மு ---கல்வியாளர் இலக்கிய ஆராய்ச்சியாளார் நாவலாசிரியர் இந்த மூன்று கோணங்களிலும்
மு வரதராசன் அவர்களின் பங்களிப்பு மூன்றுதளத்தில். அவர் ஒரு கல்வியாளர். இலக்கிய ஆராய்ச்சியாளார். நாவலாசிரியர். இந்த மூன்று கோணங்களிலும் அவரைப்பற்றி விவாதிக்கலாம்.
மு.வவின் முதன்மையான பணி என்பது கல்வியாளர் என்ற அளவிலேயே. பிற பணிகளை அவரது கல்விப்பணியின் ஒரு பகுதியாகக் காண்பதே பொருத்தமானது. மரபான முறையில் தமிழ் கற்றவர். அக்கால் முறைப்படி வித்வான் தேர்வு எழுதி சிறப்பாக வெற்றிபெற்று தமிழாசிரியரானார். சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் சென்னை பல்கலைகழகத்திலும் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தார். பின்னர் மதுரைப் பல்கலை துணைவேந்தராக இருந்து ஓய்வுபெற்றார்.
முவவின் கல்வித்துறைச் சாதனைகளில் முதன்மையானது தமிழாசிரியர் என்ற பதவிக்கு மதிப்பு ஏற்படுத்தியளித்த பேராசிரியர்களில் ஒருவராக அவர் விளங்கியதுதான். அக்காலத்தில் தமிழாசிரியர்கள் ஒரு போட்டித்தேர்வு எழுதி வென்று ஆசிரியர்களாக ஆனவர்கள். பெரும்பாலும் ஆங்கிலம் அறியாதவர்கள். ஆகவே பிற துறைகளில் பட்டம்பெற்ற ஆசிரியர்கள் தமிழாசிரியர்களை ஏளனமாக அணுகும் நிலை இருந்தது. ஊதியத்தில்கூட பெரும் ஏற்றத்தாழ்வு இருந்தது. பல்கலைப்பதவிகளுக்கு தமிழாசிரியர்கள் வருவதும் அபூர்வம்.
தெ.பொ.மீனாட்சி சுந்தரம்பிள்ளை
அவ்வை துரைசாமிப்ப்பிள்ளை
மு.வ அவரது பதவிகளில் புகழ்பெற்றிருந்தார். அவரது அறிவுத்திறனும்,அனைவரையும் அணைத்துச்செல்லும் போக்கும், அபாரமான ஒழுக்கநோக்கும் அவருக்கு கடைசிவரை எங்கும் பெருமதிப்பை உருவாக்கியளித்தன. அவரது மாணவர்கள்ள் அரைநூற்றாண்டு தாண்டியும்கூட அவரை இன்றும் பக்தியுடன் நினைவுகூர்கிறார்கள். அவரது காலகட்டத்தில் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், அவ்வை துரைசாமிப்பிள்ளை போன்ற பேரறிஞர்களால் அவரது இடம் ஒரு படி கீழேதான் இருந்தது. ஆனால் இன்று நோக்கும்போது தமிழ் கல்விவரலாற்றின் ஒளிமிக்க பெயர்களில் ஒன்று மு.வ.
ஒரு கல்வியாளர் என்றநிலையிலேயே அவரது ஆய்வுகள் அமைந்திருந்தன. அதாவது மரபிலக்கியத்தை கல்வித்துறைசார்ந்த தேவைகளுக்காக ஆய்வுசெய்யும் முறையில் அமைந்தவை அவை. தகவல்களை தேடி தொகுத்து வைக்கும்தன்மைகொண்ட ஆய்வுகள். சங்க இலக்கியத்தில் இயற்கை [The Treatment of Nature in Sangam Literature] என்ற தலைப்பில் மு.வ செய்த ஆய்வேடு சிறந்த உதாரணம். அந்த ஆய்வேட்ட்டை ஒட்டியே அவர் பின்னாளில் நெடுந்தொகை விருந்து, குறுந்தொகை விருந்து, நற்றிணை விருந்து முதலிய நூல்களை எழுதினார். அவை அப்பாடல்களில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை எடுத்துச்சொல்பவை அவ்வளவே.
உதாரணமாக சங்க இலக்கியத்தில் இயற்கைகுறித்து ஆராயும் மு.வ சங்க இலக்கியங்கள் இயற்கையை அகக்குறியீடாக மாற்றும் நுட்பத்தை அறியவேயில்லை. பின்னாளில் அகநிலக்காட்சி [ Interior landscape] என்று ஏகே ராமானுஜன் உலகுக்கு அறிமுகம்செய்த அவ்வியல்பு சங்ககால அழகியலுக்கே உரிய தனித்தன்மை. உலகுக்கு தமிழின் கொடை. ஆனால் மு.வ. மிக எளிமையாக சங்ககால மக்கள் இயற்கையுடன் இயைந்து வாழ்ந்து அதை வர்ணித்துபாடினார்கள் என்ற அளவில் நின்றுவிடுகிறார். கச்சிதமான பள்ளி ஆசிரியராக!
மு.வவின் இலக்கிய ஆராய்ச்சிகளுக்கு ஆராய்ச்சிக் கோணத்தில் பெரிய மதிப்பு ஏதும் இல்லை. அவற்றை எஸ்.வையாபுரிப்பிள்ளை, கெ.என் சிவராஜபிள்ளை போன்ற முதல்தலைமுறை ஆய்வாளர்களுடனோ அல்லது அவரது சமகாலத்தவர்களான தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் போன்றவர்களின் ஆய்வுகளுடனோ ஒப்பிட்டால் இந்த வேறுபாடு புரியும். அவர்கள் மரபிலக்கியத்தின் உள்தொடர்ச்சியை கண்டறிவதிலும் காலக்கணிப்பிலும் புதிய கண்டறிதல்களை நிகழ்த்தி பெரும் பங்களிப்பை ஆற்றியவர்கள். முவ அப்படி ஏதும் செய்யவில்லை. வெறுமே நயம்பாராட்டி சில தகவல்களைச் சுட்டுகிறார்.
ஏனென்றால் மு.வவுக்கு இலக்கியமல்லாத துறைகளில் ஆர்வமும் பயிற்சியும் இருக்கவில்லை. தத்துவம், மெய்யியல், சமூகவியல், வரலாறு போன்ற துறைகளின் கோணங்களில் இலக்கியங்களுக்குள் சென்று கேள்விகளை உருவாக்கி முடிவுகளுக்கு வர அவர் முயலவில்லை. இலக்கிய ஆக்கங்களை வாழ்க்கை சார்ந்து அணுகவும் அவரால் முடிந்ததில்லை. ஆகவே அவரது மரபிலக்கிய ஆய்வுகளுக்கு இன்று எந்த மதிப்பும் இல்லை. இன்று அவை வாசிக்கப்படுவதும் இல்லை.
இலக்கியவரலாற்றாசிரியராக முவவுக்கு ஓர் இடம் உண்டு. ஆனால் அந்த இடம் மிகைப்படுத்தப்பட்டது. அவரது தமிழிலக்கிய வரலாறு நெடுங்காலம் கல்வித்துறையில் ஒரு பாடநூலாக இருந்தது. ஆனால் மரபிலக்கிய வரலாற்றை பொறுத்தவரை அவர் எதையும் புதிதாகச் சொல்லவில்லை. மு.அருணாச்சலம் போன்றவர்களின் நூல்களை ஒட்டி தொகுத்து தருவதுடன் சரி. அந்நூலில் நவீன இலக்கியம் குறித்த பகுதிகள் மனம்போனபோக்கில் தவறான, போதாத தகவல்களுடனும் வணிக எழுத்துக்கும் இலக்கியத்துக்கும் இடையேயான வேறுபாடுபற்றிய புரிதல் இல்லாமலும் எழுதப்பட்டுள்ளன.
உண்மையில் அப்பகுதிகள் அவரால் எழுதப்படவில்லை, அவரது சில மாணவர்கள் எழுதினார்கள் என சொல்லப்படுகிறது. நவீன் இலக்கியம்பற்றி பிழையான புரிதல்களை நெடுங்காலம் கல்வித்துறையில் நிலைநாட்டியது அது. நவீன இலக்கிய வரலாற்றுக்கு சிட்டி சிவபாத சுந்தரம் எழுதிய இருநூல்கள் [தமிழ் நாவல் நூற்றாண்டு வளர்ச்சி, தமிழ்ச்சிறுகதை வரலாறு] தான் இன்று ஆதாரநூல்களாகும். ஆனாலும் மு.வவின் நூல் ஒரு பாடநூலாக ஒருகாலகட்டத்திற்கு ஓரளவு பயன்பட்டுள்ளது என்பதை மறுக்கமுடியாது.
மரபிலக்கிய தளத்தில் மு.வவின் முக்கியமான சாதனை என்று சொல்லப்படவேண்டியது அவரது திருக்குறள் உரை. அவரது பெரும்புகழ்பெற்ற நூல் அதுவே. அவருக்கு பெரும்செல்வத்தையும் அது ஈட்டியளித்தது. அன்றுவரையிலான உரைகளை ஒட்டி எழுதப்பட்ட ஒரு எளிய நூல்தான் அது. ஆனால் அன்றைய முக்கியமான தேவை ஒன்றை அது நிறைவுசெய்தது. குறளுக்கு மதச்சார்பற்ற, பகுத்தறிவுக்கு ஒட்டிய, ஒரு நவீன உரை தேவையாக இருந்தது. அதை மு.வ.அளித்தார். இன்றும் ஒரு மாணவருக்கு பரிந்துரைக்கக்கூடிய நல்ல குறள் உரை அதுவே. நல்லாசிரியராக மு.வ தமிழுக்கு ஆற்றிய கொடை அது.
மு.வ அறுபதுகளில் கள்ளோ காவியமோ, நெஞ்சில் ஒரு முள், அகல் விளக்கு, கரித்துண்டு, செந்தாமரை, பாவை, அந்த நாள், மலர் விழி, அல்லி, கயமை, மண் குடிசை போன்ற நாவல்களை எழுதியிருக்கிறார். அந்தக்காலகட்டத்தில் அவை குறிப்பிடத்தக்க வணிக வெற்றியும் ஈட்டியிருக்கின்றன. இலக்கியவாதியாக அவருக்கு அன்று முக்கியமான இடம் இருந்தது. அகல்விளக்கு எனும் நாவலுக்கு 1961ல் சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது.
வி.எஸ்.காண்டேகர்
ஐம்பதுகளில் தமிழில் கா.ஸ்ரீ.ஸ்ரீ அவர்களின் மொழியாக்கத்தில் வி.எஸ்.காண்டேகர் எழுதிய மராத்தி நாவல்கள் வெளியாகி பரவலான வாசக ஆதரவைப் பெற்றன. அது சுதந்திரப்போராட்டத்தின் இலட்சியவாத அலை அடங்காத காலகட்டம். அதை நேருயுகம் எனலாம். இலட்சியவாதியின் காதலையும் போராட்டங்களையும் பற்றிய நாவல்களுக்கு அன்று பெரிய மதிப்பிருந்தது. சராசரி வாசகன் தன்னை இலட்சியவாதியாக எண்ணிக்கொண்டான், காதலிக்கப்படவும் ஆசைப்பட்டான். காண்டேகரின் படைப்புகள் அவர்களுக்கான இலட்சியவாத நாவல்கள்.
காண்டேகரின் நாவல்களுக்கு சில தனித்தன்மைகள் உண்டு. அவை ஒரு பாடநூல் போல சீரான கதையோட்டம் கொண்டவை. அத்தியாயங்களின் முகப்பில் எப்போதும் இலட்சியங்களைப்பற்றியும் மனித இயற்கையைப் பற்றியும் ஒரு குட்டிச் சொற்பொழிவு இருக்கும். கதைமாந்தர்கள் சில கொள்கைகளின் பிரதிநிதிகளாக நின்று முறையான வாதங்களைத்தான் உரையாடல்களாக முன்வைப்பார்கள். தியாகம் போன்ற விழுமியங்கள் போற்றப்படும். காண்டேகரை கையில் பென்சில் இல்லாமல் வாசிக்கக்கூடாது என்பார்கள்.
தமிழில் காண்டேகரின் பாதிப்பு என்பது மிக ஆழமானது. தமிழில் ஏற்கனவே ஒரு கேளிக்கை எழுத்து வேரூன்றியிருந்தது. அதன் நாயகராகிய கல்கியின் யுகம் அது. கூடவே தேவன், ஆர்வி, எல்லார்வி, மாயாவி என வணிக எழுத்தாளர்கள் உருவாகி வந்திருந்தனர். விகடன், கல்கி, கலைமகள் இதழ்களால் இவர்கள் உருவாக்கப்பட்டு முன்வைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு இலக்கிய அடையாளமும் அளிக்கப்பட்டது.
இலக்கிய எழுத்து சிற்றிதழ்களின் மிகச்சிறிய வட்டத்துக்குள் செயல்பட்டுக்கொண்டிருந்தது. அது எழுத்து போன்ற சிற்றிதழ்களின் காலம். க.நா.சு இலக்கியத்தை ஐரோப்பா நோக்கி திருப்பி வைத்த காலகட்டம். ’சரஸ்வதி’ ’தாமரை’ இதழ்கள் வழியாக முற்போக்கு இலக்கியம் உருவாகி வந்துகொண்டிருந்தது. அதற்கும் பிற இலக்கியவாதிகளுக்கும் விவாதங்கள் நிகழ்ந்தன. புதுக்கவிதை உருவாகிக் கொண்டிருந்தது. ஆனால் இவற்றை பரவலாக எவரும் அறியவில்லை. மு.வ போன்ற கல்வியாளர்களுக்குக்கூட நவீன இலக்கியத்தளம் பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை.
இந்நிலையில் அன்றைய வாசகர்களில் கணிசமானவர்களுக்கு வணிகக் கேளிக்கை எழுத்துமேல் அவநம்பிக்கை ஏற்பட்டிருந்தது. குறிப்பாக தேவன் முதலியோரால் எழுதப்பட்ட வெறும் வேடிக்கைக்கதைகளை அன்றைய இலட்சியவாத வாசகர்கள் நிராகரித்தார்கள். இலட்சியவாதப்பிரச்சாரமே இலக்கியத்தின் மையநோக்காக அவர்கள் எண்ணினார்கள். அவர்களே காண்டேகரின் வாசகர்கள் ஆனார்கள். காண்டேகர் அவர்களால் பேரிலக்கியவாதியாக கருதப்பட்டார்.
காண்டேகரைப் பின்பற்றி எழுத ஆரம்பித்தவர்களில் முதன்மையானவர் மு.வ. அவரது நாவல்களை வைத்து அவரை தமிழ்க்காண்டேகர் என்று சொல்லிவிடலாம். எந்த வணிக இதழின் ஆதரவும் இல்லாமலேயே மு.வ பெற்ற வெற்றி கவனத்துக்குரியதே. பின்னர் வணிக இதழ்கள் அந்த வகையான எழுத்தின் வணிகச் சாத்தியங்களை கண்டுகொண்டன. அகிலன்,நா.பார்த்தசாரதி போன்றவர்கள் காண்டேகரின் பாணியை வணிக எழுத்துக்குள் கொண்டுசென்று வெற்றிபெற்றார்கள்.
காண்டேகர், மு.வ போன்றவர்களின் நாவல்கள் அன்று பெற்றிருந்த ஆதரவை இன்று ஒட்டுமொத்தமாக புரிந்துகொள்ள முடிகிறது. நாடெங்கும் இலட்சியவாதம் அலையடித்த காலம். எழுபதுகளில்தான் பெரும் ஊழல்கதைகள் வெடித்து மெல்லமெல்ல ஜனநாயகம் மீதான அவநம்பிக்கை உருவானது. அவசரநிலைக்காலத்தால் அது முழுமையான கசப்பாக மாறியது. அந்த இலட்சியவாதக் காலகட்டத்தில் அதிகமாக வாசித்தவர்கள் பெரும்பாலும் ஆசிரியர்கள். அவர்களே இலட்சியவாதத்தை கிராமம் தோறும் கொண்டு சென்றவர்கள். மாணவர்கள் அடுத்தபடியாக. அவர்களுக்கான இலக்கியமாக இருந்தன இந்நூல்கள்.
அத்துடன் எனக்கு ஒன்றும் தோன்றுகிறது. அன்று மேடைப்பேச்சு ஒரு முக்கியமான ஊடகமாக பரவி விட்டிருந்தது. தமிழகத்தில் எங்கும் கூட்டங்கள் நிகழ்ந்த காலம் அது. கூட்டம் கேட்பதை தங்கள் இளமைக்காலத்து முக்கியமான பொழுதுபோக்காக இன்றைய முதியவர்கள்பலர் சொல்வதைக் காணலாம். எல்லா படித்தவர்களும் கூட்டங்களில் பேசவேண்டியிருந்தது. காண்டேகர் மற்றும் மு.வ நூல்களில் இருந்து மேற்கோள்களை உருவி சொற்பொழிவை அமைப்பது அன்றைய வழக்கம்.நான் மு.வ.நூல்களை சொற்பொழிவாளர்களிடமே அதிகம் கண்டிருக்கிறேன்.
மு.வவின் நாவல்களையும் பாடப்புத்தகநாவல்கள் எனலாம். பள்ளி கல்லூரிகளின் பாடத்திட்டத்துக்கு ஒப்ப எழுதப்பட்டவை என்று தோன்றும். பெரும்பாலும் பண்பாட்டுச்சிக்கல்களை கதைமாந்தர்களின் விவாதங்கள் வழியாக முன்னெடுக்கும் நாவல்கள் இவை. எளிதில் ஊகிக்கக்கூடிய முடிச்சுகளும் மரபான தீர்வுகளும் கொண்டவை. செயற்கையான உணர்ச்சிகர தருணங்கள் அமைந்தவை. ஆசிரியரின் சிந்தனைகளை நேரடியாகவும் உரையாடல்களிலும் முன்வைப்பவை. அத்துடன் மு.வவின் நாவல்கள் செந்தமிழ் நடையில் அமைந்தவை. உரையாடல்களும்கூட இலக்கணத்தமிழில் கல்லூரி நாடகங்கள்போலிருக்கும்.
இலக்கியக் கலை என எது உலகமெங்கும் கருதப்படுகிறதோ, எது தமிழில் சாதிக்கப்பட்டிருக்கிறதோ அந்த அளவுகோலின்படி மு.வவின் நாவல்களுக்கும் இலக்கியக்கலைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. அவரை தமிழின் இலக்கியவாதிகளின் பட்டியலில் எந்த இடத்திலும் சேர்க்க முடியாது. இலக்கியம் என்பது ஒருவர் தான் நினைப்பதையெல்லாம் சீரான மொழியில் எழுதி வைப்பது அல்ல. அது தன்னுள் இறங்கிச்செல்லும் பயணம். அதன் வழியாக தான் வாழும் சமூக ஆழ்மனத்துக்குள் ஊடுருவிச்செல்லல். மொழியின் நேரடித்தொடர்புறுத்தலை அதன் கற்பனைச் சாத்தியங்களைக்கொண்டு மீறிச்செல்லுதல்.
வாசகனுக்கு விஷயங்களை தெரியப்படுத்துதல் அல்ல இலக்கியத்தின் வழி. வாசகன் கற்பனையை தூண்டிவிடுதல். வாசகன் தன்னுடைய சொந்த வாழ்க்கைக்கு நிகரான ஒரு கற்பனைவாழ்க்கையை தன் சொற்கள் வழியாக வாழச்செய்தல். அதன் வழியாக அவன் தன் சிந்தனைகளை தானே கண்டடையும்படிச் செய்தல். இலக்கியம் என்பது மொழி வழியாக சமகாலச் சிந்தனைகளை மீறிச்செல்லுதல். இலக்கியம் என்பது மொழிக்குள் உள்ள நுண்மொழி ஒன்றில் நிகழும் உரையாடல். மு.வவுக்கும் அந்த வகையான இலக்கியத்துக்கும் தொடர்பேதும் இல்லை.
இலக்கியத்தில் முவவின் பங்களிப்பு என்ன? அவரது காலகட்டத்தில் பொதுவாகப்பேசபப்ட்ட பொதுவான இலட்சியவாதச் சிந்தனைகளை அன்றைய இளம் வாசகனுக்கு கதைவடிவில் கொண்டுசென்றார், அவ்வளவுதான். அது ஜனநாயகப் பண்புகள் பரவலாக ஆரம்பித்த காலகட்டம். சமூகசீர்திருத்த எண்ணங்கள் முளைத்து வந்த வரலாற்றுச் சந்தர்ப்பம். பெண்சுதந்திரம், தனிமனித அறம், பொதுக்குடிமைப்பண்புகள் போன்றவற்றை பிரச்சாரம்செய்யும் ஆக்கங்களாக அமைந்தன மு.வவின் நூல்கள்.
மு.வவின் காலகட்டத்துக்குப் பின்னரும்கூட அவரது பாணி எழுத்து ஓரளவு செல்வாக்குடன் இருந்தது. கு.ராஜவேலு, ய.லட்சுமிநாராயணன், வெ.கபிலன், டேவிட் சித்தையா போன்ற பலர் அப்பாணியில் எழுதினார்கள். அவர்கள் காலப்போக்கில் காணாமலானார்கள்.நா.பார்த்தசாரதி, அகிலன் ஆகியோரின் அவருடைய எழுத்துமுறையின் பாதிப்பு உண்டு
மு.வ அவரது கல்வித்துறைப் பங்களிப்பு காரணமாக அவரது மாணவர்களால் இன்றும் கல்வித்துறைக்குள் நிலைநிறுத்தப்படுகிறார். ஆனால் அவர்களும் ஓய்வுபெற சமீபகாலமாக அவரது இடம் முற்றிலுமாக மறைய ஆரம்பிக்கிறது.
மு.வ ஓர் ஆசிரியர். ஓர் ஆசிரியராக அவரது காலகட்டத்துக்கு அவர் பணியாற்றினார். அவரது நூல்கள் ஆசிரியர் தன் மாணவர்களுக்காக எழுதிய பாடநூல்களைப்போன்றவை. அவரது நாவல்களுக்கு இலக்கிய முக்கியத்துவம் என ஏதும் இல்லை. ஆனால் ஒருகாலகட்டத்தில் அக்கால இலட்சியங்களை அவை ஒரு சாராருக்கு எடுத்துச் சென்றன. அந்த அளவிலேயே அவருக்கு தமிழ்ச் சிந்தனை மரபிலும் இலக்கிய வரலாற்றிலும் இடம்.
ஜெ