ரகசியங்களோடு ஒரு தூக்கம்

பெட்டிக்குள் பூட்டிவைத்த
வெடிகுண்டைப்போல்
நெஞ்சுக்குள் உறங்குகின்றன
சில ரகசியங்கள்

வெப்பமோ அழுத்தமோ
அதிகரித்துவிட்டால்
விபரீதம் நிகழ்ந்துவிடலாம்
வெளியில் தெரியாமல்
காக்கும் அவஸ்தையில்
நரகம் உணரலாம்

தூக்கத்தில் உளறாமலிருக்க
கனவுக்குள்ளும் அலையவேண்டும்
ஒரு கடிவாளத்தோடு

ரகசியங்களோடு அடிக்கடி
பேசாமல் இருப்பது நல்லது
தப்பித்துவிடும்
ஏமாறும் ஒரு
பலவீன நொடியில்

ரகசியமே இல்லாதவர்களும்
விளைவைப்பற்றி
அலட்டிக்கொள்ளாதவர்களும்
இமைகளை மூடலாம்
ஒரு நிம்மதியான இரவு
காத்துக்கொண்டிருக்கிறது !

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (26-Jul-17, 10:00 am)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 105

மேலே