என்னவனும் நிலவும்-குயிலி
என்னவனும் நிலவும் -குயிலி
மூன்றாம்சாம முத்தத்தில்
கொஞ்சம் தேய்ந்தே
வளர்ந்திருந்தது
முழுமதி,
என்னவன்
கன்னங்களில் ..!
சுடும் நிலவின்
சாயலாய்
என்னைத்
தீண்டிய உன்
மோகப் பார்வை
விடியலை
வீழ்த்திக்கொண்டு
இருந்தது
உன் மார்போடு
சாய்கையில்
என் அங்கங்களில்
உன் நிலாத்துண்டுகள்
பூக்கின்றன
என்னை மடிசாய்த்து
தலை கோதுகையில்
உன் உள்ளங்கையில்
ஓராயிரம் நிலாக்களின்
கதகதப்பு
என் கண்ணீருக்கு
நீ காரணமாகும்போதும்
உன் விரல்கள்
என் கண்ணீர்
துடைக்கும் போதும்
நட்சத்திரங்களெல்லாம்
நிலவாகிறது
நம் வானில்
உன் கைகோர்த்து
நடக்கையில்
வளர்வதும்
தேய்வதும்
நீயாகிறாய்...!
நிலைவைக்காட்டி
சோறூட்டிய நீயும்
உனையே நிலவென
தின்ற நானும்
நமக்கு நாமே
ஒளிவீசிக்கொண்டோம்
ஆம்
என் கருப்புநிலா நீ
உன் வெண்ணிலா நான் ...!