குபேரனின் கர்வம்

குபேரனின் கர்வம்

செல்வங்கள் அனைத்தும் அளவில்லாமல் பெற்றிருந்த குபேரனுக்குத் தன்னிடம் இருந்த செல்வங்களைப் பற்றி ஒரே பெருமை. இந்தப் பிரபஞ்சத்தில் தன்னைப் போல் செல்வச் செழிப்புள்ளவர்கள் யாரும் இல்லை என்ற கர்வம் தலை தூக்கியது. தன்னிடம் இருக்கும் செல்வங்கள் அனைத்தையும் இறைவன் சிவபெருமானை அழைத்து வந்து காட்டி, அதில் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும் என எண்ணினான் குபேரன்.

ஒருநாள் தன் எண்ணத்தைச் செயல்படுத்திட கைலாயத்துக்குச் சென்று சிவபெருமான், பார்வதி ஆகியோரை வணங்கினான். அவர்களைத் தன் இல்லத்திற்கு ஒரு முறை வந்து விருந்து சாப்பிட்டுச் செல்லும்படி அழைத்தான்.

குபேரனது உள் நோக்கத்தைப் புரிந்துகொண்ட சிவபெருமான், "என்னால் உடனடியாக அங்கு வர முடியாது; நீ வேண்டுமானால் என் மகன் கணபதியைத் தற்போது அழைத்துச் செல். அவனுக்கு விருந்தளித்துத் திருப்திபடுத்தி அனுப்பி வை. பின்னொரு நாளில் நானும் பார்வதியும் உன் இல்லத்திற்கு வந்து விருந்து சாப்பிடுகிறோம்" என்றார்.

குபேரனும் அதற்குச் சம்மதித்து சிவபெருமானிடம், “விநாயகருக்குத் தேவையான உணவளித்து அவரை மகிழ்ச்சிப்படுத்தி அனுப்புகிறேன்” என்று வாக்களித்து விநாயகரைத் தன் இல்லத்திற்கு அழைத்து வந்தான்.

விநாயகரைத் திருப்திப்படுத்தும்படியாகவும், குபேரனின் செல்வச் செழிப்பை அவர் அறிந்து கொள்ளும்படியாகவும் பல்வேறு வகையான உணவு வகைகள் ஆடம்பரமாகச் செய்யப்பட்டன.

விநாயகர் விருந்துண்ணுவதற்காக வந்து அமர்ந்தார். உணவு வகைகள் ஒவ்வொன்றாகப் பரிமாறப்பட்டன.

விநாயகரும் பரிமாறப்பட்ட உணவு ஒவ்வொன்றையும் விரும்பிச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தார். குபேரன் அவர் சாப்பிடுவதை ஆச்சரியத்துடனும், அச்சத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தான்.

குபேரன் அச்சத்தின்படியே, அவன் வீட்டில் தயார் செய்யப்பட்ட உணவு அனைத்தும் காலியாகி விட்டது. குபேரன் தன் வீட்டிற்கு அருகில் இருந்த அனைத்துக் கிராமங்களிலுமிருந்து உணவை வரவழைத்துக் கொடுத்தான். இருப்பினும் விநாயகரின் பசி அடங்கவில்லை. பசி அடங்காத விநாயகர் குபேரன் வீட்டிலிருந்த விலை மதிப்புமிக்க பொருட்களையெல்லாம் கடித்துச் சாப்பிடத் தொடங்கினார்.

இப்படியே போனால் வீட்டில் ஒன்றுமே மிஞ்சாது என்ற நிலை குபேரனுக்கு. விநாயகரைத் தடுக்க முயன்றான் குபேரன். அப்போது குபேரனிடம் விநாயகர்,"நீ என் பெற்றோரிடம் என் பசியாற விருந்தளிப்பதாக வாக்களித்திருக்கிறாய். இங்கோ உணவு தீர்ந்து விட்டது, ஆனால் என் பசி ஆறவில்லை. இனி சாப்பிட இங்கு ஒன்றுமே இல்லை. ஆகையால் என் பசிக்கு உன்னைக் கொன்று தின்னப் போகிறேன்" என்றார்.

இதைக் கேட்ட குபேரன், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் கைலாயத்திற்கு ஓடினான். சிவபெருமானிடம் தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினான்.

அப்போது சிவபெருமான் அவனிடம்,"உன்னிடமிருக்கும் தான் ஒருவனே மிகப்பெரும் செல்வந்தன் என்கிற கர்வத்தை விட்டுவிட்டு விநாயகனுக்கு ஒரு கைப்பிடி சாதம் கொடு, அவன் பசி அடங்கிவிடும்" என்றார்.

தன தவறை உணர்ந்த குபேரன் தன் கர்வத்தை விட்டுவிட்டு ஒரு பிடி சாதம் அளித்தான். அதைச் சாப்பிட்ட விநாயகரின் பசி அடங்கியது. குபேரனின் கர்வமும் காணாமல் போனது

எழுதியவர் : யாரோ (19-Jul-17, 11:09 pm)
சேர்த்தது : ஜெகன் ரா தி
பார்வை : 482

மேலே