மூத்த குட்டி முத்து

நானும் என் மனைவியும் தெரு நாய்களாய் பிறந்ததாலோ என்னவோ,ஒவ்வொரு நாளும் எங்கள் வயிற்றைக் கழுவுவதே மிக கடினமாய் இருந்தது. அப்படியிருந்தும் எந்த ஒரு நாளும் எங்களுக்குள் எந்தச் சண்டையோ சச்சரவுகளோ இன்றி மிக அழகாய் போய்க்கொண்டிருந்தது..

இயற்கையில் இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் தன் வயது வந்தால் தனக்கான துணையைத் தேடிக்கொள்வதும் , அதன்பின் தனக்கென பிள்ளைகளைப் பெற்றெடுப்பதும் மாற்ற முடியாத ஒன்று.

அவ்வாறுதான் எங்கள் இல்லறத்தின் பயனாக எங்களுக்கு நான்கு பெண்குட்டிகளும் மூன்று ஆண் குட்டிகளும் பிறந்தன.

ஏழுபேரை பெற்றெடுத்த களைப்பினில் அவளோ அயர்ந்திருந்த வேளையில் நானும் இரைதேடி அங்கில்லாமல் சென்றிடவே பொன்னாய் பிறந்த என் குட்டிகளை விடுத்து மற்ற மூன்று, கண்விழி திறக்காத ஆண் குட்டிகளை ஏதோ ஒரு மனித இனம் தன் அடிமையாய் எடுத்துச்சென்று விட்டான்...

மயங்கிக்கிடந்த என்னவளிடம் நடந்ததைக் கூறினேன், பெற்ற மனம் பித்தல்லவா, அவளின் அந்த ஓலம் நிறுத்த முடியாததாய் இருந்தது...அது கேட்டு மற்ற நால்வரையும் கண்விழிக்க வைத்துவிட்டது.அப்போதிலிருந்து அவர்களுக்காக வாழ முடிவெடுத்தோம்.

பின்னர் இவர்களின் நல்வாழ்விற்காக உழைப்போம் என என்னவளிடம் கூறினேன்.எங்கள் வாழ்க்கையை இருப்பதைக்கொண்டு சிறப்புடன் நடத்தி வந்தோம்...

நாட்கள் உருண்டன....என் பெண் குட்டிகள் நன்று வளர்ந்து ஆளாகியிருந்தனர்...

எங்களின் வாழ்வாதாரமே அந்த சாலையின் மறுபுறம் உள்ள குப்பைத்தொட்டி தான்.அதுவும் வாகனங்கள் நிறைய வந்து செல்லும் பகுதியில் இருந்ததால் சற்றே சிரமப்பட்டு எச்சரிக்கையுடனே உணவைத்தேடி செல்வோம்.

அன்றோ ஒரு பண்டிகை நாள்.எங்களுக்கு பலரும் உணவு தர எண்ணி ஏராளமான திண்பண்டங்களை குப்பையிலே வீசிச் சென்றனர்...

அதற்கடுத்து நிகழ்ந்த சம்பவங்கள் மிகவும் கொடியது...இருபுறமும் பார்த்து பார்த்து சாலை விதிகளை கடைபிடித்து சாலையைக் கடந்து சென்று முதல் ஆளாய் தன் பசியைத் தீர்த்துக்கொள்ள சென்றிருந்தாள் என் மூத்த குட்டி முத்து.

நாங்கள் அவள் உண்ணும் அழகினை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தோம் சாலையின் மறுபுறம் உள்ள எங்களின் வீட்டிலிருந்து....

அப்போது திடீரென்று ஒரு சத்தம்,குப்பைத்தொட்டி நசுங்கி கிடந்தது எங்கள் முத்துவையும் சேர்த்து நசுக்கி.அவளது முத்து போன்ற இரு கண்களும் மூளையுடன் சேர்த்து வாய் வழியாக பற்களோடு குருதி வெள்ளத்தில் சாலையின் ஒரு ஓரத்தில் கிடந்தது....

கண்ணிமைக்கும் நேரத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டி வந்த கயவன் ஒருவனால் ஏற்பட்ட வினை அது...

அவள் உண்ட உணவு கூட குடலில் ஈரம் காயாமல் இருக்க, ஏன் தெருநாயாக பிறந்தேன்? எதற்காக என்னவளை மணமுடித்தேன்? ஏன் குட்டிகளைப் பெற்றெடுத்தோம்? ஏன் அவர்கள் எழுவரும் ஆண் குட்டிகளாய் பிறக்கவில்லை?என பற்பல கேள்விகள் என் மனதிற்குள் எழுந்து முடிவதற்குள் என் செல்ல மகள் உயிர் பிரிந்தது.....

நாயாய்ப் பிறந்தாலும் பணம் படைத்தவர் வீட்டில் பிறக்க வேண்டும் அதுவும் ஆணாய்ப் பிறக்கவேண்டும்...

பெண் என்றால் எடுத்து வளர்க்கவும் எவரும் வர மாட்டனர்,வளர்ந்தாலும் வாழவும் விடமாட்டனர்...

என்று மாறும் இந்த அவல நிலை இந்த சமநிலையற்ற சமூகத்திலிருந்து....

எழுதியவர் : தொலைந்தவன் (சதீஸ் குமார் த (6-Jul-17, 11:12 am)
சேர்த்தது : சதீசுகுமரன்
பார்வை : 435

மேலே