இசை அச்சாணி

******************
பிறமொழிப் பாடல்கள் பேரின்ப மாதல்
சிறப்பிசை யாலெனச் செப்பு - உறவாய்
மொழிக்கங்கு பங்கின்றி மோதும் செவிக்குள்
அழியா திருக்கு மவை
*
தாய்மொழி தாண்டித் தனித்துவ மாயெம்முள்
தோய்ந்திடும் நல்லிசைத் தோப்புண்டு - ஆய்வாயே
வேய்ங்குழ லோசை விழக்கேட்டு மெய்மறக்க
வாய்மௌன மாதல் வழக்கு
*
கூவும் குயிலிசைக்குள் குந்தும் மனசுண்டு
தாவும் அலையிசைத் தானுமுண்டு - தூவும்
மழையிசைக்கும் துள்ளும் மனிதருண்டு யாவும்
பிழையென் பவர்க்கேதான் பீடு
*
இசைக்கு மொழியில்லை என்பதுண்மை இங்கே
அசையும் எதிலும் அசையா - இசையுண்டு
கேட்டும் திறனிருப்பின் கீற்றும் தலையாட்டும்
பாட்டுப் புலவனெலாம் பின்பு
*
இசைத்தேர் அமரும் இலக்கணப் பாட்டு
அசைந்தோட காற்றலையச் சாணி - பசைப்போட்டுப்
பாமரன் நெஞ்சுக்குள் பத்திரமாய் நின்றென்றும்
சாமரம் வீசுமதே சான்று
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (2-May-24, 1:12 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 55

மேலே