வாழ்க்கை வழங்கும் பெருமாளே
சீரில் லாத குணமுள்ளேன்;
சிறப்பில் லாத அறிவுள்ளேன்;
பேரில் லாத வாழ்வுள்ளேன்;
பிடிப்பில் லாத நிலையுள்ளேன்;
நேரில் லாத நடையுள்ளேன்;
நினைத்து நினைத்து அழுதுன்கீழ்
வேரில் லாத மரம்போல
விழுந்தேன் காப்பாய் பெருமாளே!
முடிப்ப தாக ஏமாற்றி
மூத்தோர் பெற்றோர் ஏமாற்றிக்
கொடுப்ப தாக ஏமாற்றிக்
குழந்தை மனைவி ஏமாற்றி
நடப்ப தாக ஏமாற்றி
நண்பர் சுற்றம் ஏமாற்றி
அடக்க முடியா தழுகின்றேன்!
அணைத்துக் காப்பாய் பெருமாளே!
எதற்கோ என்னைப் படைத்திட்டாய்?
எதற்கோ ஊட்டி வளர்த்திட்டாய்?
எதற்கோ கல்வி புகட்டிட்டாய்?
எதற்கோ தொழிலும் கொடுத்திட்டாய்?
எதற்கோ பெண்ணோ டிணைத்திட்டாய்?
எல்லாம் உனக்கு விளையாட்டோ?
அதற்கே பலியாய் அழிகின்றேன்!
ஐயோ காப்பாய் பெருமாளே!
பிறந்த நாளைக் கொண்டாடப்
பெரிதாய் என்ன செய்தேன்நான்?
இறந்த நாளைக் கொண்டாடி
இனிப்புத் தருவீர்; இனிநானும்
மறந்தும் மண்ணில் பிறப்பேனோ?
மாயச் சுழலில் உழல்வேனோ?
துறந்தேன் ஆசை எல்லாமும்!
துயரம் தீர்ப்பாய் பெருமாளே!
கரணம் தப்பி மரணத்தைக்
கண்டேன் கண்டேன் உலகத்தில்!
சரணம் சரணம் உனக்கேதான்
தந்தேன் தந்தேன்; இதுவேதான்
தருணம் தருணம்; எனைநீதான்
தக்க விதத்தில் புதுப்பிக்க
வரணும் வரணும் எனக்குள்ளே
வாழ்க்கை வழங்கும் பெருமாளே!