கவிஅரசு கண்ணதாசன்
போட்டிக ளின்றிப் புகுந்துவிட்டாய் நெஞ்சத்தில்
பாட்டா லெனைவென்ற 'பா'ரதமே ! - வாட்டம்
விலக்குமுன் கீதங்கள் வெற்றிக்கு வித்தாய்
மலர்ந்திடச் செய்யும் வரம் .
இதயம் வருடி இதமளிக்கும் என்றும்
உதய கதிராய் ஒளிரும் !- பதமாய்
மனத்தில் நிறைந்ததுவும் மௌனமாய்ப் பேச
நனையும் உயிரும் நகும்.
பாட்டாற்றில் மூழ்கிப் பரவச மாகின்றேன்
காட்டாறாய்ப் பாய்ந்தோடும் கண்ணதாச ! - மீட்டுகின்றாய்
நெஞ்சில் சுபராகம்; நெக்குருகி விம்முகின்றேன்
தஞ்சமுன் பாடல்கள் தாம் .
தவித்தவுளந் தேறிடத் தத்துவஞ் சொன்னாய்
புவியிலுண்டோ நின்போல் புலவன் ? - கவிக்கண்ண
தாசா! கவிமழையால் தாகம் தணித்திடும்
ஆசான்நீ யாவர்க்கும் ஆம் .
முத்தமிழும் கொஞ்சியுனை முத்தமிட்டுச் சேர்த்தணைக்க
முத்துமுத்துப் பாக்கள் முகிழ்த்தனவோ - மொத்தத்தில்
முத்தையா! நின்பாட்டில் மோகம் மிகக்கொண்டு
முத்துநீர் கொட்டும் முகில் .
சொற்சதங்கைப் பூட்டிநின்று சொக்கவைக்கு முன்வரிகள்
கற்பனைக்கோ எல்லையின்றிக் கால்முளைக்கும்! - நற்றமிழில்
துள்ளிவந்து கிள்ளிவிட்டுத் தூங்கவைக்கும்; பூங்காற்றாய்
உள்ளமள்ளிக் கொள்ளும் உவப்பு .
சந்தங்கள் தாளமிட்டுத் தாலாட்டும் பேரழகோ
சொந்தமெனக் காட்டிவிடும் சொர்க்கத்தை ! மந்திரமென்
செய்தாயோ? கட்டுண்டோம்; தேனருவிச் சாரலாய்க்
கொய்தாயே நெஞ்சைக் குடைந்து.
கம்பனைக் காட்டினாய் கற்கண்டு பாக்களில்
உம்பரும் கேட்டால் உவந்திடுவர் ! - சிம்மமாய்க்
கோலோச்சும் தாசா!நின் கொஞ்சிவரும் பாச்சரமோ
பாலோடு சேர்ந்த பழம் .
குட்டியதும் திட்டியதும் கொட்டினாய் பாக்களிலே
பட்டதையும் பூட்டினாய் பக்குவமாய்ச் - சுட்டதும்
தொட்டதும் பூத்துத் தொடர்ந்துவர, தென்றலொடு
சொட்டும் மழைபோல் சுகம் .
ஆவிபிரிந் தாலென்? அமுத கவியுன்றன்
நாவில் உதித்தபா நானிலத்தில் - பூவின்
மணமாய்ப் புகழ்பரப்பும்; வானகமும் வாழ்த்தி
வணங்குமுல(கு) உள்ள வரை .
சியாமளா ராஜசேகர்