காதல் பழக வா--25

காதல் பழக வா-25

அக்கினி பறவையாய்
தூரமாக பறந்தவள் நீ
இன்று காதல் புறாவாய்
என்னை நெருங்கி சுற்றி வருவதேனோ???

முத்தம் வைத்து
உன்னை அறிந்திட துடித்தவன் என்னை
மௌனத்தால் கிறங்கடித்து
காதல் யுத்தம் செய்வதேனோ???

வெள்ளை காகிதமாய்
நேற்றுவரை இருந்தவள் நீ
இன்று என் காதல் கனவை
நெஞ்சில் சுமந்து வலம்வருவதேனோ???

எதுவாய் இருந்தாலும்
இந்த நெருக்கமே இனிக்கிறது எனக்கு
மனையாள் ஆனவளே என்
மனதை புரிந்துக்கொண்டு என்னுடன்
காதல் பழகவா செந்தேனே!!!

ராதியின் பேச்சிலும், அழுகையிலும் அத்தனை பேரும் அதிர்ந்து நிற்க ராதியின் அம்மாவுக்கோ ஒன்றுமே புரியாமல் பிரமித்து நின்றார்...விசாரித்து உண்மை புரிந்து சாட்சிகளின் உறுதியான வார்த்தைகளை கேட்ட பின்னரே வினோ இங்கு வந்து இத்தனை ஆர்ப்பாட்டம் செய்திருந்தார்....ஆனால் ராதியோ தோசையை திருப்பி போடுவதுபோல சர்வசாதாரணமாக அங்கிருந்த நிலையையே மாற்றிவிட்டாளே...ராமநாதனுக்கு எதுவோ புரிந்தது போல தோன்ற அங்கிருந்த இறுக்கமான நிலையை அறிந்து ராதியிடம் சகஜமாக பேச ஆரம்பித்தார்...

"ராதி, ஒன்னும் இல்லமா...உன் அம்மா சும்மா உங்கிட்ட விளையாடி பார்க்கறா, உனக்கு ஷாக் குடுக்கறாளாம்...நீயும் பயந்துட்ட பார்த்தியா...போமா, பெட்ல உன் அம்மா ஜெயிச்சிட்டா, என் பொண்ணு என்ன பண்ணாலும் பயப்பட மாட்டா, ஷாக் ஆக மாட்டான்னு நான் பெட் கட்டினேன், நீ அப்பாவை தோற்க விட்டுட்டியேம்மா"

"அச்சோ, ஸாரிப்பா, எனக்கு எப்படி தெரியும், முன்னாடியே நீங்க சிக்னல் குடுத்திருந்தா, நானும் முன்னெச்சரிக்கையா இருந்திருப்பேன், இப்போ பாருங்க அம்மா ஜெயிச்சிட்டாங்க...ரொம்ப ஸாரிப்பா...கண்ணன் அத்தான் பத்தி சொன்னதால கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன், ஆனா அம்மா இனி எதுக்காகவும் கண்ணன் அத்தானை பத்தி இப்டி எல்லாம் பேசாதீங்க, என்னால தாங்கிக்கவே முடியாது, இப்போ நான் போய் குளிச்சிட்டு வந்துடறேன், நீங்க இவங்களோட பேசிட்டு இருங்க,அப்பா நான் சீக்கிரம் வந்துடுவேன் டைம் ஆச்சின்னு கிளம்பிடாதீங்க, ஓகே..." என்று புன்னகையோடு குறும்பு தவழ ஓடிய மகளை ஆச்சரியத்தோடு பார்த்தார் ராமநாதன்...
ராதிக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதை ராமநாதன் புரிந்துகொண்டதில் கண்ணனோடு தனியாக போய் பேச முடிவெடுத்தார், ஆனால் அதற்குள் வினோவை சமாதானம் செய்வது போதும் போதும் என்றாகிவிட்டது....

"வினோ புரிஞ்சிக்கோமா, நம்ம ராதிக்கு இவங்களால பிரச்சனைன்னா இந்நேரம் நானே விடாப்பிடியா கூட்டிட்டுபோயிருப்பேன், ஆனா இப்போ அவ உடலளவிலேயும், மனசளவுலயும் ஏதோ பிரச்சனைல இருக்கா....நம்ப பொண்ணு ராதிய உன்னால புரிஞ்சிக்க முடியலையா, இதுக்குமுன்னாடி நாம பார்த்த ராதி கண்ணுல நம்ம மேல இருந்த பாசம் தான் பார்த்திருக்கேன்....ஆனா இப்போ இருக்க இந்த ராதி கண்ணுல கண்ணன் மேல இருக்க ஆழமான காதல் தான் தெரியுது....அதுல எந்த பொய்யும், நடிப்பும் தெரியல...நம்ம ராதிக்கு என்ன நடக்குதுன்னு நிதானமா இருந்து தான் தெரிஞ்சிக்கணும், மறுபடியும் சண்டை போட்டுட்டு இங்க இருந்து போறதில்ல அர்த்தம் இல்லை, ராதி தப்பு பண்ணலன்னு தெரிஞ்சிடுச்சு, இனி அவ வாழ்க்கைக்கு என்ன சரியோ அதை தான் நாம யோசிக்கணும், இந்த விஷயத்துல நான் சொல்றதை நிதானமா கேளு வினோ..." என்று ராமநாதன் கெஞ்சி புரிய வைத்தபிறகு தான் வினோ சமாதானம் ஆனார்...

"நான் உங்ககிட்ட தனியா பேசணும், என்னோட வரிங்களா" என்று கண்ணனிடம் ராமநாதன் கேட்டதும் தான் தாமதம் கண்ணன் ராமநாதனை அழைத்துக்கொண்டு வெளியில் போனான்...

போய் ஒருமணி நேரம் பின்பு வந்த ராமநாதன் கண்ணனின் மாமனாராய் மாறி இருந்தார்...

"அப்போ சரி மாப்பிள்ளை நாங்க கிளம்பறோம்"

"அப்பா என்னப்பா இது, உங்க மருமகனோட மட்டும் தான் பேசுவீங்களா, என்கூடலாம் பேசமாட்டீங்களா, வந்ததும் கிளம்பறேன்னு சொல்றிங்களே, இங்கயே கொஞ்ச நாள் இருக்கலாமே, அப்பா என்கூடவே இருங்களேன்" என்று செல்லம் கொஞ்சிய ராதியை சமாதானம் செய்துவிட்டு மனோவை அழைத்துக்கொண்டு கிளம்பினார்...

அதற்க்கு மேல் ராதி அத்தனை பேருக்கும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாய் கொடுத்தாள்...

கண்ணனை விட்டு ஒருநிமிஷம் கூட பிரியாமல் அவன் பின்னாடியே சுத்தினாள், அவனுக்கு என்னவெல்லாம் வேண்டும் என்று பார்த்து பார்த்து செய்து கொடுத்தாள்...

"அத்தான் இப்டி கொஞ்சமா சாப்பிட்டா எப்படி வேலை பார்க்கமுடியும், நல்லா சாப்பிடுங்க அத்தான், உங்களுக்கு நான் மோர்க்குழம்பு எடுத்துட்டு வரேன், அதுக்குள்ள கைகழுவிடாதீங்க, ஒரே நிமிஷம் இதோ வந்துடறேன்"

இப்படி காதல் கசிய தன்னை சுற்றிக்கொண்டிருந்தவளின் காதலை உணரும்போதெல்லாம் கண்ணன் ஆகாயத்தில் பறப்பதை போல உணர்ந்தான்...ராதிக்கு திடீரென என்ன ஆயிற்று, ஒருவேளை இதுவும் நடிப்பாக இருந்துவிட்டால்...கண்ணனுக்கு திக் என்று இருந்தது, அவளின் காதலை உணர்ந்தவனால் அதை நடிப்பென்று யோசிக்க கூட மனம் வரவில்லை....
"ராதி நான் உங்கிட்ட பேசணும், மேல ரூம்க்கு வா" என்று கூறிவிட்டு கண்ணன் விறுவிறென்று செல்ல பின்னாடியே அவன் நிழலைப்பிடித்துக்கொண்டு ராதியும் சென்றாள்...

ராதி உள்ளே வந்த வேகத்தில் கண்ணன் கதவை பூட்டிவிட்டு ராதியை நெருங்கினான்...

"ராதி நீ நல்லா தானே இருக்க"

"என்ன அத்தான் இப்டி கேட்கறீங்க, உங்களோட இருக்கும்போது நான் நல்லாதானே இருப்பேன்"

"நீ என்கிட்ட விளையாடலையே"

"அத்தான் உங்ககிட்ட நான் என்ன விளையாடப்போறேன், நீங்க என்ன பேசறிங்கனே எனக்கு புரியல"

ராதி வார்த்தைக்கு வார்த்தை அத்தான் என்று கொஞ்சுவதை கண்ணனால் புரிந்துகொள்ளவே முடியவில்லை, இப்படி யாரும் இல்லாமல் தனிமையில் ராதி நடிக்க அவசியம் இல்லையே, இங்கு என்னதான் நடக்கிறது என்று மனதுக்குள் குழம்ப ஆரம்பித்தான்...

"என்ன அத்தான் யோசனை,இத கேட்க தான் இப்படி தனியா கூட்டிட்டு வந்திங்களா, சரி கீழ போகலாமா, கீழ நிறைய வேலை இருக்கு, வாங்க அத்தான்"

அதற்குமேலும் கண்ணனால் பொறுக்க முடியவில்லை...

மெதுவாக ராதியை நெருங்கினான், கதவை திறக்கப்போன ராதியை இழுத்து அணைத்துக்கொண்டான்...

"ராதி, நீ எவ்வளவு அழகு தெரியுமா, உன் ஸ்பரிசம் என்னை பைத்தியக்காரனாய் மாத்திருதுடி, இத்தனை நாள் என்னை தள்ளியே கிறங்கடிசிட்டே , இன்னைக்கு எனக்கு வேணுங்கறதை எடுத்துக்காம விடப்போறதில்ல" என்று மெல்லிய குரலில் காமத்தை குழைத்து பேசியவனின் கைகள் ராதியின் இடுப்பை வருடியது....

மெல்ல மெல்ல இருவரின் நெருக்கமும் காற்றிற்கு கூட இடைவெளிகொடுக்காமல் இறுக இதழ்கள் காமத்தின் முத்திரை ஆக துடித்தது.....

அத்தனை நெருக்கமும் இருவரின் மூச்சையும் ஹைபிட்சில் எடுத்துச்செல்ல சூடான மூச்சுக்காற்று இருவரையும் நனைத்துப்போட்டது....கண்களில் காதலின் முத்தம் வைத்தவன், கன்னங்களில் அன்பின் முத்தம் வைத்தவன், மூக்கில் செல்லமாய் குறும்பு முத்தம் வைத்தவன், காதில் கள்வனாய் இதழை ஒத்தி எடுத்தவன், இதழ்களுக்கு வரும் நேரத்தில் இதயம் தாறுமாறாய் துடித்தது....கண்ணனின் முத்தத்தில் கண்மூடி சுகந்திருந்தவள் அவன் மூச்சிற்குள் மௌனமாய் தூளிஆடிக்கொண்டிருந்தாள்...

இரு இதழ்களும் நெருங்கும் நேரம் கண்ணனின் மண்டைக்குள் பூதாகாரமாய் ஒரு மணி அடிக்க காமம் தெளிந்து கடமை உணர ராதியை விலக்கிவிட்டு ஆழ்மூச்சு வாங்கினான்....

கண்ணனின் நெருக்கம் தந்த இனிமையில் திளைத்திருந்த ராதியோ அவனின் விலகலில் ஏதும் அறியாமல் கொஞ்சம் ஏமாற்றத்தோடு மௌனமாக கண்ணனை பார்த்தபடி காம யுத்தத்தை கடந்தவளாய் இளைப்பாறினாள்...

"அத்தான் என்ன ஆச்சு, நான் எதாவது உங்களை ஹர்ட் பன்னிட்டேனா,திடிர்னு ஏன் விலகிபோய்ட்டீங்க" வார்த்தைகள் தடுமாறி ஏக்கத்தோடு விழ கண்ணன் ராதியை ஆழமாக பார்த்தான்...

"அதெல்லாம் ஒன்னும் இல்லை ராதி, கொஞ்சம் நெர்வஸ் ஆகிடுச்சு, நீ எனக்காக ஒரு காபி போட்டு எடுத்துட்டு வரியா, ப்ளீஸ்"

"உடனே கொண்டு வரேன் அத்தான், நீங்க ரெஸ்ட் எடுங்க, நான் வந்துடறேன்" என்று அமைதியாக போனவளை பார்த்தவனின் மனது கலவரமானது...

ச்சா...என்ன காரியம் பண்ணிட்டேன்....என் கட்டுப்பாட்டையே இழந்துட்டேனே, ராதியின் மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சிக்க நெருங்கினதையே மறந்துட்டு அவளை அடைய துடிச்ச என்னை என்ன செய்ய.....ராதி என்னை பத்தி என்ன நினைச்சிருப்பாளோ, ஏற்கனவே என்னை வெறுத்திட்டு இருக்கிறவளாச்சே....இதையும் தப்ப நினைச்சிட்டாள்னா....ஆனா ராதி நான் நெருங்கினதை விரும்பினாளே, என் நெருக்கம் அவளுக்கு பிடிச்சிருந்ததே, அப்போ அவள் நடிக்கலை, இதுல ஏதோ இருக்கு...ராதி அத்தான்னு கூப்பிடறதோ, என்னை சுத்தி சுத்தி வர்றதோ நடிப்பில்லை, அத்தை மாமாகிட்ட என்னை விரும்புறதா சொன்னதும் நடிப்பில்லை...அப்போ ராதி நடிக்கலைனா???

எழுதியவர் : ராணிகோவிந் (7-Jul-17, 1:42 pm)
பார்வை : 664

மேலே