உயிரைத் தின்னும் காதல் தீ
பார்வை மின்னல்
மூட்டிவிட்டுப் போகிறது
காதல் தீயை
அது என் உயிரைத்
தின்று தீர்க்கிறது
நீ தந்த இரவல் மூச்சில்
உயிர்வாழும் என்னை
இன்னும்
என்பெயரிட்டே
அழைக்கிறார்கள்
மனதின் விளிம்புவரை
நிரம்பியிருக்கும் உன்னை
பருகிக்கொண்டேயிருக்கிறேன்
தீரவில்லை நீ
விதைநெல் கூடையின் மீது வைத்த
இயந்திரக் கல்லாய் அழுத்தி
என்னை முளைக்கவைக்கிறாய்
நான்
விரும்பும் சுமை நீயல்லவா ?
வார்த்தைகளின் ஊற்று
உன்னிலிருந்து தொடங்குகிறது
என் கவிமூலம்
நீயாகிறாய்
எனக்காய் பிறப்பெடுத்த
தேன்கடல் நீ
உனக்குள் மூழ்கிப் போகும்
வரம் தரமாட்டாயா
எப்போது வருவாய் என்று
இதயம் கேட்டாலும்
உனக்காக
கண்சிமிட்டாத விண்மீனாய் காத்திருப்பேன்
யுகம் யுகமாக !