கதை

ஒரு அருமையான கதை... அனைவரும் தெரிந்து கொள்ள தமிழில்..... இனி கதைக்குச் செல்வோம்.....😊

ஒரு அழகிய வாலிபன் ஒரு ஹோட்டலுக்குச் சென்று முதலாளியை சந்திக்க விரும்புவதாகக் கூறினான். முதலாளி வந்தவுடன் அவரிடம்.....

"39ம் நம்பர் அறை கிடைக்குமா?"

"கண்டிப்பாக சார்....."

"நன்றி...."

அந்த அறைக்குச் செல்வதற்கு முன் முதலாளியிடம் ஒரு கறுப்பு கத்தி, 39செமீ நீள வெள்ளை நூல் மற்றும் 73கி ஆரஞ்சு ஒன்று தரச் சொல்லி கேட்டான்.

இதைக் கேட்ட முதலாளி மிகுந்த ஆச்சரியத்துடன் ஒத்துக் கொண்டார்.

அறைக்குச் சென்ற அந்த வாலிபன் அதன் பின் எந்த உணவும் ஆர்டர் செய்யவில்லை.

இதில் ஆச்சரியமான ஒன்று எதுவென்றால் முதலாளியின் அறை 39ம் அறைக்கு அருகில்.

நடுநிசியைத் தாண்டியவுடன் முதலாளிக்கு பக்கத்து அறையிலிருந்து பல வினோத சப்தங்கள் கேட்டது. காட்டு மிருகங்களின் கத்தல் மற்றும் பாத்திரங்கள் உருளும் சப்தம் என விதவிதமான ஒலிகள்.

அன்று இரவு முழுவதும் முதலாளி உறங்கவில்லை. விதவிதமான ஒலிக்கு காரணத்தை யோசித்தம் விடை கிடைக்கவில்லை.

அடுத்த நாள் காலை அந்த இளைஞன் அறையைக் காலி செய்து சாவியைக் கொடுத்தவுடன் முதலாளி அந்த அறையை செக் பண்ண சொன்னார்.

அந்த அறை மிகவும் சுத்தமாக பொருட்கள் அதனதன் இடத்தில் இருந்தது. அங்கிருந்த மேசையில் அந்த கறுப்பு கத்தி, வெள்ளை நூல் மற்றும் ஆரஞ்சும் இருந்தது.

பின் அந்த இளைஞன் பில்லை செட்டில் செய்து விட்டு ரூம் பாய்ஸ்க்கும் நல்ல டிப்ஸ் கொடுத்து புன்னகையுடன் கிளம்பி விட்டான்.

முதலாளி இதில் அதிர்ச்சி அடைந்தது மட்டுமல்லாமல் அவன் மேல் மிகுந்த சந்தேகமும் அடைந்தார்.

ஒருவருடத்திற்குப் பின் மீண்டும் வந்த அந்த இளைஞன் அதே அறையைக் கேட்டதோடு மட்டும் அல்லாமல் போன முறை போல் கறுப்புக் கத்தி, 39 செமீ வெள்ளை நூல் மற்றும் 73கி ஆரஞ்சும் கேட்டான்.

இந்த முறை எப்படியாவது உண்மையைக் கண்டு பிடிக்க வேண்டும் என முதலாளி தூக்கம் விழித்து காத்திருந்தார். கடந்த முறை போலவே நடுநிசியைத் தாண்டியவுடன் அதே போல சப்தங்கள் பக்கத்து அறையிலிருந்து வரத் தொடங்கின ஆனால் இந்த முறை கடந்த வருடத்தை விட அதிகமாக இருந்தது.

அடுத்த நாள் முகம் முழுதும் புன்னகையுடன் கை நிறைய டிப்ஸ் கொடுத்து பில்லை செட்டில் செய்து விட்டு அவன் கிளம்பினான்.

இதற்கான காரணங்களை முதலாளி ஆராயத் தொடங்கினார். எதற்காக 39ம் நம்பர் ரூம் எதற்கு கறுப்பு கத்தி வெள்ளை நூல் ஆரஞ்சு என எவ்வளவு மண்டையை உடைத்துக் கொண்டும் அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை.

முதலாளி மிகுந்த ஆர்வத்துடன் அடுத்த வருட மார்ச் மாதத்திற்காக காத்திருக்க ஆரம்பித்தார். ஆச்சரியமாக மார்ச் முதல் தேதியே அந்த இளைஞன் வந்தான்.

இந்த முறையும் அதே அறை மற்றும் அதே பொருட்களுடன் அறைக்குள் சென்றான்.

அந்த நாள் இரவும் அதே போல பல சப்தங்களோடு முதலாளிக்கு கழிந்தது.

அடுத்த நாள் அந்த இளைஞன் அறையைக் காலி செய்து விட்டு புறப்படுவதற்கு முன் முதலாளி பணிவுடன் அவனிடம் சப்தங்களுக்கான காரணத்தைக் கேட்க அதற்கு அவன்.....

"இந்த உண்மையை உங்களுக்கு சொல்ல வேண்டும் எனில் நீங்கள் கண்டிப்பாக யாரிடமும் சொல்லக் கூடாது...."

"கண்டிப்பாக யாரிடமும் சொல்ல மாட்டேன்..."

"சத்தியமாக......."

"சத்தியமாக யாரிடமும் சொல்ல மாட்டேன்...."

அதற்குப் பின் அவன் சப்தங்களுக்கான காரணத்தை முதலாளியிடம் சொன்னான்.

ஆனா அந்த முதலாளி என்னை மாதிரியே ரொம்ப நம்பிக்கையான ஆளுங்கறதுனால இன்னமும் எங்கிட்ட அந்த இரகசியத்தை சொல்லலை.

அவர் சொன்னோன கண்டிப்பா நான் உங்களுக்கும் சொல்லிடுறேன்......

எழுதியவர் : பிரபுதேவா. சபா (2-Jul-17, 4:27 pm)
சேர்த்தது : பிரபுதேவா சுபா
Tanglish : kathai
பார்வை : 1026

மேலே