கலகம் இல்லாத உலகம்

ஈரைந்து திங்கள் கருவினைச் சுமந்து
அன்னமும் நீரும் பாதியாய்க் குறைந்து
தன்னுயிரில் பூக்கும் இன்னொரு உயிருடன்
தனிமையில் உறவாடும் தாய்மையின் நொடிகள்......


மஞ்சம் இணைந்து மலரினை ஈன்றெடுக்கும்
மனைவிக்கு கணவன் தாயாய் மாறியும்
தூங்கும் நேரமும் தாங்கிப் பிடித்தும்
வாங்கும் வலிகளைப் பகிர்ந்திடும் நிமிடங்கள்......


வயிற்றில் குழவி எட்டி உதைக்கையில்
மொட்டு விரிக்கும் முல்லையின் மலர்ச்சியாய்
முட்டி முளைக்கும் மங்கையின் உணர்வுகள்
பதியிடம் சொல்லி மகிழும் நேரங்கள்......


மண்புதையும் விதையில் துளிர்க்கும் தளிராய்
மடியுதிர்ந்து மழலையும் வெளிவர மாதவளும்
மரணத்தின் வாசல் நெருங்கி திரும்ப
மன்னவனும் கனலை மிதிக்கும் தருணங்கள்......


மார்பில் தவழும் பால்மதியின் முகத்தில்
மதுவின் வாசத்தை தந்தை தொலைத்திட
வெண்நகை இல்லாது சிந்தும் புன்னகையில்
இருவரும் துன்பத்தை மறந்திடும் பொழுதுகள்......


இதயங்கள் பொழியும் அன்பின் மழையில்
இல்லம் முழுதும் இதமாய் நனைந்திடும்
இந்தக் காலங்கள் இன்னும் நீளாதோ?...
தேமதுரம் வாராதோ?... ஏங்கிடும் உயிர்கள்......

எழுதியவர் : இதயம் விஜய் (12-Jul-17, 1:15 pm)
பார்வை : 181

மேலே