அந்த ஒரு கேள்வி

‘மேனாமினிக்கி’
அப்படித்தான் அழைத்தோம்...
முகப்பூச்சில் மூழ்கிப்போன முகம்..
முந்தாணி சொருகியிருக்கும் பாங்கு..
மூன்று தெருவரை வீசும் வாசனை திரவியங்களுடன்..
அழகின் கர்வமும்..
அதனோடு சேர்ந்திருக்கும் அலட்சியம்..
வாலிப மினுப்பும் கூடியிருந்ததால்...?

கணவர் பெயரோ..?
கற்கால தமிழ் பெயரே தவிர..
நவீன நாகரிகத்தின் நகல் அவர்...

இருவரும் இணைந்து நடந்தால்
தெருவே ரணகளமாகிவிடும்..
அத்தனை அன்னியோன்யம் அவர்களிடத்தில்..
திருமண ஏக்கத்தை..
ஏற்றிவிட்டுச் செல்வார்கள் எங்களிடத்தில்..
கணவன்மார்கள் கதிகலங்கி நிற்பார்கள்
கட்டியவளை நினைத்து...

மளிகை கடையொட்டி
நண்பரின் அலுவலகம்..
நான் எப்பொழுதும் அங்கேயே..
சம்பளம் இல்லா ஊழியன்...

அந்த அக்கா வரும்போதெல்லாம்..
அரைமணிநேர பேச்சு..
ஆறுநூறு அறிவுரைகள்..
ஐந்து ரூபாயிக்கு கடலை மிட்டாய்..
‘கொமரா’ என பெயரை அசிங்கமாய்
உச்சரிக்கும் அழகி அவள்...

சனிக்கிழமை மாலை தவிர
அற்புதமான மனிதர் அவர்..
‘அழகி’ மனைவியானால்..?
‘அந்த’ கர்வமும்..
அவரின் நடை, உடைகள் மட்டமே காட்டும்..
அவரின் பேச்சுகளில் நான் கண்டதேயில்லை...

பிள்ளைகள் இல்லையென்பதை தவிர
அவர்களிடம் எக்கவலையுமில்லை...

ஒருவருட இடைவெளிப்பின்
அதே மளிகை கடையில் அவர்...
அவ்வளவு எளிதில் அவரை
அடையாளம் காணமுடியவில்லை என்னால்..
ஆறுமாத தாடி..
அழுக்கேறிய உடை..
அமைதியாய் நின்றிருந்தார்...
அதிர்ந்துவிட்டேன்..
அனைத்தையும் மறந்திருந்தார்..
நினைவுகளை அறிமுக செய்யமுயன்றேன்..
ஆவலை தரவில்லை போலும் அவருக்கு..
சலனமில்ல முகம்..
அவர் பார்த்த பார்வைகளால்
கேட்கும் கேள்விகள்..?
எனக்கு புரியவே யில்லை...
அமைதியாய் என் கன்னத்தை
தடவிச் சென்றவர் தான்...
அதற்குப்பின் அவரை யாருமே
பார்க்கவே யில்லை இன்றுவரை...
அவரின் அந்த பார்வைக்கான அர்த்தம்
எனக்கும் விளங்கவே யில்லை இன்றுவரை...

அவர் மனைவி ஓடியபின்னர்
அவர் அப்படிதான்...
அனைவருடன் பேசுவதில்லை என்றனர் நண்பர்கள்...

புரட்டிப்போடும் வாழ்க்கை பக்கங்கள்
புரியாத புதிர்தான் எப்பொழுதும்...

பனிரெண்டு வருட கால இடைவெளி
ஊர் எல்லைகள் மாறிப்போயிருந்தன...
வசதிகளற்ற நெருசல் மிகுந்த
தெருங்களின் மத்தியில் அதே குரல்...
“கொமரா..”
அவள் தான்... ஓடிப்போனவள்..?

அத்தனையும் ஓடிப்போயிருந்தன..
அழகும், ஒப்பனையும் உட்பட
அடையாளம் காணுவதில்
அத்தனை சிரமம் எனக்கு..
அழுக்கேறிய உடைகளுக்குள்
அமிழ்ந்திருக்கும் வலிகள்..
வார்த்தைகளாக கொட்டவில்லை
கண்ணீர் துளிகளாக கண்களில்...

அரைநிமிட அமைதிக்குப்பின் அவளே...
“அவர் எப்படியிருக்கிறார்..” என்றாள்
அதீத ஆர்வத்துடன்..
அந்த கடைசி சம்பவத்தை
அப்படியே ஒப்பித்தேன்...
அழுகைக்கு மத்தியில்
என்னைப்பற்றி விசாரித்தாள்...
ஒரு பக்க கேள்விக்கு
ஒரே வார்த்தைகளில் பதில் என்னிடமிருந்து..
அதிக காயம் ஏற்படுத்தியிருப்பேன் போல
கொட்டிய கண்ணீருக்கு விடைகொடுத்துவிட்டு
முந்தானையில் முடிந்திருந்த காசில்
கடலை மிட்டாய் வாங்கிவந்தாள்...

அழுக்கேறியிருந்தது
மனசா...? கைகளா..?
என தெரியவில்லை..
வாஞ்சனையோடு கொடுத்ததையும்
வாங்க தடுமாறிய தருணம்...

நிராகரிப்பின் வலிகளை
நினைத்துப் பார்ப்பதில்லை..
நியமங்கள் நிர்மாணிக்கும்
நினைவுகளில்...
நிஜம் எதுவென்று நிருபிக்க
நிகழ்காலம்..
நிலைக்கண்ணாடி அல்ல...

அழுகையோடு சென்றவளிடம்
அந்த ஒரு கேள்வியாவது கேட்டிருக்கலாம்..?
ஏன்..? எனக்கு கேட்க தோன்றவில்லை..?
சில முடிவுகள்..
முடிவில்லா முடிச்சுக்களை
போட்டுவிட்டுச் செல்கின்றன...

“எப்படி இருக்கின்றாய்..?” என்ற கேள்விக்குள்
‘கடந்த கால தவறுகளை மறந்துவிட்டேன்’
அல்லது
‘மன்னிக்கப்பட்டது’ என்ற செய்தி ஒளிந்திருக்குமோ...?

*****************
சிகுவரா
30/06/2017

எழுதியவர் : சிகுவரா (1-Jul-17, 6:45 pm)
Tanglish : antha oru kelvi
பார்வை : 101

மேலே