வரி

பித்தனைப்போல் எத்தனை வரிகள் வடித்திடினும் பயனின்றி
மெத்தனம் மட்டும் குறைந்திடவில்லை வரி விதிக்கும் நம் அரசிற்கு...

வியர்வையில் முழ்கி நாம் உழைக்க
விசித்திரமாய் நம்மிடம் புகுத்தும் வியக்கத்தக்க வருமான வரி...

ஒற்றைச் செங்கல்வரிகொண்டு ஓட்டுவீடு அமைத்தாலும்
கற்றைப் பணம்கேட்கும் கோட்பாடற்ற வீட்டுவரி...

குடிநீருக்கு பஞ்சமென நாம் அஞ்சிநடக்கும் போதிலும்
வஞ்சம் தீர்க்க வலம்வரும் நெஞ்சைப்பிழியும் தண்ணீர் வரி...

சொந்தவாகனம் சாலைவழி பயணிக்க சாலைவரி
பந்தங்களோடு ஊர்சுற்ற கேளிக்கைவரி...

விளக்கொளிர திரி வாங்க விற்பனை வரி
மலம்கழிக்க கழிவறை சென்றாலும் சேவை வரி...

அப்பா எழுதிவைத்த அரைகாணி நிலத்திற்கு சொத்து வரி
அத்தை வீட்டிற்கு அவசரமாய் சென்றாலும் ஆங்காங்கே  சுங்க வரி...

இதுவும் போதாதென இப்போது மதிப்புகூட்டு வரி
எதுவும் வேண்டாமென விடுதியில் தங்கிட சொகுசு வரி...

கறுப்புபண களவாணிகளை கண்டிக்க துப்பில்லை
வருமானத்தை பெருக்கிட வழிதேட வக்கில்லை...

உழைப்பவர் முதுகினில் ஒய்யாரமாய் அமர்ந்துகொண்டே
பிழைப்பு நடத்துகிறது இன்றைய பிழையான அரசு...

நாளைய நாளிதழ்களில்கூட நாம் காணநேரும்
நாட்காட்டி உண்டெனில் குறித்து வைத்துக்கெள்ளுங்கள்...

வாரிசினை வளர்ப்பதற்கு சிறப்பு வரி
பார்துறந்து போயினும் எரிப்பு வரி...

அடுத்தடுத்தாய் வரி அடுக்கடுக்காய் வரி
தொடர்ந்து உயிர்த்திருந்தால் இந்தத் தொல்லைகள் எல்லாம் சரி...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (26-May-17, 7:18 am)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
Tanglish : vari
பார்வை : 59

மேலே