ஆழ்ந்து சிந்தித்தால்----- திருக்குறளில் பொதிந்துள்ள அறத்தத்துவங்களின் நுட்பம்
அமைதியாகப் படித்து, ஆழ்ந்து சிந்தித்தால் திருக்குறளில் பொதிந்துள்ள அறத்தத்துவங்களின் நுட்பம் ஒருவாறு புலப்படும். தற்காலப் பகுத்தறிவுக்குச் சவால்விடும் மேலும் சில குறள்களைச் சொல்லலாம்:
373. நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன்
உண்மை அறிவே மிகும்.
இங்கு உண்மை அறிவு எது? அது எப்படி வந்தது?
166, கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
கொடுப்பதைத் தடுப்பவன் கெடுவது சரியாகத் தோன்றலாம். அவன் சுற்றம் ஏன் கெடவேண்டும்?
356. கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.
“மெய்ப்பொருள் ” என்பது என்ன? மற்று ஈண்டு வருதல் என்றால் என்ன?
357. ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாய்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
‘உள்ளது’ என்பது என்ன? அதை உணர்வது எப்படி?
358. பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.
பிறப்பு ஏன் பேதைமை ஆகிறது? செம்பொருள் என்பது என்ன? அதை எப்படிக் காண்பது?
343. அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு.
ஐந்தன் புலத்தை விட்டால் உலகில் எப்படி வாழ்வது?
வேண்டியதெல்லாம் விட்டுவிட்டால் எப்படிப் பிழைப்பது?
340. புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.
உயிருக்கு நிலையான இடம் இல்லையா? உடலில் ஒரு மூலையிலே இருக்கிறதே! இதன் பொருள் என்ன? இங்கு உயிர் என்பதன் பொருள் என்ன?
107. எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.
அது எப்படி ஏழு பிறப்பிலும் நினைவில் இருக்கும்? ஏழு பிறப்பு என்பது என்ன கணக்கு? இதை யார் கண்டார்கள் ?
திருக்குறளுக்குள் அமிழ்ந்துவிட்டால் இத்தகைய சவால்களுக்கு பகுத்தறிவினால் பதில்சொல்ல வியலாது.
நஞ்சப்பா