பெரியாத்தா

பெரியாத்தா செத்துப் போச்சாம் டா...,

'இப்பதான் மாமா போன் பண்ணுனாரு' னு அண்ணன் சொன்னது மட்டும் தான் காதில் விழுந்தது...சீக்கிரம் கெளம்பனும் மெட்ராஸுல இருந்து விருதுநகர் போக எப்படியும் 8-10 மணி நேரம் ஆயிடும், நீ கெளம்பி ரெடியா இரு, நான் ஒரு அரை மணி நேரத்துல வந்துர்ரேன் அப்புரம் நம்ம போகலாம் ,

என்னடா சொல்லிக்கிட்டு இருக்கேன் என்ன யோசன? அண்ணன் கேக்க, இல்ல..ஒன்னும் இல்ல.. நீ போயிட்டு சீக்கிரம் வா னு நான் சொல்லவும்,வண்டியை உதைத்துக் கிளம்பினார் .

யார் இந்த பெரியாத்தா? ஆத்தானா அம்மா, பெரியாத்தானா பெரியம்மாவோ னு நினைக்க வேணாம் .. பாட்டிய ஆத்தானு சொல்ற வழக்கமும் உங்களுக்கு தெரிஞ்சிரிக்கலாம். எங்க அம்மாச்சிய ஆத்தானும், அம்மாச்சியோட அக்காவ பெரியாத்தானும் சொல்லுவோம்.

உண்மைய சொல்லனும்னா ஒருவேல எங்கள எல்லாரயுமே பெரியாத்தா தான் பெத்துருக்குமோனு தோனும். அப்படித்தான் எங்கள பாத்துக்கும்...பெரியாத்தா வழில ஒரு மாமா ரெண்டு பெரியம்மா, எங்காத்தா வழில ரெண்டு மாமா, அம்மாவோட சேர்த்து நாலு பொண்ணுங்க.. இவங்கள்ள கடைசி மாமா, கடைசி சித்திக்கு மட்டும் கல்யாணம் ஆகாம இருந்தாங்க...பேரப் புள்ளைங்களுக்கு குறைச்சல் இல்ல.

பெத்த அப்பா அம்மா கூட பிள்ளைங்கள அடிக்க கூடாது , உடனே எங்க இருந்துதான் அவ்வளவு கோவம் வருமோ ; "இந்தா...யாருடா அது"பிள்ளைய அடிக்கிறது? பெத்துப் போடுறது தான் உங்க வேல, அத வளக்குறத நாங்க பாத்துகுவோம்,பெருசா அடிச்சு திருத்த வந்துட்டாரு.. "இனிமே புள்ள மேல கை வையி பாத்துகிறேன்"னு சொன்னா எல்லாரும் பேசாம போயிடுவாங்க.

பெரியாத்தா எந்த பிள்ளயயும் வித்தியாசமா பாக்காது. அதுக்கு 'எல்லாரும் பிள்ளைங்க தான்'. எல்லா பிள்ளைங்களுக்கும் பிரசவம் பாத்து, முத தண்ணி ஊத்துறது பெரிய கிழவிதான்.

கருப்பா, கூன் விழுந்தாப்புல அது நடந்து வர்ர அழகே தனி. எந்த நேரமும் வெத்தல பாக்கப் போட்டு குமட்டி அது பேசும் தொனி, பேச்சுக்கு ஏத்த மாதிரி கன்னத்துக்கும் கீழ வந்து ஆடி அசையிற நீண்ட ஓட்டை விழுந்த காதும் அழகு...

பெரியாத்தா வருதுன்னாலே எங்களுக்கு கொண்டாட்டம் தான். காரணம் அது சொல்லும் கதைகள். ராத்திரி சாப்புட்டு எல்லா பிள்ளைங்களயும் சுத்திப் படுக்கப் போட்டு (நான் வாண்டுங்குரதால பக்கதுல போட்டு இடுக்கிகிட்டு)அந்த கிழவி சொல்லும் கதை இருக்கே..
....ஒரு ஊருல னு ஆரம்பிக்கும் போதே நம்மல கதை நடக்குற லொகேசனுக்கு அனுப்பி வச்சிடும். பெரியாத்தாவுக்கு அப்புறம் அந்த கதை சொல்ற கலை யாருகிட்டயும் நான் பாக்கல.

நிலா கதை, சிங்கம் புலி கதை, நரி கதை , ஏழு மலை தாண்டி ஏழு கடல் தாண்டி இருக்குற கிளில உசுர வச்சிருக்க மந்திரவாதினு எங்க இருந்து அத்தனை கதை தெரிஞ்சுகிச்சோ ஆச்சர்யம் தான். சிங்கம் கதை சொன்னா பெரியாத்தாவ மறந்து சிங்கத்தோட தான் நேர பேசுர மாதிரி இருக்கும்..

..... நான் அப்ப ரொம்ப சின்னப் பொடியன்.... இப்ப யோசிச்சாலும் ஆச்சர்யம் இந்த பொடியனுக்கும் எப்படி கதைய புரிய வச்சிருக்கும் அந்த கெழவி? கதை சொல்லிக்கொண்டிருக்கும் போதே 'அடியே பெரியவளே இங்க பாரு உன் மருமகனுக்கு தூக்கம் வந்துருச்சி, தண்ணிய குடுத்து இங்க கொண்டாந்து போடு'ன்னு என் அக்காட்ட(பெரியம்மா மக) சொல்ல.,அந்த நேரத்துல என்னைய ஒரு சொம்பு தண்ணிய குடிக்க வைக்க என் அக்கா படுற பாடு இருக்கே.. தண்ணி குடிக்காம படுத்தா செத்துப் போவாங்கனு இந்த கெழவி சொன்ன கதையால வந்த வினை இது..

நம்ம தூங்கும் போது தண்ணி குடிச்சிட்டு தூங்கனும் ..இல்லனா தண்ணி தவிச்சா நம்ம ஆவி தண்ணி தேடி போகும் ...அப்ப தண்ணிக்குடம் எதும் தொறந்துருந்தா தண்ணி குடிச்சிட்டு வந்து படுத்துக்கும் ...இல்லனா தண்ணி தாகத்துலயே செத்துப்போகும்னு சொல்லி சொல்லி, எங்கக்கா என்னை தண்ணிகுடிச்சுட்டு படுடா னு கெஞ்சி கெஞ்சி அழுமாம். ஆனால் இன்று அந்த கூட்டுகுடும்ப கிழவிகளின் அரவனைப்பு இன்றைய தலைமுறை இழந்து விட்டது பரிதாபம். அந்த பெரியாத்தா தான் செத்துப்போச்சு.

இப்படி இருந்த கெழவியப் பாத்து மூனு வருசமாச்சு , சொந்த ஊருக்கு வந்துட்டேன்(அம்மா பொறந்த வீட்ல தான் நான் 8 வயசு வரை வளர்ந்தேன்). அப்பா அம்மா திருச்சிக்கு பக்கத்துல சொந்த ஊருல என் அண்ணன் , தங்கச்சியோட இருந்தாங்க. அப்புரம் என்னையும் அப்பா அம்மாவோடயே கூப்புட்டு வந்து வச்சிக்கிட்டாங்க. வருசத்துக்கு ஒருமுறை முழுப்பரீட்சை லீவுக்கு அங்க போவோம். அதுவும் இந்த மூனு வருசமா இல்ல, படிக்க மெட்ராஸுப் பக்கம் வந்தது , அம்மா வழி சொந்தங்களுக்குள்ள சில மனஸ்தாபம் வந்ததுனு சில காரணத்தால போக்குவரத்தே இல்ல.

வந்து அந்த முகத்தக் காட்டிட்டு போங்கடானு பெரியாத்தாவும் ஆத்தாவும் சொல்ராங்கனு அக்கா போன்ல சொல்லும் .டேய் இந்தாங்கடா ஆத்தா பேசுதாம் னு போன குடுத்த உடனே.. எய்யா.. வந்து ஆத்தாக்கு முகத்த காட்டிட்டு போங்கய்யா னு கெஞ்சும்,கொஞ்சும்.. வரேன்த்தா னு சொல்றதோட சரி.. போயி அத உசுரோட பாக்கல, வெத்தல வாசத்தோட அது குடுக்குற முத்தத்த வாங்கல...

பிள்ளைங்களுக்கு முத்தம் குடுக்கனும்னா புகையில போடாதனு யாரோ சொன்னாங்கனு வெறும் வெத்தல பாக்குதான் போடும்.

அரை மணி நேரத்துல வர்ரேன்னு சொல்லிட்டுப் போன அண்ணன இன்னும் காணும் .

தம்பி வயசான கெழவி ரொம்ப நேரம் வச்சிருக்க முடியாது, சாயங்காலம் சீக்கிரமே எடுக்கனும்னு சொல்றாங்க சீக்கிரம் வந்துடுங்க டா னு சொன்னாங்களே னு நான் யோசித்துக் கொண்டேயிருக்க என் செல் சினுங்க எதிரில் அண்ணன் தான்..
"ஒரு ரூவா கூட கெடைக்கலடா, இரு எப்படியும் பணத்தோட வர்ரேன்"னாரு. சொன்னவர் ஒரு மணி நேரத்தில் வந்தார்..சோர்ந்து போயிருந்தார்.

ரெண்டு பேரும் போற அளவுக்கு பணமில்லடா கெழவிக்கு உன் மேல தான் உசுரு நீயாவது போயிட்டு வா னு சொன்னார்.
"ச்ச கடைசியா பெரிய கெழவிக்கு ஒரு சேல எடுத்துப்போட கூட முடியல" , "ரெண்டு பேரும் போயி முகத்தக்கூட பாக்க முடிலனு" நொந்து கொள்ளும் அண்ணனை பார்க்க முடியாமல் பார்க்கிறேன்... சரிண்ணா பெரியாத்தா போயிடுச்சு , அது உசுரோட இருக்கும் போது போயி பாக்கல, இப்ப என்ன; விடு, ஆனா நீ கல்யாணமாகி நீயும் ஒரு குடும்பஸ்தன்ங்கிரதால உன்னக் கண்டிப்பா எதிர்ப்பாப்பாங்க. நான் என்ன சின்னப்பையன், அதான் அப்பா அம்மா போயிருக்காங்க , நீயும்போர , அப்புரம் நான் எதுக்குனு சமாளிச்சு அண்ணன பஸ் ஏத்திவிட்டு..,எதிரில் இருந்த டீக்கடையில் ஒரு க்ளாஸ் தண்ணிய குடிக்க கஸ்டப்பட்டு இறங்குது...

அண்ணன் போனதும், தம்பி வரலயாடா?னு யாராச்சும் கேக்கலாம், இந்தப் பய வராமக் கூட இருந்துகிட்டானே னு சொல்லலாம், எப்பவாது ஊருக்குப் போனா ஏன்யா பெரியாத்தா சாவுக்குக் கூட வரல னு யாரும் கேக்கலாம்.

..ஆனால் அதெல்லாம் எனக்கு கவலையில்ல..

.....பெரியாத்தா செத்துப்போச்சு... னு சாலையை வெறித்தபடி ரூமுக்கு நடந்தேன்.

எழுதியவர் : சுரேஷ் சிதம்பரம் (16-May-17, 12:31 am)
சேர்த்தது : சுரேஷ் சிதம்பரம்
பார்வை : 416

மேலே