காமராசனைத் தொடர்கிறார் கவிக்கோ

உன் வார்த்தைகள்
அர்த்தங்களை அலங்கரித்தன.

உன் வார்த்தையின் பிடி
அர்த்தங்களின் உடும்புப் பிடி.

புல்லாங்குழலின் துளைகளில்
மெல்லிய கானங்களாய்
உன் வார்த்தைகள்.

கொலுசொலிப் பாதங்களில்
தேவதைகளாய் நடந்து வந்தன
உன் வார்த்தைகள்.

நேயர் விருப்பமாகவும்
ஆலாபனையாகவும்,
இருந்தாய்.

உன் பால் வீதியில்
கவிதையின் பரவச தரிசனம்
பலருக்கு
புதை சேறான வார்த்தைகள்
உனக்கோ சுனை நீரானது.

உன் வார்த்தைகள்
அர்த்த மண்டபங்களில்
ஜீவித சோபிதம் பெற்றன.

பலபேர்
சருகுகள் பொறுக்கி வந்தார்.
நீ தான்
பூக்கள் பறித்துவந்தவன்.




உன் வார்த்தைகள்
கற்பக விருட்சங்களாகவே
முளைத்தன.

உன்னைத் தேடிவந்த
கவித்துவ உச்சங்களை
மிகக் கவனமாய்
ஆரத் தழுவினாய்.

நீ தோண்டிய சுரங்கத்தில்
வைரங்கள் மட்டுமே
வந்தன.

மொழியின் உச்சம்
கவிதை.
கவிதையின் உச்சம்
அப்துல் ரகுமான்.

நண்பர்
நா. காமராசனை
இப்போதும்
தொடர்ந்து விட்டாய்.
தமிழ் கவிதையின்
வெகுமானமே
நீ மரணிக்கவில்லை
எழுதுவதை நிறுத்தி விட்டாய்.

எழுதியவர் : கனவுதாசன் (3-Jun-17, 8:59 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 49

மேலே