பூம் பூம் மாட்டுக்காரன்-----மங்களேஸ்வரி மங்களமா அருள்வா
பூம் பூம் மாட்டுக்காரன்.......மங்களேஸ்வரி மங்களமா அருள்வா.!
============================================================
கற்பனைவளத்தோடு கல்லிலே கலைவண்ணம் காட்டி
—கல்லையும் பேசச்சிரிக்க வைத்தான் தம்கைத்திறத்தால்!
வாழும்கலையறிந்து கலாசார வழியறிந்து வகையாய்
—வாயில்லா ஜீவனையும் பேசவைத்தான் தன்சைகையால்!
அரிய பழந்தமிழ்க் கலையாய் பூம்பூம் மாடுண்டு!
—அருகிவரும் கலையாக ஆனதுவு மெங்கள்கலையே!
அலங்கார ஆடையுடன் ஆரூடம் சொல்லும்ஜீவன்!
—அருங்கலை வளர்க்கும் மாட்டை வாங்கவிற்கமுடியாது!
மக்களப்பெத்த மவராசி!..புள்ளயப்பெத்த புண்ணியவதி!
—மங்களேஸ்வரி வந்துருக்கா! மங்களமாவுன வாழ்த்துவா!
பாட்டுடன் இதுபோல வீடுவீடாய்ச்சென்று நற்குறிநல்கும்
—மாட்டுடன்பேசும் மனித நேயமுடையது ஆதியனெனுமினம்!
குலத்தொழிலாய்க் குறிசொல்லிக் குடும்பம்பல காப்பதற்கு..
—கொடுப்பதையே தானமாய்ப்பெறக் கொம்புடன் பழக்கினான்!
வீடுவீடாய்ச் சென்றுதலையாட்டி வித்தைபல காட்டி..
—விருப்பமுடன் மனமுவந்து மனிதருடன் பேசவைத்தான்!
நல்லகாலம் வருமென நல்வார்த்தை சொல்வோம்யாம்!
—வாழ்க்கை விளிம்பிலேயே வாழ்நாள் முழுதும்நின்று..
வீட்டுவாசலில் நல்வரவை எதிர்நோக்கும் மனிதர்களுக்கு..
—வாழ்வியல் நலம்சொல்லும் நல்லமனிதர்கள் நாங்கள்!
சிற்றன்னைக் கொடுமைபோல் பலகாலம் நாங்களும்
—இயற்கையன்னை பரிவின்றி எம்ஜீவனுக்கு வழியில்லை!
அடிமாடாய் ஆகாமல் அரசுதானதைக் காக்குமா..?
—ஆண்டியாய்த் திரியுமெங்கள் வேதனை யாருக்கும் புரியுமா?
குடும்பமுண்டு ஆனால் குடும்பஅட்டை இல்லை?
—வாக்குரிமையுண்டு வாக்காளர் அட்டை இல்லை?
மரபுசார்ந்த யெம்வாழ்வின் மேலரசுமனம் வைக்குமா?
—தனிக்கவனம் செலுத்த தலைசாய்க்குமா அரசு..?
ஐந்தறிவில் பூம்பூம் மாடுனக்குக் கலையில் பங்குண்டு!
—ஆறறிவில் பூம்பூம்மாடெனப் பட்டம் பெற்றவருமுண்டு!
அனைத்துக்கும் ஆம் இல்லை தெரியுமானால்..
—அருங்கவிதைக் கேள்விக்கும் பதில்சொல் மங்களேஸ்வரி!