கண்ணனின் குரலோசையில்

கோலமகன் குழலூத
கோதையவள் மெய்மறக்க
குழலோசை கேட்டு
பசுக்கள் பசியாறும்
தவிக்கின்ற நெஞ்சமெல்லாம்
தாயுமானவனிடம் தஞ்சம் புகும்
மலையேந்தி உயிர்களை காத்தவன்
நாசம் செய்த நாகத்தின் தலைமீதேறி
தரணியை விட்டு அகற்றியவன்
சூது அரங்கில்
மாது மானம் காத்தவன்
பார்த்த சாரதியாய்
பகவத்கீதை புகட்டியவன்
காவியத்து நாயகனின்
நாமம் என்றும் நிலைத்திடுமே
நெஞ்சத்தில்
நேயக்கண்ணனிவன்
மனதை மயக்கும் மாயக்கண்ணனிவன்
இடையனாய் இன்னுலகில்
இன்னல்கள் நீக்கிய நீலக்கண்ணன்
காலனாய் நின்ற கம்சனின்
காலக்கணக்கை எழுதி முடித்த கார்வண்ணன்
கண்ணழகில் கோதையவளை மயக்கினான்புல்லாங்குழலாக பேதையவளை
வாசிக்க எண்ணினான்
கள்ளத்தனம் கொண்டு
கன்னி மனதை திருடினான்
குழலூதி மயக்கினான் கோதையை
சிவவில் ஒடித்து பற்றினான் சீதையை
வெண்ணை உண்டு
வேடிக்கை பல காட்டினான்
மண்ணை உண்டு
முழு உலகையே காட்டினான்
மாயக் கண்ணனவன் குழலோசையில்
மயங்கின மூவுலகமும்
நேயக்கண்ணன் நேசத்தில்
நிறைந்தான் நெஞ்சமெல்லாம்
குமிண்சிரிப்புடன் குழலிசைப்பான்
குயிலுவக்கருவிகள் ஈடு இணையற்றுப் போகும்
குழகன் அழகாய்
குறும்புகள் செய்திடுவான்
பாவைகள் நீராட
பட்டாடையை மறைத்திடுவான்
குழலோசை கேட்டு இசைக்குயில்கள் வெட்கிடும்
அழகனிவன் ஆடிடவே
தோகை மயில் சொக்கிடும்
மட்டுநகர் கமல்தாஸ்