கவிதை நிழலாடும் நினைவுகள்

நிழலாடும் நினைவுகள்...!
கவிதை by: பூ.சுப்ரமணியன்

எங்கள் வகுப்பில்
அடங்காத மாணவனையும்
அன்புடன் சிரித்துப்பேசி
பண்புடன் படிக்க வைக்கும்
கணேசமூர்த்தி வாத்தியார்.

காரணமே இல்லாமல்
பிரம்பால் அடிக்கும்
ராஜன்னா வாத்தியார்
பார்வையாலே பயமுறுத்தும்
பரசுராம் வாத்தியார் - மனதில்
நிழலாடும் நினைவு ஆசான்கள் !

எப்போதும் அடிக்காத
எங்கள் ராஜம்மாள் டீச்சர்
அடித்தே படிக்க வைக்கும்
அதட்டும் பாக்கியம் டீச்சர்
நிழலாடும் நினைவு மலர்கள் !

புதுவகுப்பில் வழங்கும்
புத்தம் புதிய புத்தகத்தை
மாணவ மாணவிகள்
மகிழ்வுடன் வாங்கி
முகர்ந்து பார்க்கும்போது
அந்தப் புத்தக புதுமணம்
எந்தநாளும் மறக்கமுடியாத
நிழலாடும் நினைவுப்பூக்கள் !

சிந்தனைகள் சிரிப்புகள்
காதல்கள் மோதல்கள்
உறவுகள் பிரிவுகள்
துடிப்புகள் நடிப்புகள்
படிப்புகள் படிப்பினைகள் !
எண்ணங்கள் நினைவுகள்
இன்பங்கள் துன்பங்கள்
இவையெல்லாம்
நம்மிடையே எப்போதும்
அள்ளக் அள்ளக் குறையாத
அட்சயப்பாத்திரம் - மனதில்
நிழலாடும் நினைவுப்பூக்கள் !

எழுதியவர் : பூ. சுப்ரமணியன் (12-Jul-17, 4:14 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 97

மேலே