சோறுபோடும் விவசாயி
========================
நிகழ்வுகளின் சாதக நாற்றை
பத்திரிகை வயலில் நாட்டி
பக்கப் பாத்திகளில் வளர்க்கின்ற
எழுத்து நெல்லை வாசக கண்களால்
அறுவடையாக்கும் அவனது
ஒருநாள் பசி தீர்க்கின்றான்
பசியால் மரணித்த ஒரு விவசாயி.
ஒளி புகாத கிராமத்து மூலைகளில்
ஊடுருவும் ஒளிப்பதிவு நாகங்கள்
நடந்தேறாத அவலத் தவளையொன்றை
படமெடுக்கப் பசித்திருக்கும் காலம்
அசுர வேகத்தில் பொய்களுமுண்டு
சீரணிக்காமல் நெளிவதற்கும் கூட
செய்தித் தீனியாகிறான் விவசாயி.
தொலைகாட்சி மைதானங்களில்
எதிரெதிர் திசைகளில் நின்றபடி
நீளும் நாக்குகளில் கால்பந்தாகி
உதைக்கபடுவதன் மூலம்
இருப்பைத் தக்கவைக்கப் போராடும்
வெள்ளை வேட்டியாளர்களுக்கு
நடுவரே வெற்றி கொள்ளும்
நவீன முடிவாகப் பிரபல்யம் பெற்றுவிடும்
ஊடகத்தின் பசிக்கு உயிர்விட்டு
சோறு போடுகிறான் உயர்வான விவசாயி.
நட்சத்திரங்களுக்கு கோவணம் அணிவித்து
சிருங்கார அரிதாரம் பூசி
வயல் உழுவதான பாவனை
அலங்கார வடிவமைத்து
செத்தவனின் அசல்போன்று
சினிமா விவசாயம் செய்ய
சொத்தையெல்லாம் வித்தொருவன்
எடுக்கின்ற காட்சிகளில்
பிரச்சினைகளின் முகம்காட்டி
வெள்ளித்திரை வரும் சித்திரங்களால்
எவனெவனோ கோடிகள் சுருட்ட
இவன் வாழ்க்கை யதார்த்தம் கருவாகி
சோறு போடுகிறதே..
வழங்குன்றிய உழவு நிலத்துக்கு
எருவாக மாயும் மரணத்தில்
சவப்பெட்டிக்காரன் குடும்பம் தொட்டு
வெட்டியாவன் குடும்பம் வரை
பசி தீர்த்து தீர்ந்த உழவன்
குடும்பத்தோடு மேய்ப்பன் இல்லாத
மந்தையான விவசாய நிலமுமே
எப்போதும் பட்டினியில்.
*மெய்யன் நடராஜ்