வாழிய கம்பநாடன்

வாழிய கம்ப நாடன்...!

இரகுகுல நாயகன் அகப்புற அகவலை
இகத்தோர் சுவைத்திட இன்னமுதில் இயம்பி
இதிகாச புராதனத்தை இலக்கிய இசைவாக்கி
இறையோனை இளக்கியவன் கவிச்சக்கரவர்த்தி கம்பன்

காவல்நின்ற தினைப்புனத்தை காளிங்கள்பரி சிதைக்க
கோபக்கனல் குன்றேரி கடிகுதிரை மாய்க்க
வாய்த்த வைரபுரி மாகாளியிடம் பதைக்க
காளியவள் அருள்மொழிந்தாள் காவல்நின்றோன் கவிஞனானான்

புவிமன்னனுக்கு நிகர் கவிசிம்மாசனம் பிடித்தான்
சவிசடையப்பன் கொடைக்கு சிவிசதையம் படித்தான்
ஒட்டகூத்தனின் ஒட்டாத சகன் ஆனான்
கட்டவிழ்ந்த மொழித்திறத்தால் சாகித்திய கவியானான்

அசைசீர் அடிதொடை மிசையோடு மிளிர்ந்தது
இசையோடு ஓசைநயம் கதைநிகழ்வோடு நகர்ந்தது
விசைவீறு சொல்லாட்சி கருபொருளோடு இயைந்தது
திசையெட்டும் கம்பன்கவி நசைகொண்டு உகந்தது

ஏரெழுபது திருக்கைவழக்கு உழவுக்கு உயர்த்தம்
சடகோபர் அந்தாதி நம்மாழ்வாரின் நிவிர்த்தம்
சரஸ்வதி அந்தாதி நாமகளின் பொருத்தம்
சகலத்திலும் விழித்தது கம்பனின் விருத்தம்

எதுகையும் மோனையும் இவனேவலுக்கு ஏங்கும்
உவமையும் உவமேயமும் எழுதுகோலை வணங்கும்
அணிகள் பணிநின்று கம்பன்கவி சொல்லும்
கன்னித்தமிழ் உள்ளவரை புவியை அதுவெல்லும்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (20-May-17, 10:26 pm)
பார்வை : 94

மேலே