வறுமை தேசத்தின் அக்னிக் குஞ்சுகள்

வறுமை தேசத்தின் அக்னிக் குஞ்சுகள்...!

பாவி எவனோ எச்சிலிட்டுத் துப்பிய வித்து
பாவை எவளோ பாதைதவறி ஈந்த முத்து
ஏமாற்றம் ஏளனம் ஏக்கங்கள் எம் சொத்து
ஏவலுக்காய் ஏழ்மை எங்களை தந்தது தத்து

ஏடுகள் தொடாத ஏகலைவன்கள்
ஏக்க மூச்சிடும் போன்சாய் கன்றுகள்
வறுமை தேசத்தின் அக்னிக் குஞ்சுகள்
வெறுமையில் முணங்கும் அந்தில் பூச்சிகள்

சட்டங்கள் சாதகமாய் சட்டப் புத்தகங்களில் இருந்தும்
சமூகம் எமக்குச் சூட்டிய பட்டம் குழந்தை தொழிலாளிகள்
விட்டங்கள் தாண்டி எம் எண்ணங்கள் பறந்தாலும்
சுட்டுப் பொசுக்கியது அதிகார முதலாளிகள்

கனவுகளை உளியுடன் கல்குவாரியில் உடைத்தோம்
கற்பனைகளை முறுக்குப்பையுடன் கடற்கரையில் தொலைத்தோம்
சொற்ப வரவுக்காய் எடுபிடிகளாய் ஆகிப்போனோம்
அர்ப்ப ஆசைகளால் சமூக விரோதிகளாய் மாறிப்போனோம்

கோவில் சிலைகளுக்கு உள்ளே பால்பழ அபிசேகம்
கோவணத்துடன் எமக்கோ வாசலில் பண்டார வேசம்
வாடிக்கையாய் வந்துபோகும் பல பகுத்தறிவுக் கூட்டம்
வேடிக்கையாய் கடந்து போகும் இவர்கள் எவருக்குமில்லை வெட்கம்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (18-Jul-17, 8:18 pm)
பார்வை : 77

மேலே