தண்டனை

தண்டனை
….
இரவு சரியாக 11 மணி.

ரகு தன் கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்துக்கொண்டு, விசிலடித்தபடியே அந்த, இருபக்கமும் மரங்களால் சூழ்ந்த, ஊரின் வெளிப்புறத்திலமைந்த, தார்ச் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தான். அவன் வேலை செய்யும் நிறுவனம் அவனுக்கு அளிக்கும் மன அழுத்தத்தை இப்படி நீண்ட பயணம் செய்வதன் மூலம் குறைத்துக் கொள்வான்.

அந்த சாலையில் ரகுவின் காரில் இருந்து வரும் வெளிச்சம் தவிர, இரண்டே இரண்டு தெருவிளக்கும் இருந்தது.

சிறிது தூரத்தில் ஒரு பெண் லிஃப்ட் கேட்பதுபோல் வண்டியை மறித்துக் கை காட்டிக் கொண்டிருந்தாள்.
சரியாக அவளருகே சென்றதும் ரகு காரை நிறுத்தினான்.

“சார்..ப்ளீஸ் சார் என்ன பக்கத்துல இருக்குற ’பஸ் ஸ்டாப்’ எங்காவது எறக்கிவிட்டுடுங்க சார். ப்ளீஸ் சார்” என்று படபடத்தாள்.

“ஐயோ..நீங்க இவ்ளோ கெஞ்ச வேண்டியதே இல்ல. ’கெட் இன்’…” என்று சொல்லி கார்க் கதவைத் திறந்தவன் “ஆனா ஒரு கண்டிஷன். நீங்க சொன்ன மாதிரி உங்கள எறக்கி எல்லாம் விட முடியாது” என்றான்.

“என்ன?” என்று திகைத்துத் திரும்பினாள் அந்தப் பெண்.

“அப்டியில்ல…நா ஸ்டாப் பண்ணுவேன் நீங்களாதான் எறங்கிக்கணும்” என்றுவிட்டு ஏதோ பெரிதாக ஜோக் சொல்லிவிட்டவன் போல அவன் சத்தமாகச் சிரித்தான்.

சிறிது சிறிதாக அந்தப் பெண்ணின் படபடப்புக் குறைந்து இயல்பு நிலைக்கு வந்தாள். ரகு அவளிடம் பேச்சுக் கொடுத்தான்.

“உங்க பேரென்ன?”
……….
”நீங்க எங்கருந்து வர்ரீங்க?”
……………

“எப்டி இந்த ஆள் நடமாட்டமில்லாத எடத்துக்கு வந்தீங்க?”
……………

”என்னங்க நான் கேட்டுட்டே இருக்கேன். நீங்க ஒண்ணுமே சொல்லமாட்…” என்று பேசிக்கொண்டே திரும்பியவன் கார் ஓட்டுவதில் கவனமற்றவன் போல் விழிகள் குத்திட்டு நிற்க திகைத்துப் போய் சிலையாகிவிட்டான்.

அங்கே..

அந்தப்பெண்ணின் கை இரண்டும் அவன் கழுத்தை நெருங்கியது. நெருங்க நெருங்க அவளது கை நகம் வளர்ந்துகொண்டே போனது. அவளது வாய் கோரமாகத் திறந்து முன்னிரண்டு பற்களுக்கு அருகிலுள்ள இரு பற்களும் நீண்டு அவனது கழுத்தில் பதிந்து இரத்தம் பீறிட…..


”’ச்சே’..இந்த இன்வோட்டர மொத மாத்தணும். ரெண்டு மணி நேரம் கூட தாங்க மாட்டேன்னுது” என்று புலம்பிக்கொண்டே படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை கீழே வைத்துவிட்டு, எழுந்து அந்த இருட்டில் தடவித் தடவி கார்ச்சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான் குணா.

கீழே ஹவுஸ் ஓனரிடம் சென்று “சார் எப்ப சார் கரண்ட் வரும். ஏதோ வேல அதனால ரெண்டு மணி நேரம் கரண்ட் வராதுன்னு சொன்னிங்க?” என்று கேட்டான்.

“தம்பி கொஞ்சம் பொறுத்துக்கோங்க. இன்னும் அரை மணி நேர வேலதானாம்” என்று அவர் சொல்லவும் காரைக் கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டான்.

“மொதல்ல இந்த வீட்ட மாத்தணும்” என்று புலம்பிக் கொண்டே சென்றான்.

கடிகாரத்தைத் திருப்பி மணி பார்த்தான். மணி 11 என்றிருந்தது. சிறிது நேரப் பயணத்தின் பின் தூரத்தில் ஒரு உருவம், நின்றிருந்த காரில் ஒரு காலை மடக்கி, ஒரு காலை தரையில் ஊன்றி, கையைக் கட்டிக் கொண்டு நின்று கொண்டிருப்பது தெரிந்தது.

பக்கத்தில் செல்லச் செல்ல அது ஒரு பெண் என்று தெரிந்தது.

‘இன்னக்கு என்ன ஆனாலும் வண்டிய மட்டும் நிறுத்தவே கூடாது’ என்று எண்ணிக் கொண்டான். சிறிது நேரத்துக்கு முன்பு படித்த கதை வேறு நினைவுக்கு வந்துகொண்டிருந்தது.

அந்தப் பெண் கையைக் கட்டியபடியே கார் அருகே வந்தாள். இப்போது அவள் முகம் தெளிவாகத் தெரிந்தது.

’இதுக்குப் பேசாமப் பேயே வந்திருக்கலாம்’ என்று நினைத்துக் கொண்டான்.

அவன் வண்டியை நிறுத்திவிட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் கார்க் கதவைப் பார்த்தாள்.

அவன் “ஓ… சாரி..” என்றுவிட்டு கதவைத் திறந்துவிட்டான்.

சிறிது நேரம் அங்கே அமைதி நிலவியது. அவன் இதயம் துடிப்பது வெளியே கேட்டது.

“மெசேஜ் பாத்திங்களா?” என்றாள் அந்தப் பெண்.

“என்னது..புரியல?” என்றான் அவன்.

”நான் மெசேஜ் பண்ணியிருந்தேனே பாத்திங்களான்னு கேட்டேன்” என்றாள் அவள் அழுத்தமாக.

“நீ மெசேஜ் அனுப்பியிருந்தயா?”

அவள் பதில் எதுவும் பேசாமல் ஜன்னல் பக்கம் வெளியே திரும்பி சில பெரிய மூச்சுவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தாள்.

அவனுக்குத்தான் இதயம் நின்று, நின்று துடித்துக்கொண்டிருந்தது. புத்தகம் படித்துக் கொண்டிருந்தபோது ‘மெசேஜ் டோன்’ அடித்தது இப்போதுதான் அவனுக்கு நியாபகம் வந்தது.

இன்னும் அவன் அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

”இப்பவாவது எடுத்துப் பாக்கலால்ல” என்றாள்.

அவன் “ஓ..சாரி” என்று கூறிக்கொண்டே ஃபோனை எடுத்துப் பார்த்தான்.

ஆமாம். அவள் அனுப்பியிருந்தாள். அதில்..

’நான் கார எடுத்துட்டு வெளிய வந்திருக்கேன். திரும்பி வர்ற வழியில் பெட்ரோல் தீந்துடுச்சு. கார அங்கயே நிறுத்திட்டு நானும் நிக்கிறேன். நீங்க உங்க கார எடுத்துட்டு வந்து என்னக் கூட்டிட்டுப் போங்க’ என்று எழுதி அவள் எங்கே நின்று கொண்டிருக்கிறாள் என்ற தெளிவான முகவரியும் அனுப்பியிருந்தாள்.

அவளுக்கு லிஃப்ட் கேட்கும், கொடுக்கும் பழக்கம் கிடையாது என்பது அவனுக்குத் தெரியும்.

படித்து முடித்துவிட்டு முகத்தில் இருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டு காரை செலுத்தினான். வீடு வரும்வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை. வீடு வந்ததும் அவள் கோபத்துடன் வேகமாக இறங்கி வீட்டுக்குள் சென்றாள். அவனும் அவளை சமாதானப்படுத்துவதற்காக அவளைத் தொடர்ந்தான்.

அவள் வாசலில் நின்றுகொண்டு ”நீங்க எங்க வர்றிங்க?. கார்ல நான் வாங்குன பொருள் எல்லாம் இருக்கு போய் எடுத்துட்டு வாங்க” என்றாள்.

“இத மொதல்லயே சொல்லியிருக்கலாம்ல. நாம வரும்போதே அதையும் எடுத்துட்டு வந்திருப்பேன்ல?” என்று சத்தமாக ஆரம்பித்து முணுமுணுப்பாக முடித்தான்.

“ஆங்..என்ன இவ்ளோ நேரம் அங்க நிக்கவச்சிங்கல்ல அதுக்கு தண்டன” என்று சொல்லிவிட்டு கதவை அடைத்துக்கொண்டு சென்றுவிட்டாள் அவன் மனைவி.
...
மனோதினி

எழுதியவர் : மனோதினி (10-Jun-17, 5:58 pm)
சேர்த்தது : மனோதினி ஜெ
Tanglish : thandanai
பார்வை : 397

சிறந்த கவிதைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே