இரவும் பகலும் -- தரவு கொச்சகக் கலிப்பா - மரபு கவிதை
இரவும் பகலும் -- தரவு கொச்சகக் கலிப்பா - மரபு கவிதை
இரவுடனே பகல்தானும் இணைந்திடுமே காதலுடன் .
தரமாக புணர்வதினால் தக்கதொரு பேர்சொல்லும் !
விரல்விட்டு எண்ணிடலாம் விரைவாக காலத்தை .
சிரம்தாழ்த்தி வணங்கிடுவோம் சிறப்பான மாற்றத்தை !!
பகலவனைக் கண்டதுமே பாங்காக தாமரையும்
அகமகிழ்ந்தே இழழ்விரிக்கும் அற்புதமாம் பகலில்தான் .
முகமலரும் முல்லையுமே முத்தாக அந்திவேளை .
மகத்துவமாய் நிற்கின்ற மங்காத பொழுதுகளே !
தலைவனுடன் தலைவியுமே தன்னிலையை மறக்கின்ற
மலையோரம் வீசிடுமே மணம்வீசும் தென்றலுமே
கலைகளுமே பெருகிவிடும் காலையிலே கண்மயங்கி .
மலைமகளும் அருள்செய்வாள் மந்திரங்கள் பகலிரவில் !
பாரினிலே இரவும்தான் பந்தங்கள் இணைப்பாகும்
ஊரினிலே வேளாண்மை உணர்வாகும் பகலினிலே .
காரினிலே அறுவடையும் காலையிலே செய்திடுவார் .
சீரான வாழ்வுமங்கே சீர்பெறுமே காசினியில் !
ஒற்றுமையாய் இரவுபகல் ஒத்துழைப்புத் தருவதனால்
பெற்றிற்ற செல்வங்கள் பேருவகை தந்திடுமே !
கற்றிடுவோம் இயற்கையதன் கருவான மாற்றத்தை .
வெற்றிகளும் குவித்திடலாம் வென்றிடுவோம் பொழுதுகளை !!
அதிகாலைப் பொழுதுகளும் அந்திமாலைப் பொழுதுகளும்
விதியாக இறைமையுமே விந்தையாக வழங்கியது.
சதியாக நேரத்தை சமுதாயம் வீணாக்க
மதிக்கின்ற சான்றோனாய் மாறிடலும் இயன்றிடுமா !!!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
