என்றோ ஒருநாள் இதுவும் முடியும்

ஏதோ ஒன்று எம்மை அசைக்க
எழுந்து நடக்கும் மாந்தர் நாம்
ஆட்டம் போடும் மனிதர் கூட்டம்
ஆடி முடிந்தால் எடுப்போம் ஓட்டம்
என்று முடியும் இந்த ஆட்டம்
என்று அறியா மூடர் கூட்டம்

ஆதி என்றால் அந்தம் உண்டு
தொடக்கம் உண்டு முடிவும் உண்டு
என்ன நடக்கும் நாளை உனக்கு
எந்த மண்ணில் மரணம் உனக்கு
கையில் எதுவும் இல்லா வாழ்க்கை
கணக்கு முடிந்தால் எரியும் யாக்கை

எரிந்து அணையும் மெழுகு வர்த்தி
எங்கே போனது உனது புத்தி
கட்டி ஆளும் சொந்தம் யாவும்
விட்டுப் போகும் வெற்று வாழ்க்கை
புதிர் அவிழா வாழ்வுக் கணக்கு
புரிந்து வாழு நன்மை உனக்கு


கொண்டு போக எதுவும் இல்லை
கொடுத்தார் வாழ்வில் குறைவும் இல்லை
என்ன உண்டு எடுத்துச் செல்ல
ஏழை கண்ணீர் துடைப்போம் மெல்ல
தீர்ந்து போக முன்பு தீபம்
துன்பம் தீர இடுவோம் தூபம்

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (20-May-17, 4:28 pm)
பார்வை : 115

மேலே