மனது

மனது,
கிளை நீங்கும் இலை
போல மென்மையானது ......
உளி தாங்கும் சிலை
போல வன்மையானது ......
மனது,
பாசம் பழகும்;
நேசம் நிறைக்கும்....
வலிகள் ஏற்கும்;
வேதனைகள் கற்கும்............
யுகங்களில் கலங்கிடும்!
நொடிகளில் மகிழ்ந்திடும்!
காயங்களில் கரைந்திடும்!
சிரிப்புகளில் சிலிர்த்திடும்!
கண்ணீர் கண்டு
செந்நீர் சிந்தும் !
கண்ணீர் துடைக்க
கரங்கள் நீட்டும்!
அழகிய மலரின்
மெல்லிய இதழினால்
மெல்லத் தீண்டல் பெற்றாலும்
உருகி அது உடைந்திடும்....
ஆயிரம் கணைகள்
அள்ளித் தொடுத்து
உயிரின் மூலத்தைத்
துளைத்தலும்
புன்னகையோடு
விளையாடும் ........
இதயம் நிறைக்கும்
இன்பம் இருந்தாலும்
என்றோ கண்ட
துன்பத்தை எண்ணி அது
வருந்திடும் ........
தடைகள் பல வந்தாலும்
தடுமாறாமல்
தகர்த்தெறிந்து
தடம் மாறாமல்
நடை பயிலும்......
எல்லாமே இருந்தாலும்
இல்லாத ஒன்றினை
நினைத்தபடி
ஏங்கிடும்........
ஏதுமற்ற இருளிலும்
ஏதோ ஒரு
திசையினில்
இயல்பாக
இசை பயிலும்...........
உதிரத்தை உருக்கி உருக்கி
உயிரினை இறுக்கி இறுக்கி
மென்மையோடும்
வன்மையோடும்
வடிக்கபப்பட்ட
உருவற்ற உன்னதம்,
இந்த மனது.........
வித்தைகள் கற்ற
விந்தையான மனதினில்
அன்பான நினைவுகளோடு
அழகான பயணம்
தொடரட்டும்.........
மனதை வளர்ப்போம் ;
மனிதம் மலரும்.......