தீயின் நாக்கு

பேராசை பற்றி எரிந்தது

வாங்கிய மக்களின்
வயிறுகள் எரிகின்றன.

கட்டிடமும் எரிந்தது.

மக்களின் நாக்கு
கேட்காத கேள்விக்கு
தீயின் நாக்கு
பதில் சொன்னது.

சேலை விற்றார்கள்
நகை விற்றார்கள்
சேர்த்தே
பொய்யையும் விற்றார்கள்.

நான்கு மாடிக்குப் பதில்
ஏழு மாடி போல்
ஆதாயத்தின் அளவும்
அதிகரித்தது.
ஆண்டுக்கொரு
கடை திறக்கிறார்கள்.
திருப்பதி உண்டியல்போல்
செல்வம் சேர்கிறது.

மக்களிடம்
விலைக்கு விற்றார்கள்.
அதிகார வர்க்கத்தை
விலைக்கு வாங்கினார்கள்.

மலிவு விலைக்கு
வேலைஆள் வாங்கினார்கள்.

சேவை
செய்ய வேண்டாம்.
தேவைக்கு அதிகமானதை
என்ன செய்யப்
போகிறீர்கள்?
குப்பைபோல
குவிகிறது செல்வம்.

குப்பை போல
குப்பத்தில் கிடக்கிறது
ஒரு கூட்டம்.

பணம் பண்ணுங்கள்
பரவாயில்லை;
கொஞ்ச மாவது
மனம் எண்ணுங்கள்.

எழுதியவர் : கனவுதாசன் (3-Jun-17, 9:01 pm)
சேர்த்தது : கனவுதாசன்
Tanglish : theeyin naakku
பார்வை : 93

மேலே