அப்பா

அப்பா!....
இறுத்தி வைத்த
தன் இறுதி மூச்சை
எனை ஈன்றெடுக்க
ஈந்த பின்னே
காற்றில் கலந்த
தாயவள் பின்
ஓடிய உன் உயிரின்கால் தன்னை
பற்றியிழுத்த என் அழுகுரலால்
எஞ்சிய காலத்திற்கு
விஞ்சிய ஓர் ஏற்றக் கொம்பென
பாசக் கொடிதன்னை
படரவிட்டாய் என்நெஞ்சில்

முகம் பார்த்தே நிலையறியும்
தேர்ந்த வைத்தியன் போல்
வாட்டம் முகம் காணும்முன்
பசி ஓட்டி ருசி ஊட்டி
தாயும் ஆனவனாய்
தந்தையே நீ எனக்கு

பக்கத்து ஊர் சந்தைக்கு
பாலம் கடந்து பலர்செல்ல
தோள்மீது எனை ஏற்றி
கழுத்து முங்கும் கண்மாயில்
கால்கடுக்க கடந்து சென்று
கண்டதையும் வாங்கி உண்ட
நினைவுகள் மனதோரம்
ஊஞ்சல் கட்டி தூளி ஆடும். . .

கருவறையில் கட்டிவைத்த
கல்லறையை தாண்டிவந்த
பாவச்சுமையது
பெண்பிள்ளையென
கள்ளிப்பால் ஊட்டி
கருமம் தொலைத்த சமூகத்தே
கல்விப்பால் ஊட்டி
கருத்து அளித்த நீ எனக்கு
கடவுளன்றி வேறொன்றாய்
காட்சிக்கு தோன்றவில்லை

நான் இழைத்த தவறுக்கு
நான்கைந்து அடிகொடுக்க
வீராய்ப்பாய் வீட்டின்மீது
ஒளிந்திருந்து நான் தேம்ப
ஊரெல்லாம் தேடிவிட்டு
மாரியம்மன் கோவில்முன்னே
மண்டியிட்டு மன்னிப்பை
கேட்டு நீ அழுததின்னும்
எள்ளளவும் மறையவில்லை
என்றென்றும் கண்முன்னே...

நட்டு வைத்த செடியொன்றின்
வேர் நீட்டம் அளந்தறிய
பிடுங்கி நான் நித்தம் நட
வாடிய செடி தன்னில்
மகள்முகம் கண்டதனால்
புதிதாய் தினம் ஒன்றை
நட்டு நீ வைத்து
நான் வைத்த செடியென்று
பொய்யை சொல்லி வைத்த
மெய்யப்பன் நீ ஆனாய்...

மாறுவேட போட்டி ஒன்றின்
என் மருத்துவர் வேடமது
உன் மனதோரம் நிழற்படமாய்
மாட்சிமையாய் பதிந்துவிட
விஞ்சிநின்ற ஓர் நன்செய் அதை
விலையாக்கி உருகொடுத்த
ஒப்பிலா
தந்தையின் அடையாளம்
தரணியில் நீ எனக்கு. . . . .
சு.உமாதேவி

எழுதியவர் : சு உமாதேவி (8-May-17, 6:42 pm)
Tanglish : appa
பார்வை : 851

மேலே