நீள்வெளிச்சத்தின் சாய்ந்த குரல் - ஒரு பக்க கதை- கவிஜி

நீள்வெளிச்சத்தின் சாய்ந்த குரல் - ஒரு பக்க கதை- கவிஜி
***********************************************************************

திட்டமிட்ட விருந்தோம்பல் தான்.

சமீபத்தில் ஏற்பட்ட பழக்கம் என்றாலும்...இரவு உணவுக்கு சென்றிருந்தான் திரன்.

தாமரையின் குடும்பமே வரவேர்த்து முகப்பு அறையில் அவனை அமர வைத்தது அவனுள் கொஞ்சம் கூச்சத்தை வெளிப்படுத்தியது. கொஞ்சம் கூச்சம் கொண்டாலும்... தாமரையின் அன்பான கண்களும்.. அவளின் அம்மாவின் பேச்சும்.. அப்பாவின் விசாரிப்பும்... தங்கையின் புன்னகையும்.. தம்பியின் உரிமையும் திரனை என்னவோ போல ஆக்கி இருந்தது. ஏதோ ஒரு நெருக்கத்தை அவனிடமிருந்து அவனே உணர செய்தது. நன்றாக மூச்சிழுத்துக் கொண்டான். அந்த வீடு முழுக்க ஒரு வகை நறுமணம் வீசிக் கொண்டிருந்ததை அவனையும் அறியாமல் அவன் மூளை கிரகித்துக் கொண்டிருந்தது.

தாமரை வீடு முழுக்க சுற்றிக் காட்டினாள். எல்லா ஜன்னல்களும் மூடியே இருந்தன. திறக்க கண்கள் காட்ட, அவள் ACயை காட்டி புன்முறுவலித்தாள். பதிலுக்கு மெல்ல முணுமுணுத்த பாடலில்...இடையிடையே ம்ம்ம்ம்.... ம்ம்ம்ம்ம்... என்ற அணத்தல் வந்தது போல உணர்ந்தான். சட்டென கண்கள் நிலை கொள்ள அவளின் தங்கை எதிரே இருந்த ஜன்னலுக்குள் இருந்து தலை மட்டும் எட்டிப் பார்த்து சட்டென காணாமல் போனது போல இருந்தது.

"யாரோ எட்டிப் பார்த்த மாதிரி இருந்துச்சு" என்ற திரனை கண்களால் அளந்து "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்னு சொல்லுவாங்க.... உங்களுக்கு அப்டித்தான் இருக்கு" என்று சொல்லி சிங்கப்பல் தெரிய சிரித்தாள். பால்கனி தாண்டி எட்டிப் பிடித்தால் தட்டி பறிக்கலாம் என்பது போல பால் நிலா.......கூட ராத்திரி. பாவையோ ஒரு மாதிரி என்று பதில் முனங்கல் தாமரையின் கழுத்தோரம் இறங்கி வந்திருந்த வெளிச்சத்தில்....

"நாம பார்த்து பேசி ஒரு பாத்து நாள் இருக்குமா... ? எப்டி அதுக்குள்ளே இவ்ளோ நெருக்கம்.... இந்த வாழ்க்கை என்னென்னமோ பண்ணுது... இல்ல.. எத்தனை விதமான அன்பவங்கள்... அன்புகள்... இல்லையா திரன்....?" தாமரை நீள்வெளிச்சத்தின் சாய்ந்த குரலோடு பேசுவது போல இருந்தது.

சிலிர்த்த புருவங்களின் வழியாக அவளை பார்த்த திரனுக்கு நீல வண்னத்தில் ஆசை கிளர்ந்தது. பெண்ணில்லாத இந்த வாழ்வு எத்தனை வறட்சியானது. வீணானது. அவளை அணைத்து முத்தமிட வேண்டும் போல இருந்தது. அவளின் நிழலோடு அவனின் நிழல் இணைந்து ஒரு நொடி கடந்து நடக்கையில்... அவனுள் சொட்டிய ஆசையின் நிறத்துக்குள் அத்தி பூ மனம் இருக்கலாம்.

"சரி வாங்க சாப்டுட்டே பேசலாம்" என்றாள் தாமரை...

சாப்பிட்டுக்கொண்டே தலை தூக்கியவன் எதிரே... கலைஞர் டிவி அளவுக்கு மாலையிட்ட ஒரு புகைப்படம். உற்றுப் பார்த்தான். விக்க தொடங்கியது. அது தாமரையின் தங்கை...

"என்ன பாக்கறீங்க.... எல்லாரையும் அறிமுகம் செஞ்சு வெச்சேன்.. இவளை மறந்துட்டேன்... சாரி மல்லிகா..." என்று புகைப்படத்தை பார்த்து சொல்லிக் கொண்டே... "என் சிஸ்டர்.... 12த்ல 1100 மார்க் வாங்கறேன்னு சவால் விட்டு 10 மார்க் குறைஞ்சு போச்சுன்னு தற்கொலை பண்ணிக்கிட்டா... ம்ம்ம்ம்.... சரி விடுங்க.. நீங்க சாப்பிடுங்க...." என்ற தாமரை மெல்ல தலை குனிந்தாள்.

திக்கென்று தாக்கியது வார்த்தை.

"என்ன சிஸ்டர் செத்துட்டாளா.... அயோ அவ இவ்ளோ நேரம் ஹால்ல தான எல்லார் கூடவும் இருந்தா.... இங்க எதிரே உக்காந்து சாப்டுட்டு தான இருக்கா...."

"திரன் என்ன சொல்றீங்க.... அவ உங்க கண்ணுக்கு தெரியறாளா.. ஓ காட்...... மல்லிகா.. எங்க இருக்க.... எங்க முன்னால..வா...... ப்ளீஸ்... உன்ன பாக்கணும்....." தாமரையுடன் சேர்ந்து அவளின் அம்மாவும் அப்பாவும் தம்பியும்... அங்கும் இங்கும் தேடி அழுது புலம்ப.. வீடு... நிழல் தேச கனவானது போல மிதந்தது.

திரன்.... வேர்த்து விறுவிறுத்து விட்டால் போதும் என்று வீட்டை விட்டு வேக வேகமாய் ஓடி வெளியே வந்து பைக்கை எடுத்துக் கொண்டு தலை தெறிக்க வீதியில் மறைந்தான்.

பால்கனியில் நின்று........தாமரை, அவளின் அம்மா, அப்பா, தம்பியுடன் மல்லிகாவும் நின்று கொண்டு விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

"ஏப்ரல் 1 க்கு இப்டியாடி ஏமாத்தறது.... பாவம் திரன், என்னை பேய்னு நினைச்சு நிஜமாவே பயந்துட்டார் போல... கூப்பிட்டு சாரி சொல்லுடி..."என்று பொய் கோபத்தோடு சிரித்தாள் மல்லிகா.

எங்கிருந்தோ வந்து அந்த வீட்டையே சுற்றிக் கொண்டிருந்த சிவந்த நிற காற்று இன்னும் வலுவானது.....

வீட்டு காம்பவுண்டுக்குள்....இன்று காலை வந்து விழுந்து கிடந்த செய்தி தாளில் ஒரு ஓரத்தில்..." பல்லடம் அருகே... எதிரே வந்த அரசு பேருந்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான வேனில்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அகால மரணம் என்று செய்தி இருந்தது...."

காற்று மெல்ல திருப்பிக் கொண்டிருந்தது.....வீட்டை......!

கவிஜி

எழுதியவர் : கவிஜி (11-Jun-17, 10:29 am)
சேர்த்தது : கவிஜி
பார்வை : 225

மேலே