திரிகூடராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சி -- மதிப்புரை

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழில் அருமையான கவிகள் இயற்றப்பட்டன. திருக்குறள், திருவாசகம், காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதி, குலசேகர ஆழ்வார் பாசுரங்கள், பொய்கையாழ்வார் பாடல்கள், கலிங்கத்துப்பரணி, கம்பராமாயணம் முதலானவை அனுபவிக்கத்தக்க கவிகள். அவைகளைக் கற்கும்போது தமிழராகிய நமக்குத் தனித்த ஒரு பேருவுவகை பிறக்கிறது. அவைகளுக்குப் பிற்பாடு உண்டாயிருக்கிற நூல்கள் - புராணங்கள், கோவைகள், அந்தாதிகள் எல்லாம் அனேகமாய்க் கவித்துவம் என்பது இல்லாத, எதுகை மோனைகளைக் கணக்காக அமையும்படி செய்து தீர்த்த செய்யுள்களாகத்தான் முடிந்தன. பூர்வமான, தமிழ்ப்பண்பு, கவிப்பண்பு, இதயப்பண்பு இவைகளை ஆசிரியர்கள் அறவே மறந்துவிட்டார்கள் அல்லது ஒழித்துவிட்டார்கள் என்று சொல்ல வேண்டியிருக்கிறது. "ஏது தமிழ்க்கவி அஸ்தமித்தே போய்விட்டதோ?" என்று அஞ்சவே தோன்றும்.

இந்த நிலைமையில் இருநூறு வருஷங்களுக்கு முன் திருநெல்வேலி ஜில்லாவில் மேலகரம் என்ற - சுமார் ஐம்பது கூரைவீடுகள் உள்ள - சிறிய ஊரில் இருந்த புலவர் ஒருவர் தமிழ்ப்பாஷையின் இன்ப நிலைகளை அனுபவத்தறிந்து அற்புதமான கவிகளைப்பாடி உதவினார் என்பது பாலைவனத்துக்கு மத்தியில் கற்பகக்காவைக் கண்டக் கணக்குத்தான். புலவர் திரிகூடராஜப்ப(ன்) கவிராயர் பாடிய "குறவஞ்சி" தன்னுடைய புலமையைக் காட்டிவிட வந்த சொற்கோவை அன்று; உண்மையாக இதயம் அனுபவித்த ரசங்களைத் தமிழுக்கே உரிய இசையிலும் தாளத்திலும் வைத்துப் பாடிய பாடல்கள். வழக்கோடு ஒட்டிய தமிழில் எளிமைபடக் பாடியிருப்பதால் தமிழராய்ப் பிறந்த யாருமே கவிரஸத்தை அனுபவிக்கும்படியாக இருக்கின்றன. தமிழ் நூல்களை முறையில் கற்றுணர்ந்தவர்களுக்கோ கற்கக் கற்கத் தெவிட்டாத தேன்தான்.

நாற்பது ஐம்பது வருஷத்துக்கு முன்பு திருநெல்வேலி மதுரைச் சீமையில் தமிழ் கற்றவர் என்றால் குற்றாலக் குறவஞ்சியைக் கல்லாதவர் இருக்கமாட்டார்கள். மந்தை நாடகத்திலும் பரதநாட்டியத்திலும் குறவஞ்சிப் பாடலைப் பாடுவது சாமான்யம். எல்லாப்பள்ளிக்கூடங்களிலுமே பாடமாக வைத்துப் பாடும்படியாகக் கற்பிப்பார்கள். "தமிழ் கற்பதே அகௌரவம். குற்றாலக் குறவஞ்சியைப் படிப்பது அனுபவிப்பது என்பது எவ்வளவு கேவலம்! ஆங்கிலக் கவிகளை வைத்துக்கொண்டு எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சரி, அனுபவித்தோம்" என்று மாத்திரம் சொன்னால் போதும் அவர்களுக்குப் பெரிய பெரிய மதிப்பு.

பல பதிப்புகள் வௌிவந்தும், குறவஞ்சியைத் தமிழுலகம் கவனித்த பாடாக இல்லை. காரணம், மேலே சொன்ன ஆங்கில மோகம் ஒன்று. மற்றது, பண்டைத்தமிழ். பண்டைத்தமிழ் என்று வழக்கொழிந்த பாஷையில் எழுதிய நூல்களின்மேல் ஏற்பட்ட மோகம். தற்போது இந்த மோகம் எல்லாம் கொஞ்சம் தௌிந்து வருகிறது. உண்மையான தமிழ்க்கவியை அனுபவிக்கவேண்டும் என்ற அவா தமிழர் பலருக்கும் உண்டாகி வருகிறது.

குறவஞ்சி ஆசிரியர் காலத்தில் சாமான்ய மக்களுக்கும் ஜமீன்தார்களுக்கும் வின்னியாசமான செய்யுள்களிலும் கற்பனைகளிலும் மற்றும் போலியான விகடங்களிலுமே விருப்பம் இருந்தது. ஆகவே அவர்களுடைய விருப்பத்திற்கிணங்கியோ அல்லது மற்றப்புலவர்களோடு ஒட்டிப்போகும் காரணத்தினாலோ சிற்சில அவசியம் அல்லாத விஷயங்களும் கவிப்போக்குகளும் அங்கொன்று இங்கொன்று காணக்கிடக்கின்றன. அவைகளை ஒதுக்கிவிட்டு நூலைப்பார்ப்போமானால் ரொம்ப ரொம்ப வியக்கக்கூடிய தாயும் தெவிட்டாத ரஸம் உள்ளதாகவுமே இருக்கக்காண்போம். ஏதோ பழம் புத்தகங்களையும் நிகண்டுகளையும் வாசித்துவிட்டு அவைகளையுமே அப்படியுமிப்படியாக புரட்டுகிற காரியம் அல்ல. இயற்கையை - புற இயற்கையையும் மக்களின் உள இயற்கையையும் தன் இதயத்தோடு ஒட்டவைத்து அனுபவித்தவர்


ஓடக்காண்பது பூம்புனல் வெள்ளம்
ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்

இது புலவர் திருக்குற்றாலத்தைக் கண்டு பாடியதல்லவா! திணையிலக்கணத்தை முன்னால் வைத்துக் கொண்டு எழுதிய வெறும் சம்பபிரதாயச் செய்யுளா? மேலும் உண்மையான பழந்தமிழ்க் கவிகளை இதய தத்துவம் புலப்படும்படியாக ஊடுருவிக் கற்றிருக்கிறார்.

வாகனைக்கண் டுருகுதையோ - ஒரு
மயக்கமதாய் வருகுதையோ
மோகம்என்பது இதுதானோ - இதை
முன்னமே நான் அறியேன்! ஓ!
ஆகம் எல்லாம் பசந்தேனே - பெற்ற
அன்னைசொல்லும் கசந்தேனே
தாகம் அன்றிப் பூணேனே - கையில்
சரிவளையும் காணேனே.

காதல் துறையில் வெள்வளையைக் காணோமே! காணோமே! என்று பாடியதெல்லாம் பார்த்துச் சடைத்துப் போயிருக்கிறோம். ஆனால் நம்முடைய ஆசிரியர் அதைக் கையாளுகிற விதத்தில் நாயகி கைவளையல்களை உண்மையில் காணாமல் போக்கிவிட்டு அங்குமிங்குமாகத் திகைத்துப் பார்க்கிற சாயல் நம் கண் முன்னால் வந்துவிடுகிறது.

குறத்தி வருகிறது, குறி சொல்கிறது, வேடன் வருகிறது, பறவைகள் மேய்கிறது முதலான பாடல்களைப் பார்த்தால் கவியெல்லாம், காட்டிலும் மலையிலும் தான் சஞ்சரிக்கிறது என்று சொல்லத் தோன்றும். எத்தனை தடவை படித்தாலும் அந்தப் பாடல்கள் புதிதாகவே தோன்றும்.

சமயபக்தி என்றால் அது சம்பந்தமாக மூர்த்தியையும் ஸ்தலத்தையும் அனுபவிக்கிறதும் கூடத்தான்.

சுற்றாத ஊர்தோறும் சுற்றவேண்டாம் புலவீர்
குற்றாலம் என்றொருகால் கூறினால்

போதும், என்று அழகாக அனுபவித்துப் பாடுகிறார். இயற்கை அழகையும், கடவுள் தத்துவத்தையும் ஒன்றாய்ச் சேர்த்து அனுபவித்து விடுகிறார். சிருஷ்டி தத்துவங்களில் உள்ள உண்மைகளை தற்காலத்து அறிவியல் நிபுணர்களைப்போல நேர்முகமாகக் கண்டு அனுபவித்துப் பாடுகிறார். ஒரே ஒரு தத்துவந்தான் சகல பகுதிகளையும் ஒழுங்கான முறையில் இயங்கச் செய்கிறது என்பது தற்காலத்து அறிவியல் முடிபு. அதை இருநூறு வருஷங்களுக்கு முன் நமது மேலகரம் கவிராஜர்

சாட்டிநிற்கும் அண்டம் எலாம் சாட்டையிலாப் பம்பரம்போல்
ஆட்டுவிக்கும் குற்றாலத் தண்ணலார்

என்று உடல் புளகிக்கப் பாடுகிறார்.

இப்படிச் சிறிய விஷயம் பெரிய விஷயம் எல்லாவற்றையும் பற்றிப் பாடுகிறார். ஆனால் ஒன்று: அவைகளுக்குள் எல்லாம் ஒரு ஹாஸ்ய ரசமும் ஒரு பக்தி ரஸமும் பின்னிக்கொண்டு ஓடுவதைப் பார்க்கலாம். இதைப் பார்த்து அனுபவிக்கக் கொடுத்து வைத்தவர்கள் தமிழர்கள்தாம்.


ஆசிரியர் : இரசிகமணி சிதம்பரநாத முதலியார்

எழுதியவர் : (10-Jun-17, 8:38 pm)
பார்வை : 107

மேலே