பன்னிருசீர் விருத்தம் ---நிழல்களைத் தேடும் நிசங்கள்---
பன்னிருசீர் விருத்தம் :
கண்கவர் வண்ணக் கவின்றுகில் அணிந்து
***கனகம் ஒளியுமிழ்ந்து
***கழுத்தினிற் றவழுங் கனவினை நினைத்துக்
***காலம் இழந்திடுவோர்
மண்சுவர் நித்தம் மழையினில் நனைந்து
***மாறுஞ் சிறுதுகளாய்
***வாழ்வினிற் றுளிர்த்த வசந்தமும் உதிர்ந்த
***மாற்றம் அடைந்திடுவார்
தண்மலர் இதழிற் றாவிடும் வண்டாய்ச்
***சற்றும் உழைத்திடாது
***தரணியில் உயர்த்துந் தன்னிலை தாழ்ந்து
***சருகாய் உடைந்திடுவார்
வெண்சுடர் மனத்தால் வியனுல கெங்கும்
***வியர்வைத் துளியினிலே
***வீற்றிருந் திடுவான் விண்ணவன் உணர்ந்தால்
***விடியல் கிடைத்திடுமே......
கற்றதை மறந்து கன்றெனத் துள்ளுங்
***கந்தல் மனத்தவருங்
***கானலிற் பொழுதைக் களித்துலா வுகின்ற
***கடிவா ளமற்றவரும்
உற்றதை விடுத்தே வுயிரென நிழலை
***உளத்தால் மதித்திடுவார்
***உண்மையுந் தவிர்த்தே வுடன்வரும் நகலை
***உருவாய் விரும்பிடுவார்
சிற்றிளம் நெஞ்சிற் சிந்தனைப் பிறந்தாற்
***சிகரஞ் சிறுவிரற்றான்
***சிறுமையெ துவென்றுஞ் சிறப்பெது வென்றுந்
***திடமாய் அறிந்திடுவார்
நெற்றியிற் பொங்கும் நிம்மதி யுளத்தில்
***நிறைந்து வழிவதென
***நித்திரை நேரம் நீலவா னம்போல்
***நீளும் மகிழ்ச்சியுமே....
(விளம் மா விளம் மா மா காய் விளம் மா விளம் மா மா காய்)