பேறுகாலத்திற்குப் பின் தாய் நலம்

பேறுகாலத்திற்குப் பின் தாய் நலம்
எனக்கு மிகவும் அறிமுகமான ஒரு நபரின் பெயர் சீதா. அவருடைய திருமணம் பத்து வருடங்களுக்கு முன்பாக சிறப்பாக நடைபெற்றது. அவரின் திருமண வாழ்க்கை சுமூகமாக செல்லுகின்ற நிலையில் முதல் பிரசவத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவரின் சமூகக் கலாச்சாரப்படி முதல் குழந்தையின் பேறுகால பராமரிப்பு என்பது அப்பெண்ணின் தாய்வீடாகும். அவ்வாறே முதற்பேற்றின் கவனிப்பும் பராமரிப்பும் சிறப்பாக அமைந்தது.
அதன் பின்னர், இரண்டு வருடங்கள் கழிந்து மறுபடியும் சீதா கருவுற்றார். இப்பொழுது இரண்டாவது குழந்தையின் மகப்பேற்றையும் பராமரிப்பையும் ஏற்பது யார்; என்று மாப்பிள்ளை பெண் வீட்டாரிடையே தர்க்கம் ஏற்பட ஆரம்பித்தது. இவ்விடைக் காலகட்டத்தில் மாமியார் மருமகள் பிரச்சனை, சொத்துப் பிரச்சனை, குடும்பப் பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகளுக்கிடையில் காலம் நகர்ந்து சென்றிருந்தது. இறுதியாக தன் தாய் வீட்டிற்கே இரண்டாம் மகப்பேற்றிற்கு செல்வதாக முடிவெடுத்து தான் கருவுற்றிருந்த ஏழாம் மாதமே வந்துவிட்டார்.
அம்மா வீட்டில் புதியதாக திருமணமான அண்ணன், திருமணமாகாத ஒரு தங்கை என்ற நிலை இருக்க தனக்கு சொளகரியம் என்பது குறைவாக இருந்தது. மேலும் தன் சகோதரனிடம் திடீர் என்று ஏற்பட்ட கருத்து வேறுபாடு இருக்கும் பொழுது மகப்பேறுக் காலமும் நெருங்கி விட்டது. இரண்டாம் குழந்தையும் பிறந்தது. குறிப்பிடும்படியாக தாய் சேய் பராமரிப்பு என்பது சிறப்பானதாக அவருக்கு கிடைக்கவில்லை. இவ்வாறாக பல்வேறு பிரச்சனைகளால் மன உளைச்சலுக்குள்ளாக்கப்பட்ட சீதா மகப்பேறுக்குப் பின்பாக 24-வது நாள் மிகவும் மன அழுத்தத்திற்குள்ளாகி மனநோயாளியாகிவிட்டார்.
மகப்பேறு காலத்திற்குப் பின் பெண்ணானவள் மிகவும் பலவீனமாக இருப்பதால் இக்காலக்கட்டங்களில் நல்லதொரு அரவணைப்பும் உறுதுணையும் அவசியமான ஒன்றாகும். இக்காலக்கட்டம் உளவியல் ரீதியாகவும் உடல் மன ரீதியாகவும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய காலக்கட்டமாகும்.
“பெண்கள் வீட்டின் கண்கள்” என்பது பழமொழி. ஆம் ஒரு குடும்பத்தின் நலன்களுக்கும் வளர்ச்சிக்கும் குடும்பத் தலைவியின் பங்கும் பகிர்வும் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒரு பெண்ணின் வாழ்வில் பொற்காலம் என்பது கர்ப்பகாலமாகும். இத்தாய்மையே பெண்ணின் வாழ்வை முழுமையடைய செய்கின்றது. ஒரு பெண்ணானவள் கருவுற்று மிகவும் கவனத்துடன் கர்ப்ப காலத்தை கடந்து குறித்த நாளில் அழகிய குழந்தையை பெற்றெடுக்கிறாள். ஆனால் அத்துடன் அவளது பணி முடிந்து விடுவதில்லை. அக்குழந்தையை பேணி பராமரித்து தனது உடல் நலத்தையும் குழந்தையின் உடல் நலத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டியது ஒரு தாயான பெண்ணின் கடமையாகும். ஏனெனில் குழந்தையை பேணி பாதுகாக்கும் சில பெண்கள் அவர்களின் உடல் நலனில் சற்றும் அக்கறை கொள்ளாது பல்வேறுப் பிரச்சினைகளில் மாட்டிக் கொள்கின்றனர்.
குழந்தையை பெற்றெடுக்கும் தருணம் முதல் அக்குழந்தையை வளர்ந்து பெரியவனாக்கி அவன் ஆசைகளை நிறைவேற்றி அவன் வாழ்வில் வெற்றி பெறுவதை காணும் வரையிலும் அவள் தாய்மை உணர்வு சிறு அளவும் குறைவதில்லை.
ஒரு தாயானவள் பிரசவத்திற்கு பின் பல மாறுதல்களை அதாவது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அடைகிறாள். எனவே வரும் முன் காத்தல் என்பதின்படி அதற்கேற்ப தன்னை தயார்ப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
குழந்தை பிறப்புக்குப் பின்னரான காலம் என்பது, குழந்தையானது தாயின் கருப்பையிலிருந்து வெளியேறும் குழந்தை பிறப்பு என்னும் நிகழ்வு நிகழ்ந்த அந்தக் கணத்திலிருந்து 6 கிழமைகள் (6 weeks ) வரையிலான காலத்தைக் குறிப்பதாகும்.
இக்காலத்தில் கருத்தரிப்பின் போது பெண்ணின் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் பழையபடி முந்திய நிலைக்கு மாறுகின்றன. இவ்வாறு 6 கிழமைகளில் ஏற்படும் மாற்றங்களை 3 வகையாகப் பிரிக்கலாம்.
1) இனப்பெருக்க உறுப்புகளின் உள்திருப்பம்
2) பால் சுரத்தலைத் தூண்டுதல் பாலூட்டல்
3) புதிய குழந்தையால் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப மனோபாவத்தை
சரிப்படுத்தலும் அதனால் குழந்தையுடன் ஏற்படும் பிணைப்பும்.
25% - 85% வரையான பெண்களில் குழந்தை பிறந்த சில நாட்களுக்குள் வேறுபட்ட உளவியல் பிரச்சனைகள் வேறுபட்ட அளவில் காணப்படுகின்றது. இதனை உடனடியாகக் கண்டுபிடித்து சிகிச்சையளித்தல் அவசியமாகும். மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வான குழந்தை பிறப்பின் பின்னர் 70% மான பெண்கள் குழந்தை பிறப்பின் பின்னரான 10 நாட்களில் சில மனநிலை மாற்றங்களை உணர்வதாகக் கூறப்படுகின்றது. இவை ஒரு வகையான சஞ்சலம், சோர்வு, கவலை, அமைதியின்மை போன்ற மாற்றங்களாகும்.
வெவ்வேறு நாட்டு கலாச்சாரத்தில் குழந்தை பிறப்புக்குப் பின்னரான காலத்தின் பராமரிப்பானது வேறுபட்டுக் காணப்படுகின்றது. மேற்கத்திய நாடுகளில் தாய்மார் குழந்தை பிறப்பு நிகழ்ந்த அன்றே குளித்து, சிறந்த உணவை உண்பதுடன்இ தமது உடல்நிலை இடம்கொடுக்கும் நிலையில் தமது வேலைகளைச் செய்ய ஆரம்பிக்கின்றனர். ஆனால் பல நாடுகளில் இந்த நடைமுறையில் மாற்றங்கள் காணப்படுகின்றன.
மேற்கத்திய நாடுகளல்லாத நாடுகளில், தனிப்பட்ட பராமரிப்பு முறைகள் காணப்படினும், அவற்றில் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. அவற்றில் குறிப்பிட்ட காலத்திற்கு தாயையும் குழந்தையையும் வெளியே எங்கும் செல்லவிடாமல், வீட்டிலேயே வைத்திருந்து பராமரித்தல் மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. இத்தகைய சம்பிரதாய முறையானது தாய்க்கு குழந்தை பிறப்பினால் ஏற்பட்ட களைப்பிலிருந்து மீண்டு கொள்ள காலத்தை வழங்குவதுடன், தாய்க்கும் சேய்க்கும் தொற்றுக்கள் ஏற்படுவதைத் தவிர்க்க உதவுவதாக நம்பப்படுகின்றது. இவ்வகையான பராமரிப்பு முறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் மூலம் சில சமுதாய அமைப்புக்கள் பாதுகாக்கப்படுவதாக நம்பப்படுகின்றது.
இந்தியாவிலும் பல பகுதிகளிலும், குழந்தை பிறப்புக்குப் பின்னர் தாய்க்கான கட்டுப்பாடான பராமரிப்புக் காலம் உண்டு. இது வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு கால அளவாக உள்ளது. வடக்கு, தெற்கு, மேற்குப் பகுதிகளில் பொதுவாக இது 40 நாட்களாகவும், தெற்கு இந்தியாவின் சில பகுதிகளில் இது 60 நாட்களாகவும் இருக்கின்றது. கிழக்கு, அதிகமாக வடகிழக்கு மாநிலங்களில் இவ்வகை சம்பிரதாயம் மிகவும் கண்டிப்பாக இல்லாதிருப்பதுடன், மிகவும் குறுகியதாகவும் இருக்கின்றது. இருந்தாலும் தற்போதைய காலத்தில் இத்தகைய நடை முறைகள் குறைந்து வருகின்றது. வேலைக்குச் செல்லும் தாய்மார்களுக்கு விடுமுறை எடுக்க முடியாமல் இருப்பதாலோ அல்லது தமக்கு இத்தகைய ஓய்வு அவசியமில்லை என்று எண்ணுவதனாலோ இந்தக் காலக் கட்டுப்பாடு குறைந்து வருகின்றது. தாய்க்கு வழங்கப்படும் உணவானது வெவ்வேறு பகுதிகளில் அந்த அந்தப் பகுதிக்கு ஏற்றவாறு அமைகின்றது. குழந்தைப் பிறப்புக்குப் பின்னர் தாயின் உடல் குளிர்மையாக இருக்குமென நம்பப்படுவதனால், உடலை சூடாக்கக் கூடிய உணவுகள் வழங்கப்படுகின்றது. அத்துடன் தாயின் உடலைப் பிடித்து விட்டு, உடல் தசைகளை இலகுவாக்குவார்கள்.
தமிழர்களின் கலாச்சாரத்தில் குழந்தை பிறந்து 31 நாட்களுக்கு தாய்க்கும் குழந்தைக்குமான தனித்துவமான பராமரிப்பு வீட்டில் வழங்கப்படும். தாயையும் சேயையும் ஒரு தனிப்பட்ட அறையில் வைத்து, இக்காலத்தில் பத்திய உணவு என அழைக்கப்படும் விசேட உணவு தாய்க்கு வழங்கப்படும். இந்த உணவு அதிகமான காரம் சேர்க்கப்படாத, வெவ்வேறு மசாலாப் பொருட்கள் கலந்த உணவாக இருக்கும். தாய்க்கு மருத்துவ குணங்கள் கொண்ட சில தாவர இலைகள் சேர்ந்த சுடுநீர் குளிப்பதற்கு அளிக்கப்படும்.
குறிப்பாக கேரளாவில் பேறுகாலத்திற்கு பின்பான தாய் சேய் பராமரிப்பானது சிறந்த முறையில் கையாளப்படுகிறது. இதனைக் குறித்ததான ஒரு விரிவான விளக்கத்தை தமிழர்களாகிய நாமும் அறிந்து பயன்பெறுவோம்.
கேரளம் இயற்கை மூலிகை வளம் நிறைந்த நாடாகும். பல்வேறு இயற்கை மூலிகைகள் மகப்பேற்றின் பின்னர் தாய்க்கான பராமரிப்பில் பெரிதும் உதவுகிறது. இந்த பராமரிப்பு சுகப் பிரசவமானால் 5 – ஆம் நாளிலிருந்தும் அறுவை சிகிச்சை எனில் 7 – ஆம் நாளிலிருந்தும் தொடங்கப்படுகின்றனர்.
அதாவது “வேது” என்ற பெயரில் தண்ணீரானது பெரிய பானையில் கொதிக்க வைக்கப்படுகிறது. அதனுள் ஆறு மூலிகைகள் இயற்கை போட்டு சூடாக்குகிறார்கள். ஒரு முறை இப்பானைத் தண்ணீர் சூடு செய்ய அடுப்பில் ஏற்றி வைத்தால் 15 நாட்களுக்கு பின்பே இறக்கி வைக்கப்படுகிறது. மூலிகைகள் அப்பானை தண்ணீருக்குள்ளேயே இருந்து ஊறிக்கொண்டே இருக்க வேண்டும். தொடர்ந்து குறிப்பிட்ட நேரங்களில் மறுபடியும் மறுபடியுமாக கொதிக்க வைக்கப்பட்டு அந்த சூடு வெள்ளத்தால் குளிக்கவும் ஒத்தணமும் கொடுக்கப்படுகிறது. அம்மூலிகைகளாவன:
1. நால்பாமரபட்டை-(ஆல், அரசு, அத்தி, இத்தி ஆகிய நான்கு பால் மரத்தின் பட்டைகள்) -1.5 கிலோ
2. நெல்லிக்காய் தோடு - 0.5 கிலோ
3. ராமச்சவேர் – 1.5 கிலோ
4. தென்னங் குறும்பல் – 5 (அ) 6
5. தென்னை பச்சை மடல் கொஞ்சம்
6. குருமிளகு கொடி கொஞ்சம்
குளியல்
குளிக்க வைக்கும் முன்பாக தன்வந்தரி குளம்பு சரீரம் முழுவதும் பூச வேண்டும். பின்பாக குடமஞ்சள் தேய்த்து சிறிது நேரம் அப்படியே இருந்துவிட்டு, மேற்கூறிய மூலிகைகள் போட்டு காய்த்த சூடு தண்ணீர் சரீரத்தில் ஊற்றியும் டவல் வைத்து துடைத்தும் ஒத்தணம் கொடுத்தும் தாயைக் குளிப்பாட்ட வேண்டும். இதனால் சரீரத்தில் உள்ள கெட்ட நீர் குறைகிறது. சோப்பு உபயோகிக்கக் கூடாது. தன்வந்தரி குளம்பு சூடாக்கியே சரீரத்தில் தேய்க்க வேண்டும். அறுவை சிகிச்சை எனில் கட்டி இல்லாத போர்வையைக் கிழித்து மடித்து அடிவயற்றில் வைத்து கட்டியே குளிக்க வேண்டும். குளி;த்த பின் கட்டி துணி(Binder or Belt) வைத்து அடிவயிற்றை கட்ட வேண்டும். தலையை பச்சை வெள்ளத்தில்தான் கழுவ வேண்டும்.
குடிப்பதற்காக
தசமூலாதி அரிஷ்டமும், சீரக அரிஷ்டமும் குறிப்பிட்ட அளவு தாய்க்கு குடிக்க வேண்டும்.
சுண்ட காய்த்துக் கொடுக்கும் பொருட்கள்
மொத்தம் 15 நாட்கள் சுண்ட காய்த்துக்(குறுக்கி) கொடுக்க வேண்டியவை. இவை வெறும் வயிற்றில் கொடுக்கவேண்டும்.
1. தும்பை இலை, கருப்புகட்டி, பச்சை அரிசிப் பொடி, நல்லமிளகு பொடி.
பச்சரிசியை சிறிதளவு ஊற வைத்து மிக்சியில் அடித்து மேற்கூறியவை சேர்த்து குறுக்க வேண்டும். மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் குடிக்கக் கொடுக்க வேண்டும்.
2. வேலி பருத்தி இலை - மூன்று நாட்கள்
3. கருவேப்பிலை - மூன்று நாட்கள்
4. தென்னம் பூக்கள் - மூன்று நாட்கள்
5. கஸ்தூரி மஞ்சள் - மூன்று நாட்கள்
இதனுடன் எசங்கு இலை, பூவரசு இலை சேர்த்துக் கொள்ளலாம்.
குறுக்கியது சாப்பிடாத அன்று குளித்து வந்த பின் கருப்புகட்டி காப்பியில் குருமிளகு பொடி போட்டு குடிக்கலாம்.
மேற்கூறியவை செய்யவில்லையெனில் பேற்று மருந்து என்று அங்காடிக் கடையில் வாங்கி நல்ல மிளகு, சின்ன வெங்காயம், பூண்டு கருப்புகட்டி, அரைத்து சேர்த்து சிறிதாக சூடாக்கி தாய்க்கு சாப்பிடக் கொடுக்கலாம் அல்லது குருணி குளம்பு கொடுக்கலாம்.
பேற்று மருந்து சாப்பிட்டால் பச்சை இலை குறுக்கி கொடுக்கக் கூடாது. இவ்வாறு வேது பிடித்து தலைக்கு குளித்தால் அன்று இக்குளியல் மாத்திரம் போதும். தலைக்கு குளிக்காத அன்று இரண்டு நேரம் காலை மாலையில் வேது பிடிக்க வேண்டும்.
குழந்தை பராமரிப்பு
பயறு பொடி அல்லது Baby Soap போட்டு குளிப்பாட்டலாம். குளிக்கும் முன்பு தேய்க்கும் தேங்காய் எண்ணை மில்லில் ஆட்டி வாங்கிய கலப்பில்லாத தேங்காய் எண்ணையை உபயோகிப்பதே சிறந்தது.
இவ்வாறான பராமரிப்பு முறைகளால், தாய்மாரின் உளவியல் பிரச்சனைகள் பொதுவாக ஏற்படுவதில்லை என்று குறிப்பிடப்படுகின்றது. தொழில்வள நாடுகளில் 50 – 85% மான தாய்மாரில் இக்காலத்தில் Baby Blues என அழைக்கப்படும் ஒருவகை உளவியல் பிரச்சனை காணப்படுவதாகவும், 15 – 25% மான தாய்மாரில் குழந்தை பிறப்புக்குப் பின்னரான காலத்தில் வரும் மனத்தளர்ச்சி ஏற்படுவதாகவும் கூறப்படுகின்றது.
உலக சுகாதார நிறுவனத்தின் அக்டோபர் 2013 - இல் இற்கான அறிக்கையில், குழந்தை பிறப்புக்குப் பின்னரான காலமே தாய்க்கு சேய்க்கும் மிகவும் நெருக்கடியான காலமாகவும் இக் காலத்திலேயே தாய் மற்றும் குழந்தையின் இறப்பு அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
எனவே பெண்களின் சிறப்பு கருதி ஒவ்வொருவரும் தம் குடும்ப பெண்களின் பேறுகாலத்திற்குப் பின் தாய் நலம் சிறக்க நல்ல பராமரிப்பு முறைகளைக் கைக்கொள்ள வேண்டும். இக்காலக்கட்டங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பராமரிப்பதால் அவர்களுக்கு மன மகிழ்ச்சியும் புத்துணர்வும் புதிய உத்வேகமும் உண்டாக வழிவகுக்கிறது.

எழுதியவர் : ஆ.ஷைலா ஹெலின் (10-Jun-17, 11:48 pm)
சேர்த்தது : ஆஷைலா ஹெலின்
பார்வை : 671

மேலே