நிலையாமை தீர்க்கும்வாய் தேர்ந்து நீக்குவான் நோக்கும்வாய் – ஏலாதி 40
நேரிசை வெண்பா
உலையாமை யுற்றதற் கோடி யுயிரை
அலையாமை யையப் படாமை - நிலையாமை
தீ'ர்'க்கும்வாய் தேர்ந்து பசியுண்டு நீக்குவான்
நோக்கும்வாய் விண்ணி னுயர்வு. 40 ஏலாதி
பொருளுரை:
நேர்ந்த சிரமங்களைப் போக்குவதற்கு பல இடங்களிலும் விரைந்து ஓடி வருந்தாமலும், பிறவுயிர்களை வருத்தாமலும், மறுமையைச் சந்தேகப்படாமலும், பிற பிறப்புக்களை நீக்கவல்ல அருள் வழியைத் தெளிந்து, பசி அவாவையும் நுகர் பொருள்களையும் நீக்குகின்றவன் செல்லும் இடம் விண்ணுலகத்துக்கு மேலிடமாகும்.
பொழிப்புரை:
தனக்குற்ற துன்பத்துக்கு ஓடித் தளராது, பிறருயிரை வருந்த அலையாது, மறுமையை ஐயப்படாது, நிலையாத பிறப்பைத் தீர்க்கும் வழியை ஆராய்ந்து, பசியினையும் உண்டியினையும் நீக்கித் தவம் செய்வான் உறைவதற்கு ஆராயுமிடம் விண்ணினுச்சி ஆகும்.
கருத்து:
உலையாமை முதலியன உடையான் விண்ணுலக நிலைக்கும் மேல் நிலையை அடையான்.
உலைதலும் அலைதலும் வருந்துதலாகும்; பசியும் உண்டியும் இடத்திற்கேற்பப் பொருள் செய்யப்பட்டன.
விண்ணின் உயர்வு – மகேசுர மண்டில முதலாயின. நிலையாமையையுடைய பிறப்பை நிலையாமை என்பது மரபு வழுவமைதி.