நிஜத்துக்குள் நிச்சயம் ஒளிந்திருப்பேன்
நீ எத்தனை அவதாரம்
எடுத்தாலும்
உனக்குமுன் அங்கு
பூத்திருப்பேன்
நீ யாழாக மாறினால்
உன் தந்தியின் அதிர்வில்
ஒளிந்திருப்பேன்
நீ விசும்பாக மாறினால்
விரும்பும் மேகமாய்
பிறப்பெடுப்பேன்
நீ சாமியாய் இருந்தால்
உன்முன்
கற்பூரமாய் நின்று
கரைந்திருப்பேன்
எனக்குத் தெரியாமல்
நீ
எந்தப் பிரபஞ்சத்தில்
சென்று ஒளிந்துகொள்வாய்
கண்ணுக்குத் தெரியாமல்
கனவு காண முடியாது
உனக்குள் இருக்கும் என்னை நீ
ஒதுக்கிவைக்க முடியாது
நினைவின் முடிச்சுக்குள்
அவிழாமல் நானிருப்பேன்
நிஜத்துக்குள் நிஜமாக
நிச்சயம் ஒளிந்திருப்பேன்
#இளவெண்மணியன்