?

நான்:
அடடா தமிழே அறிவில் தெளிவை
அடியேன் பெற்றேன் ! மிகவுஞ் சரியே !
விடடா பிள்ளாய் என்றே சொன்னாய்
வினாக்கள் எழுதே நானென் செய்ய ?
கடவுள் ஒலிதான் அனைத்து மென்றாய்
கடவுள் இல்லெனக் காட்டுகின் றாரே
படர்ந்த பழமை வழக்கம் அறியேன் !
பாலனுக் கதனைப் பகிர்ந்திடு வாயே !

தமிழ்:
கடந்துள் ளுறையுங் கடவுளை யறியக்
கடந்தவ ரன்றோ காட்டிட யேலும்?
கடவுள் இலையெனக் காட்டு கின்றாரா?
காது வரைக்கும் விரியுது சிரிப்பு!
இடையில் இதுபோல் சிரித்தலும் வேண்டும்!
இலையென் பதனை காட்டுத லெங்கண்?
விடையினை யோர்ந்து நீதெளி பிள்ளாய்!
விரல்பிடித் திதற்குள் செல்லுத லரிதாம்

நான் :
அறிவுரை சொன்னாய் ! அறிந்தேன் தமிழே !
அகண்ட பாரத நாட்டினில் உன்போல்
சிறப்புடை மொழிதான் இலையெனின் உண்மை !
சின்னவன் சொல்லும் கவியினில் சொல்லில்
அறுத்திடு நேரும் பிழைகளை ! நானும்
அடுத்துனை வாழ்த்து அமைகிறேன் கேளாய் !
பறந்திடு வானம் வரைவளத் கின்றாய் !
பாரோர் மனத்தில் நெடுநாள் வாழ்க !

அவர்தம் நாவில் அமர்ந்தெழில் சேர்க்க !
அன்னவர் சிந்தை தன்னிலி ருக்க !
தவறுகள் நேரத் தண்டித் தடக்கித்
தாயாய்த் தந்தையாய் தோழியாய்ச் சேயாய்
நவநவ மிங்கே புதுமுகங் கொள்க !
நாங்களும் வாழ நல்வழி உய்க !
சிவடம ருகந்தான் சிந்திய ஒலியே !
சீவன்கள் எல்லாம் பேசிடும் மொழியே !

வாழ்க ! நீ வாழ்க !

எழுதியவர் : விவேக்பாரதி (10-May-17, 6:32 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 368

மேலே