நிழலாடும் நினைவு

பள்ளிமணி அடிக்கும்
மதிய உணவிற்காக
தூரத்து மாணவர்கள்
கையோடு கொணர்வர்
வீடு அருகில் உள்ளோர்
வீட்டில் உண்டு வருவர்
அப்பா அம்மா நாள் கூலிக்கு விறகுவெட்டிகள்
மதிய உணவு பழக்க மில்லை
சமையலோ ஒரே வேளை
அதிலேயே மிச்சப்படுத்தி
காலைக்காக வைப்பது
வழக்கம்
பிள்ளையை கண்டதும்
தூக்கிய கோடரியை கீழே
வைத்து
முந்தானை முடிச்சியை அவிழ்த்து அம்மா
இருபது பைசா தருவாள்
பதினைந்து பைசாவுக்கு பொட்டுக்கடலையும்
ஐந்து பைசாவுக்கு அச்சு வெல்லமும் தான்
மதிய உணவே எந்தனுக்கு
பத்தும் பத்தாததற்கு பச்சை
தண்ணீரை குடித்துவிட்டு
பள்ளிக்கு ஓடிய காலம் ஒரு
காலம் ஆனால் இன்றோ
மிதமிஞ்சிய உணவு அதை
குப்பையில் போடும்போது
மனம் சங்கடப்படும் போது பொட்டுக்கடலை அச்சு வெல்லத்தால் ஓடிய காலம் "நிழலாடும் நினைவு" களில்
•••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி
மும்பை
( நன்றி / தினமணி கவிதைமணியில் பிரசுரமான எம் கவிதை )