உம்மை நான் காண்கிறேன் அனைத்திலும்

உமது உடலை பரந்துவிரிந்த பிரபஞ்சமாக்கி,
உமது ஊனால் யாவற்றையும் படைத்து,
உமது செயலே அனைத்தின் இயக்கமாக்கி,
உண்மையாய் ஒப்பில்லா வடிவாய் எங்கும் தென்படுகின்றீரே அருட்பெருஞ்சோதியாய்...

உம்மில் வாழும் உயிர்க்கெல்லாம் பசியாற்றும்
உணவாய் உமது சதையைத் தந்து,
தாகம் தீர்க்கும் நீராய் உமது இரத்தத்தையும் தந்து,
உம்மில் கருவாகிய உயிர்களுக்குள் கருவாகி,
என்றும் மறுப்பில்லா சத்தியமாய் எதிலும் தென்படுகின்றீரே அருட்பெருஞ்சோதியாய்...

உம்மில் அங்கமாகிய இந்த மனிதர்கள் உம்மை உணராது,
உம்மை உறிஞ்சி,
உம்மைப் புசித்து,
உம்மைக் கொள்ளையிட்டு
எல்லாம் தமக்கென்று ஆடம்பர வாழ்வைத் தேடுகின்றனரே அறியாமையில் மூழ்கி தானென்ற அகந்தை கொண்டு...

உம்மிலே நன்மை, தீமையென்று பிரித்து வைத்து,
நன்மையாகிய உம்மை ஆனந்தமாக வாழ்வித்து,
தீமையாகிய உம்மை நீரே தண்டித்து,
நீதி வழங்கும் ஞானவடிவாகிய அருட்பெருஞ்சோதியே உம்மை நான் காண்கிறேன் அனைத்திலும்...

அனைத்தும் நீரென்று உணர்ந்த நான் உமக்கென்றும் தீமைசெய்யேன்...
நான் பெற்ற ஆனந்தத்தை இவ்வையகமும் பெற
உம்மை உண்டு,
உம்மை அருந்தி,
உம்மிலொரு அங்கமாகிய நானென்றும் உம்மைப் பாடியே என்பணி செய்திடுவேன் உத்தமமாய்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (24-Jul-17, 7:56 pm)
பார்வை : 541

மேலே