இடையிடையே தேன்!!!
தோழமையிடம் "காதல் என்றால் என்ன" என்றேன்
"வலப்புறம் வலி ..இடப்புறம் கிலி..இடையிடையே தேன்" என்றான்
சிரித்தேன்..
இருந்தாலும் காதல்..காதலாகவே பார்க்கப்படுகிறது!
குண்டுதுளைக்காத மேடைக்குள் கொண்டு வைக்கமுடிவதில்லை மனதை.. ..
பொம்மை பொத்திவைக்கும் மழலையை..
கருவைப் பேணும் கர்ப்பிணியை..
அன்பே ஆயுள்ரேகையாக ஓடும் உள்ளங்களை
முட்களல்ல...சிலநேரங்களில் பூக்கள்கூடக் கீறிவிடுகின்றன..
காற்றைப்போல மென்மையான உள்ளங்கள்
கனவைப் புலம்பியவாறே திரிகையில்- அவர்களின்
காதல் கண்காணாத தீவில்
கன்னத்தின் மேல் கைவைத்து
கவலையோடு இருக்கிறது..
என் கவிதை பதம் மாறாமல் பதிவு செய்ய
எல்லா தமிழெழுத்துக்களையும் ஏற்றிக்கொண்டு
அதோ.. புறப்பட்டு விட்டது ..
-நடராஜன் மாரியப்பன்