மரித்துப் போனாயா
உடல் மண்ணிற்கு உயிர் தமிழிற்கு - இதை
உரக்கச் சொல்வோம் உலகிற்கு...!
உயிர் வதைத்தாலும்
உடல் புதைத்தாலும் - நல்
உரமாவோம் தமிழ் மண்ணிற்கு....!
கூட்டாளியென கூறிக்கொண்டு
கூண்டோடு நமை
கொள்ளையடித்திட
கும்பல் பலவுண்டு - தமிழா
கும்பல் பலவுண்டு...!
நெடுவரலாறு கொண்டவெனினும்
தன் வரலாறு அறியா தற்குறி என்றேவானாயோ - தமிழா என்றேவானாயோ....!
நினைவில்கொள் தமிழா - நின்
நினைவில்கொள் தமிழா...!
வீரத்தால் உனை வீழ்த்தியவரில்லை...
துரோகத்தால் நீ வீழ்ந்தது
பலமுறை
சுவடுகள் சொல்கிறது - காலச்
சுவடுகள் சொல்கிறது...!
வெட்டுண்ட ஒரு கரத்தின்
வேதனையை ரசித்துக்கொண்டே
மறுகரத்தில் வாளேந்திய
மாசறு மறவனடா நீ....!
போதையில் ஊறிய தமிழா. ...!
உனக்கு உணர்வகற்றம் செய்து
அன்னையின் உடல் அறுக்கப்படுகிறது..
உதிரத்தோடு உறுப்புகள் திருட....!
மறத்துப் போனாயா..- இல்லை
மரித்துப் போனாயா..?
மொழி அழிகிறது
விழிக்கவில்லை நீ...!
இனம் மறைகிறது
சினங்கொள்ளவில்லை நீ..!
தமிழ் சரித்திரம் புதைகுழியில்...
நம் தலைமுறையோ பெரும்பழியில்...!
எங்கே எவனிடம்
அடகு போனது உன்
வீரமும் மானமும்...
சொல்..தமிழா...!
விலை உயிரென்றாலும்
கொடுத்து மீட்கிறோம்.....!