திருவைகுண்டம்

திருவைகுண்டம் - எங்கள் ஊருக்கு அருகில் உள்ள பேரூராட்சி . இதற்கு முன் சில முறை சென்றிருக்கிறேன் . ஆனால் இம்முறை ஒரு நோக்கம் இருந்தது . அங்கு மண்பாண்டம் செய்யும் தொழில் சிறப்பு வாய்ந்தது . அதை பார்வையிட வேண்டும் என்று சென்றிருந்தேன் .


பாதி வழிக்கு மேல் கிராமங்கள் வழியான பயணம் . சாலையின் இரு புறமும் வயல்கள் தான் . ஆனால் பெரும்பாலான வயல்களில் எதுவும் பயிரிட படவில்லை . ஒரே ஓர் வயலில் மட்டும் புட்டுப்பழம் செழித்திருந்தது . அதை யாரும் அறுவடை செய்யவில்லை போலும் . வெகு சில நாட்களாகவே அந்த வயல் அப்படித்தான் காட்சியளிக்கிறதாம் . மீள் பயிருக்காக என்றால் கூட அத்தனையும் விட தேவை இல்லை . அங்கங்கே பருத்தி பயிரிட்டிருந்தார்கள். அதன் முகப்புகளில் சோள நாத்து பயிரிட்டிருந்தார்கள். தண்ணீர் பற்றாக்குறையால் பருத்தி துளசி செடி அளவே வளர்ந்திருந்தது .


கருப்பு என்றால் அது தான் கருப்பு . அந்த நிறத்தில் ஒரு பறவையை கண்டேன் . அது கொஞ்சம் சிறிய பறவை தான் .அதன் வால் பகுதி மீனின் வால் பகுதி போல் இருந்தது . சில வினாடிகளில் அது பறந்து விட்டது . மிக சிறிய , கையளவே உள்ள பழுப்பு நிற பறவை ஒன்றை கண்டேன் . அது சற்று மெலிவாக தான் இருந்தது . அது சிட்டுக் குருவி போல் இல்லை . அது எங்கள் பேருந்துக்கு முன்னாள் சாலை பள்ளத்தில் வந்தமர்ந்து .பேருந்தில் அடி பட்டுவிடுமோ என்ற பயத்தில் 'ஓய் ஓய் குட்டிமா ' என மனதுக்குள் கூச்சலிட்டேன் . ஆனால், அது அசால்ட்டாக பறந்து விட்டது . நான் கண்ட இந்த இரு பறவைகளையும் இதற்கு முன் கண்டதாக ஞாபகம் இல்லை . எங்கள் ஊரில் சில நிறுவனங்கள் சில பகுதிகளை சுத்தம் செய்ததாகவும் , அங்கிருந்த பறவைகளை ஊருக்குள் காண முடிவதாகவும் சில செய்திகள் நடமாடுகின்றன . உண்மையாகவும் இருக்கலாம் .

திருவைகுண்டத்தில் முதலில் சிவன் கோவில் சென்றோம் . அது முழுக்க முழுக்க கல்லால் ஆன கோயில் . கோபுரத்திற்கு மட்டுமே வண்ணப்பூச்சு . நாங்கள் சென்ற பொழுதில் கோவிலில் இயற்கை வெளிச்சம் மட்டுமே இருந்தது , பெரிய தூண்கள் , மண்டபங்கள் , கற்சிலைகள் , யானை குதிரை சிலைகள் என எல்லாமே அழகு . இவை எல்லாவற்றையும் விட என்னை கவர்ந்தது அங்கு நிலவிய அமைதி தான் . மொத்தமே பத்து பேர் தான் இருந்திருப்போம் . அந்த சலனமற்ற அமைதியில் எத்தனை கவியும் வடிக்கலாம் . நாங்கள் முதல் முறை செல்வதால் கோவிலுக்குள் தொலைந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு பெரியவர் பின்னால் சென்றோம் . அவர் சைவ இலக்கிய பாடல்களை பாடிக் கொண்டே வந்தார் . நல்ல கணீர் குரல் அவரது . தெளிவான உச்சரிப்பு . அந்த பாடலில் பக்தியை விட ஏதோ ஒன்று இருக்கிறது . அது பக்தனுக்கு இறைவன் மீதான காதலா இல்லை தமிழின் இயல்பே அதுதானா என்று தெரியவில்லை .


எனக்கொரு வருத்தம் உண்டு . ஏன் சைவ,வைணவ இலக்கிய பாடல்களை போன்று கிறிஸ்த்தவ , இஸ்லாமிய இலக்கியங்கள் நடைமுறையில் இல்லை . பொது ஊடகங்களில் கூட நம்மால் சைவ , வைணவ பாடல்களை கேட்க முடியும் . ஒருவேளை , கிறிஸ்த்தவ , இஸ்லாமிய இலக்கியங்கள் மெத்த படித்தவர்கள் வட்டாரத்திலேயே சுருங்கி விட்டனவோ ? மதங்களின் வழிபாட்டு முறைகளில் நிச்சயம் வேறுபாடு உண்டு . வழிபாட்டு முறைகளில் இலக்கியங்களை திணிக்க வேண்டாம் . குறைந்த பட்சம் அதன் இசை வடிவங்களோ இல்லை வேறு ஏதோ வடிவங்களிலோ அது பொது ஊடகத்தில் வந்தால் நலமாக இருக்கும் என நினைக்கிறேன் . ஒரு இலக்கிய வகையோ , வடிவமோ , பிரிவோ , நூலோ எதுவாக இருந்தாலும் காலம் தாண்டி நிற்க வேண்டுமாயின் அது ஏடுகளோடு அல்லாமல் , என் வாழ்வின் ஏதோ ஒரு சந்தர்பத்தில் , தருணத்தில் நான் அதை உணர்ந்திருக்க , அனுபவித்திருக்க வேண்டும் என எனக்கு தோன்றுகிறது . அவற்றை காக்க வேண்டியதன் கடமை நமக்கிருக்கிறது .

இதை ஏன் சம்மந்தமில்லாமல் இப்போது கூறுகிறாய் என நீங்கள் கேட்பது புரிகிறது . நான் அந்த பக்தி பாடலை உள்வாங்கி கொண்டே இவற்றையெல்லாம் யோசித்து கொண்டே பிரகாரம் சுற்றி வந்தேன் . கோவிலை சுற்றி, குட்டி ரதங்கள் நிறுத்தும் மண்டபம் . அதன் நிழலால் கால் சுடவே இல்லை .


சிவன் கோவிலில் இருந்து வெளியே வந்து , இன்னொரு கோவில் கும்பாபிஷேகம் சென்றோம் . வேக நிறுத்தத்திற்கான அறிவிப்பு கம்பம் கோவில் பந்தலுக்குள் இருப்பதைக் கண்டேன் . என்ன சொல்ல நான் ? விவேக் சாரை நினைத்துக் கொண்டேன் .


பின் சில வேலைகளுக்கு பின் , மண்பாண்டம் செய்வதை காண புறப்பட்டோம் . அப்போது தான் ஒரு நல்லவர் சொன்னார் , அவர்கள் காலையில் தான் வேலை செய்வார்கள் . இதை இவ்வளவு மதியமாவா சொல்றது .. ? படம் பார்க்க திரையரங்கத்திற்கு சென்று பாப்கான் மட்டும் கொறித்து வருவது போல் ஆகிவிட்டது .

பின் வேறு வழியில்லாமல் , பேருந்து ஏறி புறப்பட்டு விட்டோம் . அடுத்த முறை செல்லும் போதாவது மண்பாண்ட தொழில் நடைபெறுவதை பார்க்க வேண்டும் .

எழுதியவர் : அனுசுயா (18-Jun-17, 4:44 pm)
பார்வை : 138

சிறந்த கட்டுரைகள்

மேலே